Thursday, 11 February 2016

பாவத்தின் சம்பளம் திருமணம் !

கோப்ரா


வனுக்குத் தன்  பெயர் நன்றாகவே நினைவில் இருந்தது. தான் சம்பந்தப்பட்ட அத்தனையுமே அவன் நினைவிலிருந்தது. அவனால் எதையுமே மறக்க; மறைக்க முடியவில்லை. தான் தான் 'நான்' என்ற பிரக்ஞை வந்ததிலிருந்து, அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. அவன் அவனாக இல்லாமல், கொஞ்சம் கொஞ்சமாக 'அது'வாகிக் கொண்டிருந்தான். 'அது'வாகும் அந்நேரங்களில் நடக்கத் தொடங்கி விடுவான். நடக்கிறான்... நடக்கிறது... பார்க்கிறான்... பார்க்கிறது...
            'அது' நடந்து கொண்டிருந்தது. சுற்றிலும் வேடிக்கை பார்த்துக் கொண்டே. நிறுத்தத்தில் பேருந்து ஒன்று வந்து நிற்கவும், ஐந்து வினாடிகளே... சட்டென்று, அதுவும் ஏறிக்கொண்டது. பல இருக்கைகள் காலியாக இருந்தன. பெரிய, தீவிர யோசனைக்குப் பின், மூன்றாவது இருக்கையைத் தேர்வு செய்து அமர்ந்தது. சிறிது நேரத்தில் பக்கத்து இருக்கையும் நிரம்பியது. அதுவாகிக் கொண்டிருந்த அவன், அருகில் பார்த்தான். அருகிலிருந்தவனும் இவனைப் பார்த்தான். இவன் அவனைப் பார்த்ததுமே; அவன் இவனைப் பார்த்ததுமே புரிந்து கொண்டார்கள்... அவன் அவளாகிக் கொண்டிருப்பதை இவனும்; இவன் அதுவாகிக் கொண்டிருப்பதை அவனும்
          பின் அந்தி நேரம். "எங்கே போகிறாய்?" இது அவளானவன். "தெரியவில்லை. நீ?" இது அதுவானவன். "அதே தான்" என்றான் அவளானவன். அடுத்த நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டார்கள். நடந்து கொண்டே... பேசிக் கொண்டே.. அவளானவன், உடலில் ஏற்பட்ட வேதியியல் மாற்றங்களைச் சொன்னான். அதுவானவன், மனதில் ஏற்பட்ட இரசாயன மாற்றங்களைச் சொன்னான்.அவளானவனும், அதுவானவனும் பழைய நட்பைப் பேசி, சிலாகித்தார்கள். அவனவனாகவே இருந்த காலத்தை நினைத்துப் புளகாங்கிதம் அடைந்தார்கள். அவளானவன், தான் பெற்ற அதிர்ச்சிகளை; அடைந்த அவமானங்களை; தன் மனக்கிலேசங்களை; தன்னை மீறிய தன உணர்வுகளைக் கொட்டித் தீர்த்தான். அதுவானவன் இறுக்கமாகவே நடந்தான். தியேட்டரைக் கண்டதும்... தியேட்டருக்கு அழைத்தான் அவளானவன். மறுப்பு சொல்லவில்லை. அவளானவன் அவளாக; அதுவானவன் அவனாக உள்நுழைந்தார்கள்.
          இரவுக் காட்சி என்பதால் கூட்டம் இல்லை. இருவரும் பக்கத்துப் பக்கத்து  இருக்கையில். இருக்கையில், அவள் தவிப்புடனிருந்தாள். அவன் கல்லாக  இருந்தான். வேண்டுமென்றே அவன் மீது உரசினாள். அவனுக்குப் பயமாயிற்று. ஒன்றுமில்லாத காட்சிகெல்லாம், அவன் மேல் விழுந்து, விழுந்து சிரித்தாள். படம் பார்த்தாள்; படம் காட்டினாள். அவன் தோள் மீது சாய்ந்தாள். தன்னைக் குறிவைத்து விட்டாள்  என்பதை உணர்ந்து கொண்டான். அவனால் எதுவும் சொல்ல முடியவில்லை. தன்  நண்பனல்லவா ! என்றிருந்தான். இப்பொழுது, அவன் தவிப்புடனிருந்தான். படம் முடிந்தது. வெளியே வந்தார்கள். வீட்டிற்கு அழைத்தாள். வீடு வரை அவனை உரசியபடியே நடந்தாள். அவன் ஒருவிதமான நடுக்கத்துடனேயே வந்தான். சாப்பிட்டார்கள். உறங்கச் சென்றார்கள். இருவரும் ஆளுக்கொரு கட்டிலில்
           அவனுக்குத் தூக்கமே வரவில்லை. இரவு விளக்கு மட்டும் மங்கிக் கொண்டிருந்தது. அவன் சுவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். சுவரில் பல்லி ஒன்று ஊர்ந்தது. பகலில், சில சமிக்ஞைகளை உணர்ந்தால் மட்டுமே, அவ்வப்போது எட்டிப்பார்க்கும் பல்லி, இரவில் அகோரப் பசியுடன் அலையத் தொடங்கும். அவன் பல்லியையே பார்த்துக் கொண்டிருந்தான்
         பல்லிகள் மிக அழகானவை. அவற்றின் கண்களில் எப்பொழுதுமே ஒருவித ஏக்கம்... இரை  பிடிக்கும் அழகே தனி. மெதுவாக ஊர்ந்து வந்து, திடீரென்று வேகமெடுத்து, நாக்கை நீட்டி, ஒரு சுழற்று சுழற்றி, ஒரே வாயில் பூச்சிகளை விழுங்கிவிடும் கலையே தனிக்கலை. கழுத்துப் பகுதியெல்லாம் வெள்ளை வெளேரென்று மிகவும் மென்மையாக. முதுகுப் பக்கம் தடிமனாக, சொரசொரவென்று அழகாக. வெவ்வேறு நிறங்களில்... பழுப்பு நிறத்தில், கரும்பழுப்பு நிறத்தில், கருப்பு நிறத்தில்... வெள்ளைப் புள்ளிகளுடன். முகத்தைப் பார்க்க, சில சமயங்களில்... தவளையின் முகம் போல அல்லது, பாம்பினுடைய தூரத்துச் சொந்தம் போல அல்லது, முதலையின் ஒன்றுவிட்ட சித்தப்பா பையன்/பொண்ணு போல தனி அழகு. அவன் பல்லியையே பார்த்துக் கொண்டிருந்தான்.
        சமிக்ஞைகளை உணர்ந்தான். அவனுக்குள் ஏதோ, இனம்புரியாத உணர்வு... உடல் கொதித்தது. அவன் கண்கள், மூக்கு, வாய்  வழியாகப் பல்லிகள் திமுதிமுவென்று வெளியே குதித்தன. பல்லிகள் அறை  முழுவதும் நிரம்பின; பல்லிகள் ஒன்றோடொன்று மோதின; சண்டையிட்டன; கடித்துக் குதறின; ஒன்றின் மேலொன்று உருண்டன; புரண்டன. அத்தனையும் ஏதோ வெறி பிடித்தது போல... அங்குமிங்கும். அவள் பல்லிகளுக்காகக்  காத்திருந்தாள். பல்லிகள், ஊர்ந்து, ஊர்ந்து அவளை மொய்த்தன. அவள் கண்கள், மூக்கு, வாய் வழியாக உள்ளே குதித்தன; நிரம்பின. சில பல்லிகள்  அசுர வேகத்தில் அவளைக் கடித்தன; தின்றன. ஒவ்வொன்றின் வாயிலும் இரத்தம் வடிகிறது. அறை  முழுவதும் சப்தம்... முனகல், வேதனை. ஒரு பல்லியைப்  பிடித்து, முகத்தருகே வைத்து ரசித்தான்.
        பல்லி, அவன் முகத்தை நாக்கால் நக்கியது. வெடுக்கென்று பல்லியை  விழுங்கினான். அவ்வளவுதான்.... அத்தனை பல்லிகளும்  சரசரவென்று அவனுக்குள் புகுந்து மறைந்தன. அறை  முழுவதும் நிசப்தம்; அமைதி. இருவரும் ஆளுக்கொரு கட்டிலில். ஆனால், மிகுந்த களைப்புடன்.
       சட்டென்று, அவள் நெளிய ஆரம்பிக்கிறாள். அவள் வாயிலிருந்து, ஒரு குட்டிப்  பல்லி வெளியே குதிக்கிறது. அவள் (அவளானவன்) அந்தப் பல்லிக் குட்டியை, அவனருகே கிடத்திவிட்டு வெளியேறுகிறாள். காலையில்... அவளானவனைக் காணாது திகைக்கிறான். குட்டிப் பல்லியைப் பார்த்தவுடன், அதிர்ச்சியில் அப்படியே நிற்கிறான். பிறகு, குட்டிப் பல்லியை  அன்போடு அரவணைத்துக் கொள்கிறான். 
      அந்தப் பல்லிக் குட்டியைக் கண்ணும் கருத்துமாக வளர்க்கிறான். அவனும், அந்தப் பல்லியும்  மட்டுமே, அந்த வீட்டில் இருக்கிறார்கள். அவன் பணிக்குச் சென்றுவிட்டு, மாலை வரும்பொழுது, அவன் காலடிச் சத்தம் கேட்டவுடனேயே, அந்தப் பல்லி, வாசலுக்கு ஓடி வரும். அவன் காலைச் சுற்றும் விறுவிறுவென்று... அவன் தோளில் ஏறி உட்கார்ந்து கொள்ளும். அதனுடன் பேசிக் கொண்டே சமையல் வேலைகளைச் செய்வான். அதற்குப் புரியாவிட்டாலும், அது கேட்டுக் கொண்டிருக்கும். காலையும், மாலையும் பல்லியின் கழுத்தில் கயிற்றைக் கட்டி, நடைபயணம் அழைத்துச் செல்வான். பல்லி அப்பொழுதுதான் கடன்களை முடிக்கும். எதிரில் பெண்கள் யாராவது வந்தால், பல்லி  அவர்கள் மேல் பாயத் தொடங்கும். அவன் கயிற்றை இழுத்துப் பிடிப்பான். அது திமிறும். பெரிய போராட்டத்திற்குப் பின், அவனே ஜெயிப்பான். பெயர்கூட வைத்தாயிற்று 'கோப்ரா'. வீட்டிற்குப் புதிதாக யாரேனும் வந்தால், வாசலுக்கு நேர் மேலே ஏறி, அவர்கள் உச்சந்தலையில் விழுந்து பயமுறுத்தும். அப்பொழுதெல்லாம் அவன், 'கோப்ரா' என்று அதட்டுவான். சில நேரங்களில், என் கண்ணு, என் செல்லம், என் கன்னுக்குட்டி, என் ராஜா.... சிங்கம், அனகோண்டா, கோப்ரா என்று கொஞ்சத் தொடங்கி விடுவான்.  பல்லியோடு வாழ்ந்து, வாழ்ந்து பல்லியாகவே மாறிக் கொண்டிருந்தான்.
         உலகமே அவனுக்குப் பல்லியாகத் தெரிந்தது. மரம், மரத்தின் கிளைகள், இலைகள் எல்லாம். ஆறு முழுவதும் பல்லி ஓடிக் கொண்டிருந்தது. அவன் உடலே பல்லியாகியிருந்தது. கைகள் பெரிய பல்லியாக, விரல்கள் எல்லாம் குட்டிப் பல்லியாக. வாய்க்குள் பெரிய பல்லியாக. முகத்திலிருந்து அங்கங்கே பல்லிகள் தொங்கிக் கொண்டிருந்தன. கல்லூரிக்கு வந்தான். அநேகம் பேர் முகத்தில் பல்லிகளை நீக்கியிருந்தார்கள். புதிய உத்தரவுப்படி, சிலர் கழுத்தில் பல்லி ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. ஏராளமான பல்லிகள், ஒவ்வொரு வகுப்பிலும். எங்கும் பல்லிகள்... எல்லாம் பல்லிமயம். 
       சட்டைப் பையிலிருந்து பல்லியை எடுத்தான். வருகைப் பதிவேட்டில், அவன் உயிரோடு இருப்பதற்கான அடையாளம் இட்டான். அவனுக்கு முன்னமே, நிறைய பல்லிகள் உயிரோடிருந்தன. பெரிய பல்லிகள் குழுக்குழுவாக வெவ்வேறு நிறங்களில்... பழுப்பு நிறத்தில், கரும்பழுப்பு நிறத்தில், கருப்பு நிறத்தில்... வெள்ளைப் புள்ளிகளுடன். முகத்தைப் பார்க்க, சில சமயங்களில்... தவளையின் முகம் போல அல்லது, பாம்பினுடைய தூரத்துச் சொந்தம் போல அல்லது, முதலையின் ஒன்றுவிட்ட சித்தப்பா பையன்/பொண்ணு போல. சில பல்லிகள் 'வணக்கம்' கூறின. சில பல்லிகள் பார்க்காமலேயே சென்றன. சில பல்லிகள் அவன் பார்த்து, வணக்கம் சொல்லட்டுமென்று தலையைத் திருப்பியிருந்தன. 
    அவன் பல்லிளித்தான். எல்லாப் பல்லிகளுமே பதிலுக்குப் பல்லிளித்தன. எல்லோருக்குள்ளும் பல்லி இருந்தது; இருக்கின்றது. எல்லோர் முகத்திலும் பல்லிளிப்பு, பல்லிளிப்பு, ஒரே பல்லிளிப்பு... அவன் அதுவாகிக் கொண்டிருந்தான். அதுவாகிவிட்டான்.
                                 ***