Tuesday, 10 January 2017

என் பக்கத்து வீடு காலியாக இருக்கிறது

என் பக்கத்து வீடு
காலியாக இருக்கிறது.
என் அருகிருக்கையும்
பின்னிருக்கையும்
காலியாக இருக்கவே
விரும்புகிறேன்.
யாரைப் பார்க்கினும்
நிரப்பிக் கொள்வார்
என்றே சந்தேகிக்கிறேன்.
சந்திப்புகளை
பேச்சை
வெட்டிச் செல்கிறேன்.
தவிர்க்க முடியாமல்
சில சொற்களும்
சில இடங்களும்
என்னிடம் இருக்கின்றன.
அதையே திருப்பித் திருப்பிச்
சொல்லுகிறேன்
அங்கேயே திரும்பத் திரும்பச்
செல்லுகிறேன்.
என் பக்கத்து வீடும்
காலியாகத்தானிருக்கிறது.
அது ஒரு வரம்.
அது ஒரு சந்தோஷம்!

பெண் பார்த்த படலம்

வெகுதூர 
வேறு திசைப் பயணங்களில் 
ஒவ்வொரு ஊரைக் கடக்கும்போதும் 
அந்த ஊரில் 
'பெண் பார்த்த படலம்' ஞாபகம் !
முகம் மட்டும் மனதில்.

அம்மாவைக் கேட்டால் 
அத்தனையும் சொல்வார் 
பெயர் உட்பட 
இத்யாதி இத்யாதி...

தவிர்க்க முடியாமல் 
இப்போது 
அந்தப் பெண்களிடம் 
அன்பும் பரிவும்!

ஒருமுறை காண 
ஏங்குகிறது மனம் !

Monday, 9 January 2017

குழந்தையைக் காணவில்லை

குழந்தையைக் காணவில்லை
பதைத்தெழுந்து விழித்தால்...
கனவில்!
தொலைத்தது கோயிலில் என்றால்
நிம்மதி! 
நினைவில்!
கொத்தும் கோழிகளைக் கண்டு பயம்
ஒரு வயதில்.
இப்போது இல்லை!
நாய்களைக் கண்டு பயம்
சிறு வயதில்.
இப்போது இல்லை!
பாம்பைக் கண்டாலே பயம்
காளை வயதில்.
இப்போது இல்லை!
மனிதர்களைக் கண்டதும்
இப்போது பயம்.
பேசவும் பேசாமலிருக்கவும்
சிரிக்கவும் சிரிக்காமலிருக்கவும்
பார்க்கவும் விலகவும்!
எப்போது தீருமோ ?
இப்போதெல்லாம்
அம்மா எழுந்திருக்கும் முன்பே
அதிகாலை
எழுந்துவிடுகிறேன்
ஏனெனில்
வெட்கமாயிருக்கிறது !!!

Friday, 6 January 2017

அணில்களாடு பின்றில்

அணில்களாடு பின்றில்.

என்னரவம் கேட்டால்
ஒவ்வொருமுறையும்
பயந்து
தென்னையேறி
என்னுருவம் பார்க்கும். 

அணில்களைத் தொந்தரவிக்க
விரும்பவில்லை.

அவை நடமாடட்டும்!

என்னரவம் நிறுத்தி
பின்றில் கதவை
சாத்தியே வைப்பேன்.

அணில்கள் அணில்களாக மட்டுமே
இருக்கும் வரை.