Tuesday, 27 November 2018

அந்த மரத்தில்
இரண்டு கிளிகள்
பச்சைக் கிளி பேசாமடம்
பஞ்சவர்ணக் கிளி பாராமுகம்

கனிகளைச் சுவைத்தபோது
பச்சை பஞ்சவர்ணமாயிற்று
பஞ்சவர்ணம் மரங்கொத்தியாயிற்று.

கிளிகள் சிறகூன்றி நிற்க
மரம் கிளைவிரித்து
அந்தரத்தில் பறந்தது.
வேறெங்கோ வேரெங்கோ விடும்.

அதிகாலையிலோ
ஆதி யாமத்திலோ
இப்போதந்தக் கிளிகள்
என்ன பேசிக் கொள்ளும்?

மாறா வசனம்
கீ.. கீ.. என்றா ?

இனி எக்காலத்தும்
கிளிபரப்பி நிற்கும்
மரம்.
இந்தக் குழந்தையோடுதான்
இப்பொழுது பொழுது.
என்ன. ... 60 வயதுக் குழந்தை.
இந்தக் குழந்தையின் சிடுசிடுப்பை 
ரசிக்கிறேன்
ஏச்சு பேச்சுக்களை
பாடலாய் வரிக்கிறேன்.

குழம்பு நல்லாவே இல்ல என்று
சும்மா உசுப்பேற்றி...

ஒரு டீ கிடையாதா என்று
டீயாய்க் கேட்டு...

சரி சரி வெந்நீராவது...
ரெண்டும் ஒண்ணுதானே என்று
கடுப்பேற்றி...

குழந்தையின் ஆட்டத்தை
ரசிக்கிறேன்
உள்ளூரப் பெருஞ்சிரிப்போடு...

தாய்க்குழவியின் வாய்ச்சொல் இனிது
தளர்நடைக்குத் தோள்தருதல் இனிது
அருகினிது.

என் இதயத் துடிப்பின்
கடிவாளம்
இந்தக் குழந்தையின் கண்களில்தான்
இருக்கிறது.
அந்தப் பூ
நாறத் தொடங்கிவிட்டது.
அந்த வீச்சம்
இங்கு வரை அடிக்கிறது.

அந்த இதயத்தில்
புழுக்கள் நெளியத் தொடங்கிவிட்டன.
இரத்தம் குடித்த
அதிலொன்று
மேலேறி
கண்பீளை வாசல் வெளியேறி
கன்னத்தில் இறங்கி
மெத்தென்று
கீழே விழுகிறது.

விழுந்த புழுவோடு
இனி
கபடி ஆட வேண்டியதுதான்.

பூவை முகர்ந்ததில்
புழுவின் வாசம்.
அந்த மரத்தை
யாராவது வெட்டி வீழ்த்திவிட மாட்டார்களா?
அந்த மரத்தின்மீது
யாராவது மோதிச் சாய்த்துவிட மாட்டார்களா?
அந்தப் பனங்காய் 
கீழே உருண்டு ஓடாதா?
காரங்காட்டில்
ஒற்றையாய்
பேயேறி நின்று...
இரவின் சூன்யத்தில்
அந்த ஓலையின் சலசலப்பு
இன்னும் எத்தனைபேரை காவு வாங்கும்!
என்னையும் சேர்த்து.
பெருமழை பொழிகிறது
கரைந்து விடுவேனோ என்று
பயம் கொள்கிறேன்.
இறுக இறுக.
ஏன் தேநீர் அருந்தவில்லை ?
புளித்துவிட்டது.

சர்தார்

"சர்தார்" பார்க்க நேர்ந்தது. தற்செயலாகத்தான். இன்று பொதிகை தொலைக்காட்சியில். சுமார் 3 மணி நேரம் இடத்தைவிட்டு அசையவில்லை. கண்களைத் திருப்பவில்லை. (5 மணிக்கு 5 நிமிட செய்திக் குறுக்கீடு மட்டும்). சுதந்திரப் போராட்ட காலகட்டத்தை அப்படியே காட்சிப்படுத்துகிற சினிமா. சர்தார் வல்லபாய் படேல் என்கிற மகா மனிதரை வெளிக்கொண்டு வருகிற சினிமா. சுதந்திரத்திற்கு முந்தைய 6 மாதங்கள்.... பரபரப்பின். .. பதற்றத்தின் உச்சகட்டம்.
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை, பங்களாதேஷ் பிரிவினை, இந்து-முஸ்லிம் கலவரம், சீக்கியர்-முஸ்லிம் கலவரம், காஷ்மீர் பிரச்சினை, ஹைதராபாத் சமஸ்தானம் பிரச்சினை, ஜூனாகாத் பிரச்சனை.... இவற்றில் சர்தாரின் செயல்பாடுகள். .. அமர்க்களம்!!
காந்தி - சர்தார் - ஜவஹர்லால் நிலைப்பாடுகள், சுதந்திர இந்தியாவுக்கான முயற்சிகளில் அவரவர் (காந்தி, நேரு, சர்தார்) செய்த தவறுகள் என்று அப்பட்டமாக எடுக்கப்பட்டிருக்கிறது.
சர்தார் × ஜின்னா, சர்தார் × ஜவஹர்லால் முரண்பாடுகளின் விளைவுகள்; அதற்கான காரணங்கள்.... உண்மையில் மிக முக்கியமான படம்.
படம் முடியும்போது... ஏற்படுகிற ... நிம்மதி, பரவசம், வெளிச்சம், கோபம், மனிதர்கள் மீது ஏற்படுகிற அவலம் என்று கிடைக்கிற கலவையான உணர்வு.
இந்தியா = சர்தார்.
இதனை உருவாக்கிய இயக்குநர், நடிகர்கள், படக்குழுவினர் அத்தனை பேருக்கும் நன்றி. மிக்க மகிழ்ச்சி.

வண்ணதாசன் சார் சிறப்புரை : Sep. 25, 2018

வண்ணதாசன் சார் சிறப்புரை Sep. 25, 2018: நேற்றைய பொழுது இனிமையாக இருந்தது. எங்கள் கல்லூரியில் வண்ணதாசன் சார் சிறப்புரை. ரசனையான, கவித்துவமான உரை. சாரின் உரை... Composed music போல... அது ஒரு சிறு இசை அல்ல... பெரும் நாதம்! கவிஞனின் ஆழ்மனதின் நாதம்... ஒரு மணி நேரப் பேச்சும் மாணவ, மாணவிகளைக் கட்டிப் போட்டிருந்தது. குழந்தைகள் கவிதைகளில் சொக்கிப் போயிருந்தார்கள். எனக்கு... தியானம் செய்து முடித்ததைப் போல இருந்தது. அவ்வளவு நேர்த்தியான உரை. தெளிவான, நிதானமான உரை. ஒவ்வொரு துளியாகச் சிந்தி... பெருமழையாவது போல.... சுழித்தோடும் நதியாவது போல... ஒவ்வொரு சொல்லாகக் கோர்த்து... கவிமழையாகப் பொழிந்தது, சாரின் உரை.
எப்படி எழுத வேண்டும் என்பதை ஏற்கனவே கற்றுத் தந்திருக்கிறார்.
எப்படிப் பேச வேண்டும் என்பதை... நேற்றைய உரையின் மூலம் கற்றுத் தந்தார்.
உங்களில் எத்தனை பேர் .. நேற்றோ... முன்தினமோ.. அல்லது மூன்றாம் நாளோ. .. நிலவைப் பார்த்தீர்கள்? என்று கேட்டார். எங்கள் கல்லூரி மாணவர்களின் கவிதைத் தொகுப்பிலிருந்து சில நல்ல கவிதைகளை; இளம் கவிஞர்களைப் பாராட்டினார். அவர்களின் பெயரைச் சொல்லி; அவர்களின் கவிதைகளைச் சொல்லி...மகிழ்ந்தார். ராபியா, விஸ்வநாத பிரதாப்சிங், பாலசுப்பிரமணியன், நஸரீன்.. இன்னும் சில பெயர்கள்.
அவர்கள் அத்தனை பேரும் நேற்று நிலவாக இருந்திருப்பார்கள்.
வண்ணதாசன் சாரின் குரல் வழியாக உச்சரிக்கப்பட்ட... அந்த இளம் கவிஞர்கள் உண்மையில் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். நேற்று அவர்கள்... பெற்றோரிடம், நண்பர்களிடம், சொந்தங்களிடம்... குறைந்தது 100 பேரிடமாவது அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்திருப்பார்கள்.
வண்ணதாசன் சாரின் பேச்சு ஒலிப்பதிவும் ஒளிப்பதிவுமானது. அது எக்காலத்திற்கும் அலை வெளியில் பரவி நிற்கும்.
வண்ணதாசன் சாரின் அருகிருந்து பேசத் தயங்கும்; கூச்சப்படும் என்னைப் போன்றவர்களுக்கு.. சாரின் இதைப் போன்ற உரைகள் பெருமகிழ்வைத் தரும். தந்தது.
மகிழ்ச்சி.