Sunday, 6 January 2019

உங்கள் கைகள்

உங்கள் கைகள்
எவ்வளவு பாரபட்சமானவை என்று
உங்களுக்குத் தெரிகிறதா!

உங்கள் நாவு
எத்தனை நெளிவு சுளிவுகள்
கொண்டதென்று
உங்களுக்குத் தெரியுமா !

உங்கள் கண்களில்
ஒரு கண் மூடியே இருப்பதை
நீங்கள் அறிவீர்களா!

உங்கள் கால்கள்
சில வீடுகளைப்
பார்த்தும் பாராது
நழுவிச் செல்வதை
நீங்கள் அறிவீர்களா!

நாங்கள் அறிவோம்.

இந்த முறையும் சிட்டுக்குருவி

இந்த முறையும்
சிட்டுக்குருவி
எனக்குள் கூடு கட்டியிருக்கிறது.

மின்விசிறியில் தொங்கிய அக்குருவி
டப்பென்று அறுந்து
தொப்பென்று
என் மார்பிலேயே விழுந்தது.

உள்ளங்களில் வழுக்கிய அக்குருவியை
உள்ளங்கையில் எடுத்தேன்
சித்தார்த்தனின் அன்னப் பறவை போல.
கைக்குள் உயிர்ப்பு அசைவு
இதயத்துள் தாறுமாறாக.

மூன்றாம் நாள்
உயிர்த்தெழுதல் நிகழும்.
காத்திருக்கிறேன்
சிட்டுக்குருவிக்காக
அது இட்டுச்சென்ற
முட்டைகளோடு.

முட்டைகளும் காத்திருக்கின்றன
சோணையில்.
சிட்டுக்குருவி
முட்டை
நான்
எழுப்பும் ஒலிகள் யாருக்குக் கேட்கும்?

நாகமணி

சொஸ்வத வனத்தில்
சுற்றித் திரியும்
நாகங்களிலொன்று
அதன் மாணிக்கக் கல்லை
நாகமணியை
எப்போது கக்கும்?

வெறும்
மின்மினிப் பூச்சிகளுக்காகவா?
யானையை விழுங்கிய நாளிலா?

இந்தக் காண்டீப மயக்கத்தை
நீக்குவாளா
உலுப்பி.

இச்சாதாரியிடம்
நாகமணியைத் தரும்போது
கிளைத்த
இரு சிறகுகளையும் விரித்து
நாகம் பறக்கும்
கருந்தவளைகளைக் கவ்வியபடி.

இப்படியெல்லாம் நடக்குமென்று

இப்படியெல்லாம் நடக்குமென்று
எதிர்பார்த்தா
நடக்கிறது.
கார்க்காரனுக்கு குறுக்கே புகுந்த நாய்
அவனையும் விட்டுவிட்டு
அதுவும் தப்பி...
என் வழியில்
அந்த நாய்
குறுக்கே வந்திருக்க வேண்டாம்
நான் உருண்டு கொண்டிருக்கிறேன் என்பது
நன்றாக உணர்விலிருந்தது
தனக்கென்ன வேர்த்தா வடியுது என்று
கார்க்காரனும்
கண்ணுக்கெட்டா தூரத்தில்
தன் அப்பன் போக்கே
தான் போக்கு என்று
நாயும்...
போய்க் கொண்டிருந்தார்கள்.
அந்த நாயிடம்
வேறென்ன எதிர்பார்க்க முடியும்!
தரையோடு
நசுங்கியிருக்க வேண்டும்
நாய் அல்லது நான்.
இப்போதைக்கு நல்லது.

சும்மா கிடந்த கல்லை

சும்மா கிடந்த கல்லை
தூக்கி நிறுத்தி
குளிப்பாட்டி விட்டார்கள்.
கல் செப்பத் தொடங்கிவிட்டது 
அன்பே சிவம் என.

நிமித்தம்

நிமித்தம்
****************
அமலைகளுக்கு இடையில்
அமுக்கப்பட்ட அவனது உடல்
நாலாபக்கமும் கைகள் வீசி
தலையைத் தேடும்.
தலையோ
காட்சி மண்டபத்தின் நடுவில்
கண்கள் மூடி
அமர்ந்திருக்கும்.

கரையோரம்
அவனுக்கு ஒவ்வாத
சிகரெட் துண்டுகளும்
மதுக்குவளைகளும்.

*மாறுகால் மாறுகை
வெட்டி விடலாம் என்று
அரிவாளோடு இருந்தவன்
எதிரில்
ஒரு கால் ஊனமுற்றவரைப் பார்த்ததும்
மனம் மாறி
மன்னித்து
விட்டு விட்டான்
வாழ்ந்து விட்டுப் போ.....

*நடந்து சென்றபொழுது
தற்செயலாக
இரயில் மோதி
கிடந்தான்
கை கால் ஒருபக்கம்
தலை ஒருபக்கம்
மனமும் ஒருபக்கம்
கிடக்கின்றது.

கருப்பை இல்லை

அவள்
கருப்பை இல்லை என்றதும்
அவன் அருகினில்
அவன் இதயத்தில்
அவள் இருப்பை மட்டுமே ஏற்றுச் சம்மதித்திருந்தும்...

அவள் சொன்னது பொய்யாகிய
பின்பொருநாளில்
குதிச்சு.. குதிச்சே..
கருவைக் கலைத்துவிடுவேனென்று
அவனைக் கதற விட்டபோது...

கருக்கலைப்பை அல்ல
இதயக்கலைப்பை நிகழ்த்தினாள்
எருக்கஞ் சொல்லை
இதயத்தில் விட்டு விட்டுக் கிளறியபோதும்.

இதயமாற்று சிகிச்சை நடைபெறுகிறது.
அறுவை அல்ல.
அதை அவளே செய்துவிட்டாள்.
நாண் ?
விரைவில் நடக்கும்.

இதயத்துள்ளிருந்து
முதலில்
அவளைச் சாகடித்தாள்
பின்பு
அவனைச் சாகடித்தாள்

நேற்றைய பகல்
பக்கத்து இலையில்
பாயாசம் பார்த்தபோதுதான்
ஆழ்மனதில்
அவள் மீதான காதல்
மிச்சமிருப்பதை
உறுதி செய்ய முடிந்தது
அவனால்.

எக்கணமேனும்
ஜீவ சமாதி நிகழலாம்.