Saturday, 22 October 2016

எச்சரிக்கைப் பலகை

பள்ளி, கல்லூரி அருகில்...
எச்சரிக்கைப் பலகை.


கவனமாகச் செல்லவும்!
உள்ளே
படித்தவர்கள்
வேலை செய்துகொண்டிருக்கிறார்கள் !

சின்ன மூக்குத்தி

என்னை வீழ்த்த வேண்டுமெனில்
சின்ன மூக்குத்தி போதும்!


பலருக்கு நிம்மதி!

துரத்து சொந்தம்

எனக்கு
முன்னிரவு நேரம்.
பெருங் கதறல் சத்தம்


பதறியடித்து வந்து பார்த்தேன்
ஒரு பெண்ணை
நாலைந்து பேர் சுற்றி. ..

ஒருவன் அவளை நெருங்க
அவள் கத்துகிறாள் கதறுகிறாள் 


மற்ற நான்கு பேரும்
சும்மா சுற்றி நிற்கிறார்கள்
அவனை மிரட்டுகிற தொனியில். 


பக்கத்துத் தெருவிலிருந்தும்
ஒருவன் பாய்ந்து வந்தான்
கூட்டம் கூடுகிறது
களேபரம் ஆகிறது


காமம் கொண்ட அவனோ
காதல் கொண்டவனோ - ஒரே
குறியாக இருந்தான்!


அவள் கழுத்தில் - அவன்
முகம் வைத்தான்
பற்களை நறநறவென்று கடித்தாள்


எனக்குள் பதற்றம்
ஓடிச்சென்று காப்பதா?
வேடிக்கை பார்ப்பதா? 


அவன் விடுவதாக இல்லை
அவள் சம்மதிப்பதாக இல்லை


ஐந்துபேரின் மிரட்டல் அதிகமாக
அவர்களோடு அவன்
சண்டைக்குத் தயாராக...
என்ன நினைத்தானோ
அவர்களை விட்டுவிட்டு
அவளைப் பின்...தொடர்ந்தான்


அவள் காருக்கு அடியில்
ஒளிந்து கொண்டாள்
அவன் காருக்கு அருகேயே
நின்றுகொண்டிருந்தான். 


அவள் அப்படி ஒன்றும்
பத்தினி இல்லை !
அவனும் அப்படி ஒன்றும்
காமுகன் இல்லை !


அவள் ஏன் மறுக்கிறாள்?
இவன் அவளுக்குத்
தூரத்து சொந்தம்கூட இல்லையா?
வெறும் துரத்து சொந்தம்தானா !


அவள் ஏன் மறுக்கிறாள்?
பொதுவெளியா ?
உடல்வலியா ?
அவனைப் பிடிக்கவில்லையா?
பெண் மறுக்கவும் செய்வாளா?
முடியுமா ?
ஆண் வெறி!


கூட்டம் கலைந்து செல்ல
கதவைச் சாத்தினேன்
அவன்மீது இரக்கத்தோடு.


அவன் விடுவதாக இல்லை!
அவள் சம்மதிப்பதாக இல்லை!


அவளின் கதறல் மட்டும்
இரவைத் தூங்கவிடவில்லை.


காமத்தைப் பொறுத்தவரை
எல்லோருமே
நாய்கள்தான் !

Thursday, 6 October 2016

கலிங்கத்துப் பரணியின் உடல் தத்துவம்

     கலிங்கத்துப் பரணியில் இடம்பெறும் பகுதிகளின் பொருத்தம் மற்றும் தேவை குறித்தும், உடலின் ஆராதனையும், அதே உடலின் அருவருப்பும் ஒருசேர விளக்கப்பட்டிருத்தலின் அவசியம் குறித்தும் இக்கட்டுரை ஆராய்கிறது. கலிங்கத்துப் பரணி எழுதப்பட்டதன் உள்நோக்கம் உடலின்  பிரக்ஞையை விடுப்பதே, உடல் துறவே ஆன்மஞானம் என்பதை இக்கட்டுரை மெய்ப்பிக்கிறது.
     குலோத்துங்கச் சோழனின் வெற்றிச் சிறப்பைப் பாடுவதே பரணியின் நோக்கம் என்று இதுவரை அறியப்பட்டு வந்துள்ளது. சோழனின் வெற்றி மட்டும் எனில், போரிட்டார், வென்றார் என்று போர்க்களத்தைப் பற்றி மட்டும் குறிப்பிட்டு சொல்லியிருக்க முடியும். பிறகெதற்கு… கடைதிறப்பும், பேய்பாடியதும், காளிக்குக் கூளி கூறியதும், பிறவும்.? காடு பாடியது, கோயில் பாடியது, தேவியைப் பாடியது, பேய்களைப் பாடியது, பேய் முறைப்பாடு - இவையெதற்கு ? போர் பாடியதும், களம் பாடியதும் சோழனின் வெற்றிச் சிறப்பைப் பாராட்டப் பாடப்பட்டது. எனில், கடைதிறப்பு தவிர, பிற பகுதிகள் போரின் தன்மையை; போரினால் விளைந்த பயனை; சோழனின் வல்லமையை; தளபதி கருணாகரத் தொண்டைமானின் வீரத்தை மிகைப்படுத்தி கற்பனாவாதத்துடன் பாடப்பட்டது எனக் கொள்ளலாம். எனில், கடைதிறப்பு ஏன்? போர், களம், பேய், காளி ஆகியவற்றைப் பாடிய இடத்தில் கடைதிறப்பு ஏன்? என்பது ஆராய்தற்குரியது.
    ‘செயங்கொண்டானை இந்தச் செயங்கொண்டான் பாடியது’ என்று செயங்கொண்டார் கூறியதாக ஒரு கருத்து உள்ளது. அவ்வாறே எனில், வெற்றியைத் தரும் போரைப் பாடாமல், புலவர் முதலில் கடைதிறப்பை வைக்க வேண்டிய அவசியம் என்ன? இந்த வகையில் பரணி பாடியதன் நோக்கம் மன்னனின் வெற்றி சிறப்பு மட்டுமே என்று அறிதற்கியலாது.
    செயங்கொண்டார் பரணியின் பிற்பகுதியில் உடலின் அகோரத்தை அதிகற்பனாவாதத்தோடு விளக்குகிறார். தலைகள், மண்டையோடுகள், எலும்புக் கூடுகள், கைகள், கால்கள், வாய், நாக்கு, கண்கள், இரத்தம், இரத்தக் கூழ் முதலியனவாகப் பிரித்து பிரித்து அதன் அகோரத்தைக் காட்சிப்படுத்துகிறார். உடலின்மீது அதிபயங்கர அருவருப்பையும், வெறுப்பையும் ஒருசேர உருவாக்குகிறார். இந்த மனநிலைக்குப் படிப்போரைத் தயார் செய்யவே, உடலழகை ஆராதிக்கும் கடைதிறப்பு பகுதியை முற்பகுதியில் வைக்கிறார். கடைதிறப்பு இல்லையெனில், உடலின் அருவருப்பை மட்டும் மிகைப்படுத்தியவர் என்ற குற்றத்திற்கு உள்ளாவார். அதுமட்டுமல்லாது, இலக்கியப் பரப்பிலிருந்து ஒதுக்கி வைக்கப்படும் அவலநிலைக்குப் பரணி தள்ளப்பட்டுவிடும். ஆகையினாலும், உடலின் அழகை அங்குலம் அங்குலமாகப் பேசுகிற கடைதிறப்பு முற்பகுதியில் வைக்கப்பட்டிருக்கிறது.
    உடலை ஆராதிக்கிற மனம், உடலின் அழகில் மயங்கிக் கிடக்கிற மனம் பிற்பகுதிக்கு வரும்பொழுது தன்னுடைய உடலா இப்படியாகிறது? தனக்குள் இப்படியொரு உடலா இருக்கிறது? என்கிற நிலைக்கு வந்து சேர்கிறது. கடைதிறப்பில் உடலின் அழகுக்குள் சென்று, களம்பாடியது வரும்பொழுது உடலை வெறுத்து, மனமானது உடல் பிரக்ஞையை விடுத்து, உடல் மயக்கத்தை விடுத்து, உடல் கவர்ச்சியிலிருந்து விலகி ஞான நிலையை அடைகிறது. அங்கு உடல் மீதான துறவு ஏற்படுகிறது. ஆன்ம ஞானம் ஏற்படுகிறது. அவ்வகையில் செயங்கொண்டார் ஒரு சித்தரே! முரண்பாடான இருநிலைகளை; உடலின் உயர்ந்த நிலையையும், உடலின் கீழான நிலையையும் அவர் முயற்சி செய்து பார்த்திருக்கிறார். கடைதிறப்பில் இளமையையும், பிற்பகுதியில் உடலின் அகோரத்தையும் விளக்குவதன் மூலம் இளமை நிலையாமையையும், யாக்கை நிலையாமையையும் பாடி, பரணி துறவை வலியுறுத்துகிறது.
    மகளிர் அங்க வர்ணனை, தேவியின் அங்க வர்ணனை, பேய்களின் அங்க வர்ணனை, இறந்துபட்ட வீரர்களின் அங்க வர்ணனை என நால்வகைகளில் அங்கத்தைப் பற்றிய செய்திகள் மிகுகற்பனையோடு படைக்கப்பட்டுள்ளன.
கடைதிறப்பு பகுதியில் இருக்கும் மகளிரின் அங்க வர்ணனை காதல் ரசம் மிகுந்து போகத்தை வெளிப்படுத்துகிறது. தேவியின் அங்க வர்ணனை தெய்வீகம் நிறைந்து பக்தியை வெளிப்படுத்துகிறது. பேய்களின் அங்க வர்ணனை அருவருப்பு வளர்ந்து வெறுப்பை வெளிப்படுத்துகிறது. வீரர்களின் அங்க வர்ணனை நிலையாமையை உணர்த்துகிறது.
        ஒவ்வொரு பகுதியிலும் வர்ணிக்கப்படும் உடல் உறுப்புகள் அவ்வப் பகுதிக்கேற்ப மாறுபட்ட தன்மைகளைக் கொண்டுள்ளன. மழலைத் திருமொழி (கடை. 52) என்று வர்ணிக்கப்படுவது, சிறுகுதலைப் பவளம் (தேவி. 11) எனப்படுகிறது. மார்பைப் பற்றி வர்ணிக்கும்பொழுது கடைதிறப்பில் மகளிரின் மார்புகள் காமக் கண்கொண்டு முழுவதுமாக வர்ணிக்கப்பட்டதெனில், தேவியைப் பாடியதில் அவ்வாறில்லாமல் இரு இடங்களில் மட்டும் தேவியின் அவ்வங்கம் வர்ணிக்கப்படுகிறது.
        கடைதிறப்பில் சூதள வளவெனும் இளமுலை (1), புடைபட இளமுலை வளர்தொறும் (2), செருவிள நீர்பட வெம்முலை (6), தடமுலை வேது (7), மாமுலைகள் (16), வாச மார்முலைகள் மார்பிலாட (21), களப வண்டலிடு கலச கொங்கைகளில் (20), கொங்கை வடம்புரள (27), முத்துவடஞ்சேர் முகிழ்முலை (28), பிறவும்… என்றவாறு மார்பை வர்ணிக்கும் பாங்கில் காமத்தீ பரவுகிறது. அவ்விளமுலைகளில் சந்தனமும், வாசனைப் பொடியும் பூசப்பட்டிருக்கும். இது தேவியைப் பாடியதில்,
              “அணிதவ ளப்பொடியிட் டடைய இலச்சினையிட்
               டமுதம் இருத்தியசெப் பனைய தனத்தினளே” (5)
என்றவாறு ‘தனம்’ என்றும், கனகமுலை (8) என்றும் இடம்பெறுகிறது. இரண்டு செப்புக் கிண்ணங்களில் அமிர்தத்தை நிரப்பி முத்திரையிட்டு வைத்தால் எப்படியோ, அப்படிப்பட்ட வடிவ அழகும் இன்பநிறைவும் பொருந்திய தனங்களைக் கொண்டவள் அன்னை காளிதேவி என்று வர்ணிக்கப்படுகிறது. தேவியின் தனங்களில் திருநீறு பூசப்பட்டிருக்கிறது.
    கடைதிறப்பில் மகளிரின் இதழும், இதழ் ரசமும் காதலர்தம் உணர்ச்சியைப் பெருக்கும் விதத்தில் வர்ணிக்கப்படுகிறது. மகளிரின் இதழ் ரசம்  ‘செங்கனி வாய்மருந்து’ (7) எனப்படுகிறது. மகளிர் இதழின் மது பருகி, மதிமயங்கிக் கிடப்பர் என்பதை,
                “………. வாயிதழ் வெளுப்பவே,
              அதரபானம் மதுபானமாக அறிவழியும் மாதர்”  (17) என்றும்,
             “வாயின் சிவப்பை விழிவாங்க
               மலர்க்கண் வெளுப்பை வாய்வாங்க” (37) என்றும்
இதழ் முத்தம் பருகப்படுகிறது. தலைவனோடு கலவி இன்பத்தில் ஈடுபடும்பொழுது, இதழின் செந்நிறமெல்லாம் விழிக்கு ஏறிவிடும், விழியின் வெண்மை இதழுக்கு மாறிவிடும் என்று வர்ணிக்கப்படுகிறது. தேவியைப் பாடியதில்,
            “இனியத ரத்தமுதக் கனியத ரத்தினளே” (10)
என்றவாறு அன்னையின் இதழ்கள் இன்பக் கேணிகள் எனப்படுகின்றன. அவை  ஆலகால விஷத்தை உண்டருளிய சிவபெருமானுக்கு அமுதநிகரான பானத்தைச் சுமக்கும் இன்பக் கேணிகள் ஆகும். மேலும், கலைந்து கிடக்கும் மகளிரின் மேலாடை காதலை உமிழும். தேவியின் மேலாடை கடும் விஷத்தை உமிழும் பாம்புகள் எனவும் வர்ணிக்கப்படுகின்றன.
    சோழனைச் சூழ்ந்து நின்ற பெண்களின் அங்க வர்ணனையில், கொங்கைகள் இளநீருக்கும், கழுத்து கமுகுக்கும், கண்கள் மீன்களுக்கும், மூக்கு குமிழம்பூக்களுக்கும், தொடை கதலிக்கும் (அவதாரம், 63,64) உவமிக்கப்படுகின்றன. பேய்களைப் பாடியதில், பேய்களின் கைகள், கால்களோ கருநெடும்பனைகளுக்கு உவமிக்கப்படுகின்றன. கருநெடும்பனைகளுக்குக் கையும் காலும் முளைத்திருந்தால் எப்படியிருக்குமோ அப்படி இருந்தனவாம் பேய்கள். அவற்றின் வாய்கள் குகைகளாம். அவற்றின் கண்களோ கொள்ளிக்கட்டைகளாம்.
                “கருநெடும் பனங்காடு முழுமையும்
                 கையும் காலும் உடையன போல்வன” (2)
                 “வன்பிலத்தொடு வாதுசெய் வாயின” (3)
என்று சொல்லப்படுகின்றன. அவற்றின் பற்கள் மண்வெட்டித்தகடுகள் அல்லது கலப்பைகள் போன்றவை. உதடு மார்பைத் தொடும். மூக்கைச் சுற்றிலும் பாசி படர்ந்திருக்கும். பேய்முறைப்பாட்டில், மூக்கருகே நீர் வடிந்து முடைநாற்றம் வீசுகின்றது. வாயைச் சுற்றி ஈக்கள் மொய்க்கின்றன. (பேய்முறை. 8)
    மகளிரின் தொப்புள் ‘உந்திச்சுழி’ எனப்படுகிறது. அதனிலிருந்து முளைத்தெழுந்த உரோமக்கொடியில் இரண்டு ஸ்தனங்கள் (தாமரைகள்) பூத்திருக்கின்றன.
                “உந்திச் சுழியில் முளைத்தெழுந்த
                   உரோமப் பசுந்தாள் ஒன்றில் இரண்
                  டந்திக் கமலம் கொடுவருவீர்” (கடை. 33)
எனில், பேய் பாடியதில், பேய்களின் உந்திச்சுழியிலோ பாம்பும் உடும்பும் உறங்குகின்றன.
                “ஒற்றை வான்தொளைப் புற்றெனப் பாம்புடன்
                 உடும்பும் உட்புக்கு உறங்கிடும் உந்திய” (பேய். 6)
என்றவாறு முரண்பாடான உடல் வர்ணனைகள் அமைகின்றன. ஒன்றில் காமம் என்றால், மற்றொன்றில் அருவருப்பு.
    போர் பாடியது பகுதியில், யானைகளின் தலைகள் இருகூறாக்கப்படுகின்றன. குதிரைகளும் வெட்டி வீழ்த்தப்படுகின்றன. வெட்டப்பட்ட வீரனது உடல் மற்றொரு வீரனைத் தாக்குகின்றது. வெட்டப்பட்ட கால்கள் சுழற்றி சுழற்றி யானைகள் மீது எறியப்படுகின்றன. வீரனைத் தேடிவந்த தலைவிக்கு அவன் தலை மட்டும் கிடைக்கிறது. வீரர்கள் தலைகள் மலையாய்க் குவிந்து கிடக்கின்றன. களம் பாடியது பகுதியில், இரத்தக்கடலில் யானைகள் மிதந்து வருகின்றன. வீரர்களின் உடல்களை பருந்து, கழுகு, நரிகள் தின்னுகின்றன.
                  “களப்பரணிக் கூழ்பொங்கி வழியாமல் கைதுடுப்பா
                    அளப்பரிய குளப்புக்கால் அகப்பைகாளக் கொள்ளீரே” (களம். 77)
என்றவாறு நிணக்கூழ் சமைக்கப்படுகின்றது. அது பரணி நாளில் சமைத்ததினால் பரணிக்கூழ் எனவும் அழைக்கப்படுகின்றது. உப்புச் சுவை பார்க்கப்படுகின்றது. இறந்த அரசர்களின் மண்டையோடுகள் உண்ணும் கலங்களாகப் பயன்படுத்தப் படுகின்றன. ஆக, உடலின் அகோரம் விரிவாக விளக்கப்படுகிறது.
       இவ்வாறாக, உடலின் அழகில் தொடங்கி, உடலின் அழிவில் முடிகிறது கலிங்கத்துப் பரணி. செயங்கொண்டாரின் நோக்கம் உடலை அணு அணுவாக ரசித்துவிட்டு, அதைப் பக்தியாகக் கொண்டாடி, இறுதியில் அவ்வுடலைவிட்டு வெளிவரத் தூண்டுதலேயாகும். ஆன்மஞானம் பெற முதன்மைவழி அங்கஞானம் பெறுவதே என செயங்கொண்டார் வலியுறுத்துகிறார். ‘தான்’ என்ற நிலையிலிருந்து வெளிவர, ‘தனது’ என்ற நிலையிலிருந்த விலக, உடலைத் துறந்தால்தான் முடியும். காமத்திற்கிடமான உடலைத் துறந்தால் ஆன்மஞானம் எளிது என்பதைச் செயங்கொண்டார் உணர்ந்து படைத்துள்ளார். கலிங்கத்துப் பரணியின் நோக்கம் உடல் துறவேயாம்.
                                    ****

புதுமைப்பித்தனும் ஆல்பெர் காம்யுவும்

    20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றிய இருபெரும் எழுத்தாளர்கள் பற்றி இங்கு ஒப்பிடப்படுகிறது. தமிழ்ச் சிறுகதை உலகில் மன்னன் என்று போற்றப்பட்ட புதுமைப்பித்தனையும், பிரெஞ்சு இலக்கிய உலகின் நோபல் பரிசு பெற்ற ஆல்பெர் காம்யுவையும் ஒப்பிட்டு இக்கட்டுரை அமைகிறது. புதுமைப்பித்தன் சிறுகதைகள், திரைப்படங்கள் என்று முயற்சி செய்திருக்கிறார். ஆல்பெர் காம்யு நாவல்கள், நாடகங்கள், தத்துவங்கள் என்று முயற்சி செய்திருக்கிறார். இரு படைப்பாளர்களின் படைப்புகளை நேரடியாக ஒப்பிடுவதைவிட, அவர்கள் வாழ்ந்த சூழல், அவர்களைப் பாதித்த நிகழ்வுகள், இருவரது குணாதிசயங்கள், அவர்களது வாழ்க்கைப் போராட்டங்கள், படைப்பாக்கச் சூழல், படைப்பின் அடிக்கருத்து ஆகியனவற்றை ஒப்பிடும்பொழுது அனைத்திலும் பொதுவான தன்மைகள் இருப்பதை அறியலாம்.
    புதுமைப்பித்தன் 1906-இல் பிறக்கிறார். காம்யு 1931-இல் பிறக்கிறார். புதுமைப்பித்தன் பிறந்த சூழல் இந்திய விடுதலைப் போராட்டம் தீவரமாக, ஒரு இயக்கமாக மாறத் தொடங்கியிருந்த காலகட்டம். அடிமைப்பட்டிருந்த இந்தியா ஆங்கிலேய ஆதிக்கத்திடம் போராடிக் கொண்டிருந்த காலகட்டம். காம்யு பிறந்த சூழல் அல்ஜீரியா பிரான்ஸ் தேசத்தின் ஆட்சியோடு இணைக்கப்பட்டிருந்தது. பிரெஞ்சுக் குடியுரிமை பெற்ற நாடாக இருந்தது. இவ்விருவரும் வாழ்ந்த சூழல் முதல் உலகப் போரும், இரண்டாம் உலகப் போரும் நடைபெற்ற சூழல். பிரான்ஸ் நாடு இரண்டாம் உலகப் போரால் நேரடியாகப் பாதிக்கப்பெற்றது. தமிழ்நாடு (இந்தியா) இரண்டாம் உலகப் போரில் மறைமுகப் பாதிப்பை மட்டுமே பெற்றது. இப்போர்களும், சுதந்திரப் போராட்டங்களும், இருவரது சொந்த வாழ்க்கையில்; சிந்தனைகளில் சில குறிப்பிட்ட தாக்கங்களை ஏற்படுத்தின. ஆனால், அவற்றினைப் புதுமைப்பித்தன் மிகத் தீவிரமான இலக்கியப் படைப்பாகவோ, அடிக்கருத்தாகவோ ஆக்க முயலவில்லை. ஆனால் காம்யு, போராட்டக் களத்தில் தான் பெற்ற இன்னல்களைப் படைப்பாக்கி விடுகிறார். காம்யு நேரடியாகப் பாதிக்கப்படுகிறார். புதுமைப்பித்தன் நேரடியாகப் பாதிக்கப்படுவதில்லை.
    காம்யுவின் ‘அந்நியன்’, ‘கொள்ளை நோய்’ நாவல்கள் இதற்குச் சான்று. ஆனால் புதுமைப்பித்தனிடத்தில் சுதந்திரப் போராட்டம் குறித்த ஒரு படைப்பையாவது அடையாளம் காண இயலவில்லை. புதுமைப்பித்தனால் எப்படி அந்தக் களத்தைத் தவிர்க்க முடிந்தது? அதுதான் படைப்பு மனதின் ரகசியம். ஜெயமோகன் இதனைக் குறிப்பிடும் பொழுது, “படைப்பாளி எதை எழுத வேண்டும், எதை எழுதக் கூடாது என்று அவனால் கூடத் தீர்மானிக்க முடியாது. அவன் ஆழ்மனமே அதைத் தீர்மானிக்கிறது. உதாரணமாக, புதுமைப்பித்தன் சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்து இருந்த காலத்தில் எழுதியவர்….. சுதந்திரப் போராட்டம் பற்றிய சாதகமான உணர்வுகள் ஏதும் அவர் படைப்பில் இல்லை. ஒரு படைப்பில் தியாகி ஒருவரை நக்கல் செய்வது தவிர்த்தால் அவர் அந்த வரலாற்றுக் கொந்தளிப்பைப் பொருட்படுத்தியதன் தடயமே அவர் படைப்புகளில் இல்லை.
    ஆனால் அவர் மறைந்து ஏறத்தாழ 50 வருடம் கழிந்து அவருடைய கடிதங்கள் இளைய பாரதியால் தொகுக்கப்பட்ட போதுதான் அதில், புதுமைப்பித்தனுக்கு சுதந்திரப் போராட்டத்தில் தீவிர ஈடுபாடு இருந்ததும், அதில் அவர் நேரடியாக ஈடுபட்டுச் சிறைசெல்ல விரும்பியதும் தெரிய வந்தது. அப்படியானால் ஏன் தன் படைப்புலகில் அவர் சுதந்திரப் போராட்டம் பற்றிப் பொருட்படுத்தவில்லை?
    படைப்புச் செயலின் மர்மம் அது. வாழ்நாள் பணியாக கதகளிக்குப் புத்துயிர் கொடுப்பதைச் செய்து முடித்த மலையாளக் கவிஞர் வள்ளத்தோள் எழுதிக் குவித்த பல்லாயிரம் வரிகளில் கதகளி பற்றி ஒரு குறிப்புக் கூட இல்லை. கடலின் அருகே பிறந்து, வாழ்நாளெல்லாம் கடற்கரையில் வாழ்ந்து, கடலில் மறைந்த மலையாள மகாகவி குமாரனாசானின் பல்லாயிரம் வரிகளில் கடல் பற்றிய ஒரு படிமம் கூட இல்லை. ஏன்?”1 என்று கூறுகிறார்.
    படைப்பாளியினுடைய இலக்கியப் பிரவேசமும், நோக்கமும் அதற்குரிய காரணங்களாக அமையும். புதுமைப்பித்தன் தன் படைப்புகளில் கேலியையும், கற்பனைகளையும், தொன்மத்தின் மீட்டுருவாக்கத்தையும் பயன்படுத்துகிறார். அவருடைய இலக்கியப் பார்வையே புதுமையாக இருக்கிறது. காம்யுவோ புற உலகத்தினால் மனிதன் பெறும் அவஸ்தையை மையப்படுத்தி, மனித விடுதலையை மையப்படுத்தி படைப்புகளைப் படைக்கிறார்.
    இருவரும் பிறந்த காலச்சூழலில், புற உலகம் இருவர் மீதும் ஏற்படுத்திய தாக்கங்களும், இருவரது வாழ்க்கைப் பயணங்களும் ஒரே நேர்கோட்டிலேயே செல்கின்றன. இருவரும் ஒருவரையொருவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. புதுமைப்பித்தன் உலகத்துச் சிறுகதைகளையும், உலக அரங்குகள் பற்றியும் அறிந்திருந்தாலும் காம்யு பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அந்நாட்களில் காம்யு புகழ்பெறவில்லை. அப்பொழுதுதான் காம்யு இலக்கியப் பிரவேசம் செய்கிறார். காம்யுவுக்கு இந்தியத் தத்துவங்கள் பற்றி பரிச்சயமிருந்தாலும், அவர் புதுமைப்பித்தனை அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அந்நாட்களில் புதுமைப்பித்தன் புகழ் பெறவில்லை. புதுமைப்பித்தனைத் தமிழ்நாடே பிற்காலத்தில்தான் போற்றத் தொடங்குகிறது.
    இருவரும் தங்கள் குடும்ப வாழ்க்கையில் பல இன்னல்களை அனுபவி;க்கின்றனர். பெற்றோரி;ன் அன்பு இருவருக்கும் பெரிய அளவில் கிடைக்கவில்லை. புதுமைப்பித்தன் தன்னுடைய எட்டாவது வயதில் தாயை இழக்கிறார். காம்யு தன்னுடைய எட்டாவது மாதத்தில் தந்தையை இழக்கிறார். இருவருக்கும் அந்த ஏக்கம் கடைசி வரையிலும் மனதை உறுத்தியபடியே இருக்கிறது. புதுமைப்பித்தனுக்கு, மாற்றாந்தாயிடம் பெற முடியாத அன்பும், காம்யுவுக்கு, போரில் தந்தையினுடைய திடீர் இறப்பால் ஏற்பட்ட அதிர்ச்சியினால் தன் நிலை மறந்த தாயிடம் பெற முடியாத அன்பும் இருவரையும் மேலும் ஏக்கத்தில் தள்ளுகின்றன.
    பெற்றோர்களை இழந்த நிலையில் இருவரது ஆழ்மனதும் வாழ்வைப் பற்றியும், புற உலகைப் பற்றியும் கேள்விகளை எழுப்புகின்றன. புதுமைப்பித்தன் இலக்கியத்திற்குள் நின்றுகொண்டு, கற்பனைகளில் புதிய புதிய உலகங்களைப் படைத்து நிம்மதி கொள்ள முயற்சிக்கிறார். காம்யு, தத்துவத்தில் நின்றுகொண்டு, இலக்கியத்தில் புற உலகம் பற்றிய விசாரணையில் இறங்குகிறார். அன்பு வறுமை மட்டுமல்லாது, பணவறுமையும், பத்திரிகைப் பணியும், காசநோய் போராட்டமும் இருவர்க்குமுள்ள பொதுவான தன்மைகளாகும்.
    இருவருமே வாழ வழியற்று, வாழ்வை நடத்தப் பொருளற்று, பணமில்லாது கஷ்டப்படுகின்றனர். வறுமை அவர்களைப் பிடித்தாட்டுகிறது. வாழும் நாட்களில் இருவரும் கொடுமையான அவல நிலையிலிருக்கின்றனர். புதுமைப்பித்தன், உணவுக்காக சொந்தக்காரர்களின் வீட்டில் தங்கி, சிலகாலம் ‘பிழைப்பு’ நடத்தியிருக்கிறார். காம்யு அல்ஜீர் பல்கலைக்கழகத்தில் மாதச் சம்பளமாக மிகவும் குறைவான தொகையைப் பெறுகிறார். வாழ்க்கை நடத்த அது போதாமையால், காம்யு டியூசன் எடுப்பதன் மூலமும், மாமியாரிடமிருந்து பணம் பெறுவதன் மூலமும் வறுமையை விரட்டப் போராடுகிறார்.
    புதுமைப்பித்தனும், காம்யுவும் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்காக, அப்போதைக்குப் பத்திரிகைப் பணியில் ஈடுபடுகின்றனர். பின்னர் அதுவே இலக்கிய உலகிற்கு வாசலாக அமைகிறது. பிழை திருத்தும் (ஃப்ரூப்) பணி, மொழிபெயர்ப்பு பணி, உதவி ஆசிரியர் பணி, ஆசிரியர் குழுவில் பணி என்று படிப்படியாக பத்திரிகைப் பணியில் முக்கிய இடத்தைப் பெறுகின்றனர். புதுமைப்பித்தன் முதலில் தினசரி, சுதந்திரச் சங்கு, மணிக்கொடி முதலிய பத்திரிகைகளில் கதைகளும், கட்டுரைகளும் எழுதுகிறார். பின்னர் ‘ஊழியன்’ -இல் உதவி ஆசிரியர் பணியில் இணைகிறார். மணிக்கொடி ஆசிரியர் குழுவிலும், தினமணி, ஆசிரியர் குழுவிலும் பணியாற்றுகிறார். ஆனாலும், வறுமை தீர்ந்தபாடில்லை. 1933 முதல் 1945 வரை பத்திரிகைப் பணியில் அல்லாடிக் கொண்டே இலக்கியங்களையும் படைக்கிறார். காம்யு 1938-இல் பத்திரிகைப் பணியைத் தொடங்குகிறார். 1940 -இல் ‘குடியரசு மாலை’க்கு ஆசிரியராகிறார். அதே ஆண்டில் ‘பாரீஸ் மாலை’க்குச் செயலாளராகப் பொறுப்பேற்கிறார். பின்னர் ‘போராட்டம்’ பத்திரிகையில் இணைகிறார். ஆனாலும், காம்யுவையும் வறுமை விட்டபாடில்லை.
    புகழ்பெற்ற இவ்விரு எழுத்தாளர்களின் அதீத துயரம் எதுவெனில் இருவருமே ‘காசநோயால்’ பாதிக்கப்பட்டவர்கள். அந்நோயின் தீவிரத்தால் வாழ்வில் பல ஆண்டுகள் அதனுடன் போராடியவர்கள். புதுமைப்பித்தனுக்கு இளவயதிலிருந்தே இருமல் தொல்லை இருக்கிறது. அவர் உட்பட யாரும் அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இறுதியில் அது தீர்க்க முடியாத பெரும் நோயாக மாறிவிடுகிறது. காம்யுவுக்கு 17 வயதில் காசநோயின் பாதிப்பு ஏற்படுகிறது. ‘ஆர்டிபிஷியல் நிமோதெரக்ஸ்’ சிகிச்சை செய்யப்படுகிறது. “ஒரு ஊசி மார்பைத் துளைத்து நுரையீரலைத் துளைக்கும். அப்போது நுரையீரலில் சேர்ந்து இருக்கும் தண்ணீர் வெளியேறி நுரையீரல் சுருங்கும். அதன்பிறகு காசநோய் மெல்ல மெல்லக் குறையத் தொடங்கும். ஒரு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இப்படிச் செய்தார்கள்.”2 இருவரும் இருமல் தொல்லையோடு, காசநோயோடு போராடியபடியே இலக்கியங்களைப் படைக்கின்றனர். 
    ‘ராஜமுக்தி’ படத்திற்குக் கதை-வசனம் எழுதுவதற்காக, புனா செல்கிற புதுமைப்பித்தன், மூன்று மாதத்திற்குள் ‘படுக்கை’ நிலைக்குத் தள்ளப்படுகிறார். புனாவிலிருந்து திரும்புகிற பொழுது, இயல்பாகவே மெலிந்த தோற்றம் கொண்ட அவரது உடல் அப்பொழுது மேலும் சுருங்கி, “விறகுக் கட்டை போல் முண்டும் முடிச்சுமாக வெளியே துருத்தித் தோன்றிய எலும்புக் கூட்டம்தான் மிச்சம். ‘என்புதோல் போர்த்த உடம்பு’ என்பார்களே, அது வார்த்தைக்கு வார்த்தை உண்மை. அதில் சதைக்கு இடமே கிடையாது. தாடி வளர்ந்து முகத்தை விகாரமாக்கிக் கொண்டிருந்தது. இத்தனைக்கும் மேலாக ரத்தத்தையும் கபத்தையும் உதைத்து வெளித் தள்ளும் ஓயாத இருமல்; ரோகத்தின் கொடுமையால் உண்டாகும் ஜூரம்.”3 என்கிற நிலையில் வந்து சேர்கிறார். இறுதியில் 1948, ஜூன் 30-ஆம் நாள் புதுமைப்பித்தன் உயிர் துறக்கிறார். காம்யு தன் இறுதிக் காலம் வரையில் காசநோயோடு போராடினாலும், அவருடைய இறப்பு வேறொரு மர்மத்தில் முடிகிறது. 1960, ஜனவரி 4-இல் அவருடைய கார் மரத்தில் மோதி தூக்கியெறியப்பட்டு, அந்த இடத்திலேயே காம்யு இறக்கிறார். அது விபத்தா? அல்லது தற்கொலையா? என்பது இன்றுவரை புதிராகவே உள்ளது. ஏனெனில், வாழ்வின் துயரங்களுக்குத் தற்கொலையே தீர்வு என்று அவர் அடிக்கடி கூறுவார்.
    அன்பு வறுமை, பண வறுமை, காசநோய் போராட்டம் ஆகியன சேர்ந்து இருவரது படைப்புகளிலும் வாழ்வைப் பற்றிய விசாரணையை ஏற்படுத்துகின்றன. புதுமைப்பித்தன் பாணி எழுத்தில் அது அடியோட்டமாக, நம்பிக்கை வறட்சியாக அமைகிறது. அதே நம்பிக்கை வறட்சி, காம்யு பாணி எழுத்தில் அது வெளிப்படையாக, தத்துவப் பிரச்சினையாக மாறுகிறது. புதுமைப்பித்தன் எழுத்தில் கேலியும், கிண்டலும் இருந்தாலும் அதற்குள்ளாக இருக்கும் சோகம் அவரது படைப்புகளில் வெளிப்பட்டுவிடுகிறது. புதுமைப்பித்தன், “என் கதைகளில் பொதுத்தன்மை நம்பிக்கை வறட்சி. எதிர்மறையான குணங்கள் இலக்கியத்துக்கு வலகொடுக்குமா என்று கேட்கலாம். அது ஏற்பவர்களின் மனப் பக்குவத்தைப் பொறுத்ததேயொழிய, எதிர்மறை பாவத்தின் விஷயத்தன்மை பற்றியதல்ல.”4 என்கிறார். மேலும், புதுமைப்பித்தன் கதைகளைப் பற்றிக் கூறும்பொழுது, “வாழ்க்கை முள்ளில் சிக்கி ரத்தம் சிந்தும் ஒரு சோக இதயத்தின் குரல்களை இக்கதைகளில் கேட்கிறோம்.”5 என்று ரா.ஸ்ரீ.தேசிகன் கூறுவதாக வல்லிக்கண்ணன் குறிப்பிடுகிறார். ‘மகாமசானம்’ கதையில் நம்பிக்கை வறட்சி வெளிப்படையாகத் தெரிகிறது. ‘கயிற்றரவு’ கதையில் அது தத்துவப் பிரச்சினையாக வெளிப்படுகிறது.
    காம்யு நம்பிக்கை வறட்சியை ‘நோசஸ்’, ‘காலிகுலா’, ‘அந்நியன்’, ‘கொள்ளை நோய்’, ‘வீழ்ச்சி’ ஆகிய படைப்புகளில் வெளிப்படுத்துகிறார். புதுமைப்பித்தன் போலவே காம்யுவும் எழுத்துப் பணியை விரும்பிச் செய்கிறார். எழுதுவதிலும், புதுமையைப் படைப்பதிலும் அதிக ஆர்வம் கொண்டிருக்கிறார். ஆனால், இருவரும் எழுதுகிற முறை வேறு மாதிரியானது. புதுமைப்பித்தன் அசுர வேகத்தில் எழுதுகிறார். திருத்தமே இல்லாமல்; நிறுத்தமே இல்லாமல், வேகமாக, தொடர்ந்து எழுதிச் செல்லும் பழக்கமுடையவர். காம்யுவோ திருத்தி திருத்தி, நிறுத்தி நிறுத்தி, யோசித்து, திட்டமிட்டு எழுதும் பழக்கமுடையவர்.
    இலக்கியத் தரத்தில் இருவரிடத்திலும் சமரசம் இல்லை. புதுமைப்பித்தன் எவ்வளவு வேகமாக எழுதினாலும், அதில் இலக்கியத் தரம் குறைவுபடாது. காம்யுவும் இலக்கியத் தரம் குறைந்துவிடக் கூடாது என்று திட்டமிட்டு எழுதுகிறவர்.
    புதுமைப்பித்தன் எப்பொழுதும் வெற்றிலை போடும் பழக்கமுடையவர். எந்நேரமும் அவருக்கு வெற்றிலை வேண்டும். காம்யு இரவுநேரங்களில் எப்போதும் மது அருந்தும் பழக்கமுடையவர். அவரவர் நாட்டுப் பழக்கவழக்கத்தின் அடிப்படையில் இது சாதாரணமானது. எனினும், இருவரும் இத்தகைய பழக்கங்களைக் கொண்டிருக்கின்றனர் என்பது இங்கு குறிக்கப்படுகிறது. புதுமைப்பித்தன் 42 வயதிலும், காம்யு 48 வயதிலும் மரணமடைகின்றனர்.
    இவ்வாறு, வௌ;வேறு நாடுகளில் வாழ்ந்த – ஆனால் ஒரே காலகட்டத்தைச் சார்ந்த இவ்விரு எழுத்தாளர்களின் வாழ்வில் பெரும்பாலான நிகழ்வுகள் மிகப் பொருத்தமுடையதாக அமைந்துள்ளன. கலைஞன் கடுமையான மனநெருக்கடியில் வாழ்கிறான் அல்லது நெருக்கடியில் இருப்பவன் கலைஞனாகிறான் என்பதை உணரமுடிகிறது. இருபெரும் கலைஞர்களும் அனுபவித்த துயரத்தை எண்ணுகையில், கண்களில் கண்ணீர் கசிவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

அடிக்குறிப்புகள் :
1.    ஜெயமோகன், நவீனத் தமிழிலக்கிய அறிமுகம், பக். 80,81
2.    வஸந்த் செந்தில், ஆல்பெர் காம்யு, ப.29
3.    ரகுநாதன், புதுமைப்பித்தன் வரலாறு, ப.91
4.    வீ.அரசு (தொ.), ‘முன்னுரை- என் கதைகளும் நானும்’, புதுமைப்பித்தன் கதைகள்.
5.    வல்லிக்கண்ணன், புதுமைப்பித்தன், ப.26

ஆல்பெர் காம்யுவின் ‘கொள்ளை நோய்’ - இருத்தலியக் குறியீட்டியல்

              “கோட்பாடுகள் அறிவியலில் எவ்வளவு ஆபத்தானவையோ வாழ்க்கையிலும் அவ்வளவு ஆபத்தானவை” – ரிஷார்ட்
     இருத்தலியல் கோட்பாடும் ஒருவகையில் ஆபத்தானதுதான். எந்தவிதக் கேள்விகளுமற்று, இயல்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதனிடத்தில் இருத்தலியல் எழுப்பும் கேள்விகள் ஆபத்தானவைதான். இப்படி வாழ்வதுதான் வாழ்க்கை என்று போலியாக நம்பிக்கொண்டிருப்பவனிடம் ‘இதுவல்ல வாழ்க்கை’ என்கிற ரீதியிலான கேள்விகள் அவனது இயல்புத்தன்மைக்கும், சமுதாயத்தின் இயல்புக்கும் ஆபத்தைத்தான் விளைவிக்கும். இருத்தலியல் வாழ்வை அர்த்தமற்றது என்றும், சட்டம், நீதி, நியாயம், அரசாங்கம், அமைப்பு, குடும்பம், நிறுவனம், திருமணம், கடமைகள், கட்டுப்பாடுகள், விதிகள் என அனைத்தும் அர்த்தமற்றவை என்றும் கூறுகிறது. தனிமனிதனின் சுதந்திரம் மட்டுமே இருத்தலியலில் முக்கியத்துவம் பெறுகிறது. நோபல் பரிசு பெற்ற ஆல்பெர் காம்யுவின் ‘கொள்ளை நோய்’ நாவல் இருத்தலியல் தன்மையையும், குறியீட்டியல் தன்மையையும் ஒருசேரக் கொண்டிருப்பதனால், அது இங்கு ‘இருத்தலியக் குறியீட்டியல்’ என்ற புதிய வகையில் ஆராயப்படுகிறது. இருத்தலியலின் பல கூறுகளில் ஒன்றான ‘வறட்டுத்தனமான சட்டங்கள், அலுவல்கள்’ மட்டும் இக்கட்டுரையில் கவனம் பெறுகிறது.
கொள்ளை நோய் - குறியீடு :
    கொள்ளை நோய், 1947-இல் வெளிவந்தது. வரலாற்று நாவல் என்ற பிரதி உருவாக்கப்பட்டாலும், இது புனைகதைப் பிரதிதான். 194… என்று ஆண்டு குறிப்பிடப்படாமலேயே நாவல் தொடங்குகிறது. இருபதாம் நூற்றாண்டின் அனைத்து மக்களுக்கும் பொருந்துகிற தன்மையிலேயே இந்நாவல் அமைக்கப்பட்டிருக்கிறது.
அமைதியாக, இயல்பாக இயங்கிக் கொண்டிருக்கக் கூடிய நகரம் ஓரான் நகரம். அங்கு முதலில் ஒரு எலி செத்து விழுகிறது. பின்பு பல எலிகள் செத்துவிழுகின்றன. தொடர்ந்து, பலப்பல எலிகள் வாசலிலும், படிக்கட்டுகளிலும், சமையலறைகளிலும், வராண்டாக்களிலும், தெருக்களிலும், கும்பல் கும்பலாகச் செத்து விழுந்து கொண்டேயிருக்கின்றன. மக்களுக்கு அங்கங்கே வீக்கங்களுடன் கூடிய காய்ச்சல் வருகிறது. அடுத்த 48 மணிநேரத்தில் இறப்பும் வந்துசேர்ந்து விடுகிறது. நோய் பரவுகிறது. ஓரான் நகரம் முழுவதும் ‘ஊரடங்கு உத்தரவு’ போல, அரசின் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது. நகரத்தின் கதவுகள் அடைக்கப்படுகின்றன.  மக்கள் நோயை எப்படிச் சமாளிக்கின்றனர்? மக்களை இந்நோய் எத்தகைய மனநிலைக்கு இட்டுச் செல்கிறது? என்பதும், இதனை எதிர்த்த மக்களின் போராட்டங்களும்தான் நாவல். இதுதான் குறியீடு. இங்கே எலிகள் செத்து விழுதலும், மக்களின் போராட்டமும் குறியீடு. ஒரு பிரச்சனை, மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கக்கூடிய பிரச்சனை. இருபதாம் நூற்றாண்டின் நவீன மனிதன் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சனை ஒன்று இங்குக் குறியீடாக முன்வைக்கப்படுகிறது.
போர்ச் சூழலில் வாழ்ந்த ஆல்பெர் காம்யு, இந்நாவலில் கொள்ளை நோயைப் ‘போராக’த்தான் குறிப்பிடுவதாக, இந்நாவலைப் பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த ச.மதனகல்யாணி அவர்கள் குறிப்பிடுகிறார். ஒவ்வொருவராகப் பலிவாங்கும் நோயைப் பொறுத்தளவிலும், நகரத்தின் கதவுகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் வருவதைப் போன்ற நடவடிக்கைகளைப் பொறுத்தளவிலும் இக்கூற்று சரியானததுதான்.  ஆனால், அதற்கு மட்டுமே இதனைப் பொருத்திப் பார்க்காமல், பலவழிகளில் இதனை விரித்துப் பார்க்கவும் வாய்ப்பிருக்கிறது. ஒவ்வொரு நாட்டைப் பொறுத்தும் இதன் குறியீட்டுத் தன்மை இடங்கொடுக்கும். தமிழ்ச் சூழலைக் கருத்தில் கொண்டால், எய்ட்ஸ் கிருமி நோய், ஆங்கிலக் கிருமி நோய், நவீன மேற்கத்தியக் கலாச்சார நோய், இன்னபிற… எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
வறட்டுத்தனமான சட்டங்கள் :
    இருத்தலியல் மனிதனுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறது. மனிதனுக்கு அப்பாற்பட்ட சட்ட திட்டங்கள், அலுவலகக் குறிப்புகள், ஆவணப் பதிவுகள், புள்ளி விவரங்கள் என எதனையும் ஏற்பதில்லை. மனிதனை வெறும் மனிதனாக மட்டுமே பார்க்க வலியுறுத்துகிறது. அவனது சாதி, மதம், மொழி, நாடு, பொருளாதார  அடையாளங்கள் அனைத்தையும், பெயரையும் கூட விட்டுவைக்காது துறக்கச் சொல்கிறது. மனிதனை அனைத்திலிருந்தும் பிரித்து தனியே நிறுத்துகிறது. ஏனெனில், அவை அனைத்தும் மனிதனின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகின்றன.
    மனிதன் தற்பொழுது எவ்வாறு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்றால், மனிதனை விட்டுவிட்டு, மற்ற அனைத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறான். இன்றைய மனிதன் போலிகளால் உருவாக்கப்பட்ட மனிதன். அவனுக்குள்ளேயே அந்நியமாக்கப்பட்ட மனிதன். மனிதன் மீது சிறிதும் அன்பில்லாத மனிதன். சட்டங்களுக்கும், விதிகளுக்கும் மட்டுமே முக்கியத்துவம் தரும் மனிதன் நகரம் முழுவதும் பரவும் கொடிய நோய்க்கு என்ன பெயர் வைக்கலாம் என்று கலந்தாலோசனையில் ஈடுபடுகிறான்.  இருத்தலியல் மனிதன் மட்டுமே மனிதனைக் காப்பாற்ற முன்வருகிறான்.
    நகரம் முழுவதும் பரவும் நோயின் தீவிரத்தைக் கண்ட மருத்துவர்கள், மாவட்டத் தலைவர்கள், அதிகாரிகள் உட்பட பலர் ஒன்றுகூடுகின்றனர். நோய் இதுவரை இல்லாத புதிய வகையாயிருப்பதால், அவர்களுக்கு முதலில்  அந்நோய்க்குப் பெயர் வைப்பதே முக்கியப் பிரச்சனையாயிருக்கிறது. அக்கூட்டத்தில், இருத்தலியல் மனிதன் மருத்துவர் ரியேக்ச் வெறுப்புற்று, “நோய் பரவும் வேகத்தை நோக்கும்போது, அதை நிறுத்தாவிட்டால், இரண்டே மாதங்களில் நகர மக்களில் பெரும்பகுதியை அது அழித்துவிடலாம். அதனால், அதைக் கொள்ளை நோய் என்கிறீர்களோ அல்லது தொற்றுநோய் என்கிறீர்களோ அது முக்கியமில்லை. நகரத்தின் பாதிப்பகுதியைக் கொல்லாமல் நீங்கள் தடுக்க வேண்டியதுதான் முக்கியம்” என்கிறார். (ப.63)
    புயல் மற்றும் சூறாவளி வருகிறது. அல்லது பூகம்பம் வருகிறது. அதற்கு காதரீனா புயல், லைலா புயல், தானே புயல் என்று பெயர் சூட்டிக் கொண்டிருப்பதில் கவனத்தைச் செலுத்துவதை விட்டுவிட்டு, பாதுகாப்பு நடவடிக்கைதான் முக்கியம். பெயர் வைத்தாலும், வைக்காவிட்டாலும் அழிவு நிச்சயம். ஆனால், மனிதனுக்கு ஆவணப் பதிவுகள்தான் முக்கியமாகிவிடுகிறது. இத்தகைய வறட்டுத்தனமான மனநிலையை இருத்தலியல் ஏற்பதில்லை.
    அரசாங்கப் பதிவுகள் மனிதனைப் பொறுத்தவரை அர்த்தமற்றவை. ‘அரசாங்கம்’ என்கிற நிறுவனத்திற்கு ‘தனிமனிதன்’ என்பவன் அர்த்தமற்றவன். சட்ட விதிகளுக்குட்பட்டு இயங்கும் அலுவல் முறையும், இறப்புப் பதிவு எண்ணிக்கைகளுமே அங்கு கவனம் பெறுகின்றன. அரசுசார் ஏற்பாடுகள், பதிவுகள், ஆவணங்கள் அனைத்தையும் தயார்படுத்திய பிறகே, பாதுகாப்புக் குழு மக்களை மீட்கும் நடவடிக்கைகளில் இறங்குகிறது. நகரம் முழுவதும் ‘கொள்ளை நோய்’ என்றும், கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. அதற்குள் பாதி நகரம் அழிந்துவிடுகிறது.
அர்த்தமற்ற சட்டங்கள் :
  நகரத்தின் கதவுகள் அடைக்கப்படுகின்றன. உள்ளேயே இருப்பவர்களுக்கும், உள்ளே வந்தவர்களுக்கும் வெளியே செல்ல அனுமதியில்லை. வெளியிலிருந்து உள்ளே வர அனுமதியுண்டு. பத்திரிகை நிருபன் ராம்பேர்ட் அந்நகரத்திற்கு வெளியிலிருந்து உள்ளே வந்தவன். அவனுக்கும் அந்நகரத்திற்கும் எந்தவிதச் சம்பந்தமுமில்லை. ஆனாலும் வறட்டுத்தனமான கட்டுப்பாடுகளால், நகரம் அவனையும் வெளிச்செல்ல அனுமதிக்கவில்லை. அவன் ‘வெளியாள்’ என்று அத்தனை அதிகாரிகளுக்குத் தெரிந்திருந்தும், சட்டத்தின் விதிகள் மட்டுமே அவர்களுக்கு முக்கியமாகப் படுகிறது. மருத்துவர் ரியேக்சிடம் ‘தடையில்லாச் (நோய் அறிகுறி) சான்றிதழ்’ வழங்குமாறு கெஞ்சுகிறான். ரியேக்ச், தான் ஒத்துழைத்தாலும், அதிகாரிகள் அதற்கு உடன்பட மாட்டார்கள் என்று கூறுகிறார். சிறிது நாட்களுக்குப் பிறகு, அவனைப் பற்றிய விவரக் குறிப்புகள் கேட்டு, விண்ணப்பப் படிவம் ஒன்று அவனிடத்தில் அளிக்கப்படுகிறது. ராம்பேர்ட் நம்பிக்கை பெறுகிறான். ஆனால், அவ்விவரக் குறிப்பு ‘முன்னெச்சரிக்கை’ நடவடிக்கைக்காக என்றறிந்ததும் அதிர்ச்சியடைகிறான்.
  “கொள்ளை நோய் வந்து இறந்துவிட்டால் ஒன்று, அவருடைய குடும்பத்திற்குத்தெரியப்படுத்தவும் இன்னொன்று, மருத்துவமனைச் செலவை நகரத்தின் கணக்கில் சேர்ப்பதா அல்லது அவரின் உறவினரிடமிருந்து பெறுவதா என்பதற்காகவும் இருக்கலாமென அவர்கள் விளக்கினர். அதனால், சமூகம் அவர்களைக் கண்காணிக்கிறது….. ராம்பேர்ட்டுக்கு இது மனஆறுதல் அளிப்பதாயில்லை. தலைமுழுகும் அளவுக்கு நிகழ்ச்சி நடக்கும்போது, ஓர் அலுவலகம் எவ்வாறு தன் கடமையைத் தங்குதடையின்றி இயக்குகிறது என்பதையும், அடுத்து அதனைப் பின்னிவரும் நிகழ்ச்சிகளுக்கான மேலிடங்களின் பொறுப்புகளை எவ்வாறு முன்னேற்பாடாக முனைந்து செய்கிறது என்பதையும் புரிந்துகொண்டான்.”(ப.123)
     அலுவலகங்கள் தாள்களின் மீதும், ஆவணங்களின் மீதும், புள்ளி விவரங்களின் மீதும் அக்கறை செலுத்துவதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது. இருத்தலியல் சமூகத்தின் இத்தகைய வறட்டுத்தனமான போக்கை எதிர்க்கிறது.
சமூகத்தின் கண்காணிப்பு :
  சமூகம் யாரையும் சுதந்திரமாக இருக்க விடுவதில்லை. அனைவரையும் எப்போதும் கண்காணிப்பிலேயே இருத்தியிருக்கிறது. சமூகத்தின் பலவிதமான நெருக்கடிகளுக்குள்ளாகும் கோட்டார்ட் என்பவன் தற்கொலை முயற்சியில் இறங்குகிறான். அவனுக்கு மனஆறுதலையும், மன ஒத்துழைப்பையும் நல்குவதை விட்டுவிட்டு, காவலதிகாரி அந்நிகழ்வை ஆவணப்படுத்துதலிலும், அது தொடர்பான கேள்விகள் கேட்பதிலும் அக்கறை கொள்கிறான். கோட்டார்ட் எரிச்சலடைகிறான். அமைதியைத் தேடுகிறான். ஆனால், இங்கு சட்டத்திற்குப் பதிவுகள்தான் முக்கியமாகப் படுகிறது. ஏற்கனவே மனவேதனையில் இருப்பவனைக் கேள்விகளால் குடைந்து, இப்படிப் பிழைத்ததற்குச் செத்தே போயிருக்கலாம் என்ற மனநிலைக்குச் சமூகம் அவனைத் தள்ளுகிறது.
    கோட்டார்ட் ஒரு சுதந்திர விரும்பி. சுமூகத்தின் முழுமையான விசாரிப்புகளிலிருந்து, பார்வையிலிருந்து வெளியேற விரும்புகிறான். ரியேக்ச் நலமா? என்று கேட்டதற்கு, “நலம்தான் என்று முணுமுணுத்தான். மற்றவர் எவரும் தன்னைப் பற்றிக் கவனம் செலுத்தாமல் இருந்தால் இன்னும் நலமாக இருப்பேன் என்று அமர்ந்து கொண்டே சொன்னான்.” (ப.70) கவனிப்பு, மற்றொரு மனிதனின் அருகாமை என்பது ஒருவகையில் மனிதனின் மீதான வன்முறை என இருத்தலியல் குறிப்பிடுகிறது. ழான் பால் சார்த்தரின் ‘நரகம் மற்றவர்கள்தான்’ என்கிற கோட்பாடு இங்கு உணரத்தக்கது. கோட்டார்ட் மற்றவர்கள் தன்னைக் கவனிப்பதை நிறுத்த வேண்டும் என்று கூறுகிறான். அது தனக்கு மனநெருக்கடியையும், சுதந்திரமின்மையும் ஏற்படுத்துகிறது என்கிறான்.
புள்ளிவிவர அக்கறை :
    எலிகளின் இறப்பு எண்ணிக்கை 300, 500, 1000, 6000 என்று கூடிக்கொண்டே போகிறது. சமூகம் கடந்த 10 நாட்களுக்குள் இறந்த எலிகளின் எண்ணிக்கை 6031 என்று ஆவணப்படுத்துகிறது. புள்ளிவிவரக் குறிப்பில் அக்கறை கொள்கிறது. சமூகத்தின் மந்தமான நடவடிக்கைகளால் எங்கும் மரண ஓலம் கேட்கிறது. முதலில் காவலாளி இறக்கிறார். தொடர்ந்து இறப்பின் எண்ணிக்கை கூடுகிறது. எங்கும் மரண ஓலம்…. இறுதியில் ஒரு சிறுவனின் இறப்போடு இறப்பு முடிகிறது. பாதிரியார் பனெலௌக்ச் கொள்ளை நோய் ஆண்டவனால் அனுப்பப்பட்டது என்கிறார். கொடியவர்கள் மனந்திருந்த, அவர்களின் ஆணவத்தை அழிக்க ஏவப்பட்டது என்றும், சீக்கிரமே இறைவனிடம் மன்றாடுங்கள்; இறைவனை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றும் என் மதப்பிரச்சாரத்தைத் தொடர்கிறார். மனிதன் இறந்துகொண்டிருக்கும் சூழ்நிலையில் மதத்தின் பிரச்சார அவலத்தை இங்குக் காணமுடிகிறது.    
அடைபட்ட நகரம் - பிறப்பு :
  அடைக்கப்பட்ட நகரத்திற்குள் மனிதன் சிக்கிக் கொண்டிருக்கிறான். வெளிச்செல்ல விரும்புகிறான். அதற்கு வழியில்லை. உள்ளே உயிரைத் தக்கவைத்துக் கொள்ள போராடுகிறான். வாழ்வு முழுவதும் போராட்டம் தொடர்கிறது. இதனைக் குறியீடாகக் கொண்டால், மனிதன் பிறப்பின் வழியாக வாழ்விற்கு, இந்த உலகத்திற்கு; நகரத்திற்கு வந்து சேர்கிறான். நகரத்தின் கதவுகள் பல காரணங்களால் அடைபட்டிருக்கின்றன. அவனது சுதந்திரம் பறிக்கப்படுகிறது. இந்த வரையறுக்கப்பட்ட வட்டத்திற்குள் அவன் வாழ வேண்டியிருக்கிறது. வாழ்விற்காகப் போராட வேண்டியிருக்கிறது. இதிலிருந்து வெளியேறி, யாருமற்ற, தனிமை நிறைந்த, அமைதியான வாழ்வை விரும்புகிறான். இறப்பு ஒன்றுதான் அதனைச் சாத்தியப்படுத்துகிறது.
போராட்டம் :
    எத்தகைய பிரச்சனை வந்தாலும், மனிதன் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்க வேண்டும். வெளிச்செல்ல வழியில்லை என்றாகிறபோது, ஒன்றுசேர்ந்து எதிர்க்கத் தலைப்படுகிறான். இறப்பிற்கு மாற்று இல்லை என்றான பிறகு, பிரச்சனையை எதிர்கொள்வதில் மாற்றுக் கருத்து இல்லை. வரலாற்றாசிரியனாகும் முயற்சியிலிருக்கும் தர்ரௌ, அதிகாரிகளை நம்பி பயனில்லை என்றும், தன் நண்பர்களைக் கொண்டு சுகாதாரக் குழுவொன்றைத் தொடங்குகிறான். அவனது குழு கொள்ளை நோயை எதிர்த்துக் களமிறங்குகிறது.
“இது ஒன்றும் கடினமானதல்ல. கொள்ளை நோய் இருக்கிறது. அதனிடம் போராட வேண்டும். அதிலிருந்து விடுபட வேண்டும். இதைத்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.” (ப.150) என்று அடிக்கடி சொல்லப்படுகிறது. மனிதனுக்கு நம்பிக்கை வளர்க்கப்படுகிறது. நாவல் முழுவதும் பிணங்கள் தொடர்கின்றன. இறப்பு பற்றிய தீவிர விசாரணை விளக்கப்படுகிறது. வாழ்வு அவலம் நிரம்பியது. இதனைக் கடந்து வெளிச் செல்ல வேண்டும் என்று குறிக்கப்பெறுகிறது. 
                                ***

தொன்மமான மாதவியும் இன்றைய நடைமுறை வாழ்வும்

        இலக்கியங்களில் பல முக்கியக் கதாபாத்திரங்கள் தொன்மத் தகுதியை எட்டியுள்ளன. இராமன், சீதை, இராவணன், கும்பகர்ணன், கர்ணன், சகுனி, இன்னபிற. இவர்களைப் போலவே, சிலப்பதிகார மாந்தர்களான கோவலன், கண்ணகி, மாதவி ஆகியோரும் தொன்மமாகியுள்ளனர். தொன்மப் பாத்திரங்களை நேர்மறை தொன்மப் பாத்திரங்கள், எதிர்மறை தொன்மப் பாத்திரங்கள் என்று வகைப்படுத்தலாம். இராமன், சீதை, கர்ணன், கண்ணகி ஆகியோர் நேர்மறை தொன்மப் பாத்திரங்களாக உருவகப்படுத்தப்படுகின்றனர். இராவணன், கும்பகர்ணன், கோவலன் ஆகியோர் எதிர்மறை தொன்மப் பாத்திரங்களாக உருவகப் படுத்தப்படுகின்றனர். இதில் மாதவியின் தொன்மப் பாத்திரம் சிக்கலானது. நேர்மறை என்றோ, எதிர்மறை என்றோ குறிப்பிட்டுச் சொல்ல இயலாமல், அவரவர் வசதிக்கேற்ப மாதவியைக் குறிப்பிட இயலும். பரத்தையர் குலத்தில் பிறந்தவள் என்று ஒற்றைப் பரிமாணத்தில் மாதவி எதிர்நிலைத் தொன்மமாகிறாள். பரத்தையர் குலத்தில் பிறந்தாலும், கோவலன் பிரிந்ததால் ‘துறவியானவள்’ என்கிறபொழுது நேர்நிலைத் தொன்மமாகிறாள்.
    இன்றைய நடைமுறையில், மாதவி துறவியானதை மக்களில் யாரும் பொருட்படுத்திக் கொள்வதேயில்லை. அதேசமயம், மாதவி மணிமேகலையைத் துறவியாக்கியதை யாரும் சரியென ஏற்றுக்கொள்வது கடினமே.
    மாதவி ‘பரத்தமை’ என்கிற தட்டையான குறியீடு மட்டும் இன்று வரை நிலைத்துவிட்டிருக்கிறது. மாதவி ‘கற்புடையவள்’ என்கிற கருத்து யார்மனதிலும் பதிந்தபாடில்லை. கற்புக்கு உதாரணமாக, மக்களிடத்தில் கண்ணகி, சீதை இருவர் மட்டுமே குறியீடாகின்றனர். கோவலனும், மாதவியும் கற்பில் பிறழ்ந்தவர்களாக நினைக்கப்படுகின்றனர். ஆண்களில் கற்புநிலை திரிந்தவர்களைக் ‘கோவலர்கள்’ என்றும், பெண்களில் கற்புநிலை திரிந்தவர்களை ‘மாதவிகள்’ என்றும் இன்றைய நடைமுறை வாழ்வில் மக்கள் எண்ணத் தொடங்கிவிட்டனர்.
    இன்றைய நிலையில் கற்பு என்பது ஒரு பொருட்டே அன்று என்பதைப் போல தமிழ் மாந்தர்கள் நிலைதடுமாறி, வழிதவறிச் செல்கின்றனர். நாள்தோறும் செய்தித் தாள்களில் இடம்பெறும் செய்திகள் மக்கள் ‘கற்பு’ என்கிற கருத்தாக்கம் மீது கொண்டிருக்கிற நம்பிக்கையை இழந்துவிட்டனரோ என்றே எண்ணத் தோன்றுகிறது. திரைப்படங்களின் காட்சி சித்திரிப்புகளும், அலைபேசி, இணையதளம் முதலிய வசதிகளும், பெருகிவரும் பொருளாதாரத் தேவைகளும், மாறிவிட்ட கலாச்சார சிந்தனைகளும், மக்கள் வாழ்வில் கற்பு என்பதைக் கேலிக்குரியதாக்கிவிட்டது. இருபத்தொன்றாம் நூற்றாண்டின் மக்கள் மொழியையும், கற்பையும் அலட்சியப்படுத்துவர்களாக மாறிவிட்டனர். அதற்காக, சென்ற நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்கள் எல்லோரும் கற்போடிருந்தனர் என்று அறுதியிட்டுக் கூற இயலாது. கற்புநிலையிலிருந்து விலக, மனதளவில் சிறிது பயம் கொண்டிருந்தனர் என்று சொல்ல இயலும். இன்றைய நிலைபோல் அன்று இருந்திருக்காது என்று மட்டும் நம்ப இயலும். அன்று ஆண்கள் மட்டுமே பெண்தேடி அலைபவர்களாக இருந்துள்ளனர் என்று இலக்கியங்கள் சான்று பகர்கின்றன. சீவகன் எட்டுப் பெண்களை மணந்துள்ளான். ஆனாலும், மக்கள் மனதில் சீவகன் தொன்மப் பாத்திரமாக இடம்பெறவில்லை. கோவலன் ஒரே ஒரு பெண்ணைத் தேடிச் சென்றாலும், மக்கள் மனதில் அவன் பெற்ற இடம் வேறு. ‘ஆண் தேடியவர்கள்’ என்றவாறு இல்லாமல், ‘பரத்தமை’ என்கிற பெயரில் ‘பொருள் தேடியவர்கள்’ என்ற நிலையில் பெண்கள் இருந்திருக்கின்றனர்.
    மாதவி நாட்டியம் தெரிந்தவள். அழகு மிக்கவள். யாழிசைக்க வல்லவள். பாடும் ஆற்றலைப் பெற்றவள். கணிகையர் குலத்தில் பிறந்தவள். ஆனாலும், கண்ணும், முலையும் மயக்கக் காட்டி ஆணை வசீகரிக்கத் தெரிந்தவள் என்ற நிலையிலேயே இன்று மாதவி நினைக்கப்படுகிறாள். ஆனால், மாதவி கணிகையர் குலத்தில் பிறந்து, கற்பு நெறியோடு வாழ்ந்தவள். கோவலன் பிரிந்து சென்றுவிட்டான் என்றதும் வருத்தப்பட்டு, அவனை அழைத்துவர முதலில் வசந்தமாலையைத் தூது (வேனிற்காதை) அனுப்புகிறாள். கோவலன் வரவில்லை என்றதும், மனம் மாறிவிடாமல், மறுபடியும் கௌசிகனைத் தூது (புறஞ்சேரி இறுத்த காதை) அனுப்புகிறாள். கௌசிகன் மாதவியின் மனம், மெய்வருத்தத்தை உரைக்கிறான்.
“பசந்த மேனியள் படர்நோய் உற்று
நெடுநிலை மாடத்து இடைநிலத்து ஆங்குஓர்
படைஅமை சேக்கைப் பள்ளியள் வீழ்ந்தும்
வீழ்துயர் உற்றோள்……  ……… ……”    (புறஞ்சேரி., 68-71)
என்று மாதவியின் வருத்தத்தைக் கூறுகிறான். அப்படியும் கோவலன் வரவில்லை. கணிகையர் குலமரபிற்கு மாறாக, மாதவி தன் கணவனைப் பிரிந்து வருந்துகிறாள்.
இறுதியில், கோவலன் இறந்துபட்டதை அறிந்து, துறவியாகிறாள். எந்தக் கணிகை இதனைச் செய்யத் துணிவாள்? மாதவி சித்திராபதியிடம்,
“…………….. நற்றிறம் படர்கேன்
மணிமேகலையை வான்துயர் உறுக்கும்
கணிகையர் கோலம் காணாது ஒழிக”        (நீர்ப்படை., 104-106)
என்று பௌத்தப் பகலவனைச் சார்கிறாள். தான் மட்டுமல்லாது, மணிமேகலையையும் கணிகையர் கோலம் காணாது ஒழிக்கிறாள்.
பிறகெப்படி, அவளது கற்புநெறி மறக்கப்பட்டது. அவளது வாழ்வு முழுவதும் கோவலனைச் சார்ந்து, கண்ணகியைச் சார்ந்து மாற்றப்பட்டுள்ளது. கண்ணகி பட்ட பெருந்துயரம், அவளுக்கேற்பட்ட கொடு அவலம் ஆகியன மாதவிமீதான பார்வையை மாற்றிவிட்டது. மாதவி இல்லாவிட்டால், கோவலன் கண்ணகியைப் பிரிந்திருக்க மாட்டான் என்பது சாதாரண மக்களின் மன இயல்பு. கண்ணகியைப் போற்றுவதும், மாதவியைப் பழிப்பதும் வழக்கமாகிவிட்டது. மாதவியினுடைய கற்புத்திறம், துறவறம் மறக்கப்பட்டு, மறைக்கப்பட்டு, மாதவி கணிகை, குலத்தைக் கெடுக்க வந்தவள், பரத்தை என்பன மட்டும் நினைக்கப்பட்டது. மாதவி எதிர்நிலைத் தொன்மமாக்கப்பட்டாள்.
மக்கள் வாழ்வில் ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்பதெல்லாம் மீறப்பட்டுவருகின்றன என்பதைச் செய்தித்தாள்கள்வழி அறியலாம். தவறு செய்யக்கூடிய பெண்ணை ‘மாதவி’ என்று இழிப்பதும் காணப்படுகிறது. உண்மையில் மாதவிக்கும் பரத்தமைக்கும் தொடர்பில்லை. 
                    ***

படைப்புச் சிக்கல்கள் : ஊடகங்களின் ஊடாட்டம்

                                                                                                                முனைவர் நா. ஜிதேந்திரன்,
                                                                                                                  தமிழ் உதவிப் பேராசிரியர்,
                                                                                                 சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,
                                                                                                                          திருநெல்வேலி – 627 011.
    எழுத்தாளனின் கற்பனாசக்தியில் தோன்றுவது படைப்பு. கவிதையாகவோ, சிறுகதையாகவோ, நாவலாகவோ, நாடகமாகவோ படைப்பு வெளிப்படுகிறது. அது வாசகனைச் சென்றடையும்பொழுது, வாசகன் பொருள் கொள்ளும் முறை வாசகனின் தரத்திற்கேற்ப மாறுபடுகிறது. முரண் பொருள் கொள்ளும் நிலையும் ஏற்பட்டு விடுகிறது. வாசகர்கள் ஒன்றுசேர்ந்து படைப்பை எதிர்ப்பதும், எரிப்பதும், படைப்பாளனைத் தாக்குவதும்கூட நடைபெற்று விடுகின்றன. அத்தகைய நிகழ்வுகளையும், அவற்றிற்கு ஊடகங்களின் நிலைப்பாட்டையும், அவற்றை ஊடகங்கள் கையாளும் நிலையையும் இக்கட்டுரை ஆராய்கிறது. 
    படைப்பு என்பது முழுக்க முழுக்க தனிமனிதனின் மனம் சார்ந்தது. அறச் சீற்றமாகவோ, உணர்வுகளின் உந்துதலாகவோ, மனதிற்கான வடிகாலாகவோ, தனிப்பட்ட சொந்த வாழ்க்கையின் சோகங்கள் அல்லது தோல்வியிலிருந்து தப்பிக்கவோ அல்லது புகழ்பெற்ற எழுத்தாளனாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்காகவோ படைப்பு வெளிவருகிறது. எழுத்தாளன் தன் ஆழ்மன ஆசைகளை எழுத்தில் எழுதிப் பார்த்து மகிழ்ந்து கொள்ளலாம். வெளிப்படுத்த முடியாத கோபங்களைப் படைப்பில் வெளிப்படுத்தலாம். கண்டுணர்ந்த கதாபாத்திரங்களை அச்சில் கொண்டு வரலாம். எழுத்தாளன் பேசுவதற்கான விஷயங்களை அவனே தேர்ந்தெடுக்கிறான். ஆய்வு நோக்கில் ஒரு புனைவு நூலைப் படைக்கலாம். அறிவியல் நோக்கில் அப்புனைவைப் படைக்கலாம். காமத்தின் வெளிப்பாடாகக் கூட படைப்புகளைப் படைக்கலாம்.
    எந்த ஒரு படைப்பிற்கும் அதன் ஒற்றை மையம் முக்கியமானது. எந்தப் புள்ளியில் வாசகனின் கவனம் குவிய வேண்டும் என்ற எண்ணுகிறானோ, அந்தப் புள்ளிக்கு வாசகன் வந்துசேர்ந்துவிட்டால், படைப்பு வெற்றி பெற்றதாகிறது. ஆனால், வாசகன் அந்த ஒற்றை மையத்தை விட்டுவிட்டு, பல நூறு பக்கங்களில் அல்லது பல்லாயிரம் வார்த்தைகளில் ஏதோ ஒன்றைப்  பற்றிக் கொண்டு, அதனோடு தன்னை; தான் சார்ந்த சமுதாயத்தை; தன் மதத்தைப் பொருத்திப் பார்த்து, படைப்பாளனோடு சண்டையிடுகிற சூழல் உருவாகிவிடுகிறது. படைப்பாளனுக்கும் வாசகனுக்கும் இடையே ஏற்படுகிற உரசல் இன்றைய நாளில் மட்டுமல்லாது தொன்றுதொட்டு வரும் பழக்கமிது. படைப்பில் குறை என்று படைப்பாளனை அவமானப்படுத்துவதும், படைப்பாளனுக்கு உரிய அங்கீகாரத்தைத் தர மறுப்பதும் தொடர்ந்து நடைபெறுகின்றன.
    சங்க இலக்கியத்தில் பெருஞ்சித்திரனார் என்னும் புலவர் அதியமான் நெடுமான் அஞ்சியைக் காணச் சென்றபோது, மன்னன் புலவரைக் காணாமலேயே, ‘இது கொண்டு செல்க’ என்று பரிசில் ஈந்தான் என்றும், அதற்குப் பொறுக்காத பெருஞ்சித்திரனார்,
    “யான் ஓர் வாணிகப் பரிசிலேன் அல்லன்”     (புறம். 208)
என்று கூறிச் சென்றதாகப் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது. புலமைக்கான அங்கீகாரம் மறுக்கப்படும்போது புலவர் சினம் கொள்கிறார்.
    பெருஞ்சித்திரனார் வெளிமான் என்னும் மன்னனைக் காணச் செல்கிறார். அங்கும் அவர்க்குக் கசப்பான அனுபவம் ஏற்படுகிறது. அவன் புலவரைக் காணாமல், அவர் பாடலைக் கேட்காமல், தன் தம்பியிடம் ‘புலவர்க்குப்  பரிசில் கொடுத்துவிடு’ என்று சொல்லிச் செல்கிறான். தம்பி இளவெளிமான் புலவரின் தகுதியை அறியாமல் சிறு பரிசொன்றைக் கொடுக்க, தன்னை வெளிமான் அவமானப்படுத்திவிட்டதாகப் புலவர் எண்ணுகிறார். அங்கிருந்து குமண வள்ளலைக் கண்டு, அவனைப் பாடி, யானையைப் பரிசிலாகப் பெறுகிறார். அந்த யானையைத் தன்னை அவமானப்படுத்திய வெளிமானின் ஊர்க்காவல் மரத்தில் கட்டிவைத்து, வெளிமானுக்குத் தான் ஈந்த பரிசாக அறிவிக்கிறார்.
    “இரவலர் புரவலை நீயும் அல்லை
     புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்”     (புறம். 162)
என்று பாடிச் செல்கிறார். தனக்கு நேர்ந்த அவமானத்திற்குத் தானே பதிலடி கொடுக்கிறார்.
    “கொங்குதேர் வாழ்க்கை அம்சிறைத் தும்பி” என்ற பாடலை இறையனார் பாட, பாடலில் பொருட்குற்றம் உள்ளது என நக்கீரன் குற்றம் சாட்டுகிறார். இறையனார் தானே முன்வந்து அதற்கான விளக்கம் தருகிறார். ஒளவையார் சிலசமயங்களில் அவமானப்படுத்தப்படுகிறார். புலவர்களே தன் அவமானங்களைப் போக்கிக் கொள்ள வீறுகொண்டு எழுகின்றனர். படைப்பையும், புலவர்களையும் எதிர்த்துவரும் செயல் காலங்காலமாக நடைபெற்று வருகிறது. படைப்பு ஃ பாடல் அங்கீகரிக்கப்பட ஒரு ‘அவை’ இருந்தது. இன்று அந்த ‘அவை’ இல்லை. தலைமைப் புலவர் ஏற்றுக்கொண்டால் ‘அவை’ ஏற்றுக்கொண்டதாக அர்த்தம். இன்று படைப்புக்கு ஆதரவாகச் சிலரும், எதிராகப் பலரும் ஒன்றுகூடும் நிலை உள்ளது.
    மிகக் காத்திரமான எழுத்துக்கள் எந்தவிதமான எதிர்ப்புமின்றி அமுங்கிப் போய்விடும் சூழ்நிலை இருந்தது. சாதாரணமான எழுத்துக்கள்கூட மிகப் பெரிய எதிர்ப்பைச் சம்பாதிக்கக்கூடிய நிலையும் இருக்கிறது. பகுத்தறிவு, சாதி, கடவுள், பெண் விடுதலை தொடர்பாக பெரியார் முன்வைத்த கருத்துக்கள் மிகத் தீவிரமானவை. பெரியதொரு எதிர்ப்பு இருந்தது எனினும், படைப்பாளருக்கு ஃ கருத்தாளருக்குத் தனிப்பட்ட முறையில் சிக்கல் இருந்ததில்லை. அறிஞர் அண்ணாவின் ‘தீ பரவட்டும்’, ‘கம்பரசம்’ ஆகிய நூல்கள் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. இராமாயணம் எரிக்கப்பட்டது. மாறாக, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் ‘மருமக்கள்வழி மான்மியம்’ சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தியது.
    ஆங்கிலேயர் காலத்தில் நாடகம் நடத்துவதற்குக் கடுமையான நெருக்கடி இருந்தது. பாரதியின் ‘கேலிச் சித்திரம்’ எதிர்ப்புக்குள்ளானது. பத்திரிகையே தடை செய்யப்பட்டது. புதுமைப்பித்தன் (துன்பக்கேணி), எஸ்.வி.வி. (நித்யகன்னி) போன்றோரது படைப்புகள் எதிர்ப்புகளைப் பெற்றிருக்கின்றன. ஜெயகாந்தனின் ‘அக்னிப்பிரவேசம்’ சிறுகதைக்கு எதிர்ப்பு உருவானபோது, அவர் அந்தச் சிறுகதையின் முடிவை மாற்றி, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என நாவலாகத் தொடர்ந்தார். இந்தக் காலங்களிலெல்லாம் மக்கள் அச்சு ஊடகங்கள் வழியாகவும் மட்டுமே எதிர்ப்பையும், ஆதரவையும் வெளிப்படுத்தினர். அச்சு ஊடகங்களும் படைப்பாளனுக்கு ஆதரவு அளித்தன அல்லது கண்டனம் தெரிவித்தன. படைப்பாளன் மீது கைவைக்கவில்லை.
    ஏனெனில், சமூகப் பிரக்ஞையுள்ளவர்கள் படித்தவர்களாக இருந்தனர். பண்புள்ளவர்களாக, தனிப்பட்ட  வாழ்வில் ஒழுக்கமும் உண்மையும் உள்ளவர்களாக இருந்தனர். ஆறுமுக நாவலர் வள்ளலாரின் பாடல்கள் ‘அருட்பா அல்ல… அது மருட்பா’ என்று எதிர்த்தார். ஆனாலும் ஒருவர் மற்றொருவர்மீது மரியாதை கொண்டிருந்தனர். அரசியலிலும், இலக்கியத்திலும் மாறுபாடு கொண்டவர்கள் தனிப்பட்ட சந்திப்பில் அன்பும், மரியாதையும் கொண்டிருந்தனர். மாற்றாரது கருத்துக்களை எதிர்த்தாலும், மாற்றாரை மதித்து நடந்தனர். வெகுஜனம் என்ற பெருவாரியான மக்கள் கல்வியறிவு அற்றவர்களாக இருந்தனர். கேள்வி கேட்கத் துணிவின்றி இருந்தனர். அரசியல், இலக்கியச் சண்டைகளை வேடிக்கை பார்த்தனர்.
    காட்சி ஊடகம் வந்த காலகட்டம், முதல் தலைமுறைப் பட்டதாரிகள் உருவான காலகட்டம். தனியார் அலைவரிசைகள் பெருகிய காலகட்டம். அந்தந்த அரசியல் கட்சிகளுக்குச் சார்பாக, மதங்களுக்குச் சார்பாக, சாதியச் சங்கங்களுக்குச் சார்பாக, செய்தி அலைவரிசைகளும், நிகழ்ச்சி அலைவரிசைகளும் அமைந்தன. இணையமும் வந்து சேர்ந்தது. அதன் தொடர்ச்சியாக, அலைபேசிகளும், முகநூல் பக்கங்களும் வந்தன. ஒவ்வொன்றிலும் ஒரு ‘குழு’ உருவானது; உருவாக்கப்பட்டது. அந்தக் குழுக்கள் மொழி, சாதி, மாவட்டம், பள்ளி, கல்லூரிகள், கல்வித் துறைகள் சார்ந்து இயங்கின. சாதியப் பார்வையும், மதச் சார்பும், இனச் சார்பும் வெளிப்படையாகவே முகநூல் பக்கங்களில் நிரம்பின. தனிமனித வாழ்வில் ஒழுக்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, பணம் முக்கியத்துவம் பெறுதலும், அந்தரங்கப் பகிர்வுகளும் பெருகின. சினிமா நடிகர்கள் சார்ந்து, தனக்குப் பிடிக்காதவற்றை ஒரு குழு ‘வறுத்தெடுத்தது’. அதற்குப் பதிலடியாக, எதிர்க்குழு கேலி செய்தது. ஒட்டுமொத்த அசிங்கங்களும் மின்னணு ஊடகத்தில் நடந்தன. ‘இனக்குழு’ச் சமூகம் என்பது மாறி, ‘இணையக் குழு’ச் சமூகம் உருவானது. ஒவ்வொரு தனிமனிதனும் ஒரு ‘கருத்துப் புலம்பி’யாக மாறினான். இவற்றைக் காட்சி ஊடகங்களும், அச்சு ஊடகங்களும் நேரம் தந்து, பக்கம் ஒதுக்கிக் கொண்டாடித் தீர்த்தன. செய்தி அலைவரிசைகளுக்கு ‘செய்திப் பஞ்சம்’ ஏற்பட்ட நிலையில், சாதாரண நிகழ்வுகளைக் கூட ஊதிப் பெரிதாக்கின. அரைமணி நேரத்திற்கு ஒருமுறை மீண்டும், மீண்டும் அதையே ஒளிபரப்பி, மக்களைப் பரபரப்புக்குள்ளாக்கின.
    இந்தச் சூழலில்தான் படைப்பைவிட்டு, படைப்பாளன் மீது கைவைக்கும் நிலை உருவாயிற்று. இதில் மிக அதிகமாகப் பேசப்பட்டவர் பெருமாள் முருகன். ‘மாதொருபாகன்’ என்றொரு நாவலை எழுதி, திருச்செங்கோடுவாழ் சமுதாய மக்களின் எதிர்ப்புக்குள்ளானவர். படைப்பில் குற்றம் என்று அவர் மிரட்டப்பட்டார்; அவமானப்படுத்தப்பட்டார்; ஊரைவிட்டு விரட்டப்பட்டார். அவருக்கு ஆதரவாக எழுத்தாளர் சங்கம் முன்நின்றது. வழக்கு பதியப் பெற்றது. காட்சி ஊடகங்களும், அச்சு ஊடகங்களும் போட்டி போட்டுக் கொண்டு இந்நிகழ்வை விவாதித்தன. எல்லா விவாதங்களுமே படைப்பில் சொல்லபட்ட செய்தி சரியா? தவறா? என்ற அளவில் விவாதிக்காமல், கருத்துச் சுதந்திரம் பற்றியே விவாதித்தன.
    கரூரில் புலியூர் முருகேசன் அவர்களின் ‘பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்கு உண்டு’ என்ற சிறுகதைத் தொகுப்பு 2014-இல் வெளியானது. வீட்டிலிருந்து கடத்திச் செல்லப்பட்டு, புளியமரத்தில் கட்டிவைத்து தாக்கப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எதற்காகத் தாக்கப்பட்டார் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத காரணங்கள் இருந்தன. தந்தை, மகன், மருமகள் உறவைத் தவறாகச் சித்திரித்தாகவும், கொங்கு மக்களை அவமானப்படுத்தியதாகவும் சொல்லப்பட்டது. எழுத்தாளரோ, திருநங்கைகளைப் பற்றியே எழுதியிருக்கிறேன் என்றார். முகநூல் பக்கங்களில் வார்த்தைகளால் விளாசப்பட்டார். எழுத்தாளர் கூட்டியக்கம் உருவாக்கப்பட்டு, அது எழுத்தாளருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது.
    எழுத்தாளர் சுஜாதா ஒரு தொடர்கதையில் குறிப்பிட்ட சாதியைப் பற்றி கதாபாத்திரங்களின் உரையாடல் வழியாக இழிவான முறையில் எழுதியதற்காக விமர்சிக்கப்பட்டார். வன்முறை நிகழ்ந்ததால், குமுதம் அந்தத் தொடரையே நிறுத்திவிட்டது. சாருநிவேதிதாவின் படைப்புகள் பலமுறை எதிர்ப்புக்குள்ளாகின.
    புதுக்கோட்டையைச் சேர்ந்த எழுத்தாளர் துரை குணா, 2014-இல் ‘ஊரார் வரைந்த ஓவியம்’ என்ற குறுநாவலுக்காகப் பாதிக்கப்பட்டார். இந்நாவலில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பிற சாதியினர் நடத்தும் வன்முறை குறித்து விரிவாக எழுதினார். ஊரில் உள்ளவர்கள் சிலரின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்கள் சமூகத்திற்கும் அப்பாற்பட்டு, தவறான உறவு வைத்திருந்ததாகக் கதையில் எழுதியிருப்பதாகக் கூறப்பட்டது. ஊரைவிட்டு வெளியேற்றப்பட்டு, தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். அச்சுறுத்தல் ஏற்பட்டதால் பாதுகாப்பு கருதி மதுரை உயர்நீதிமன்றத்தை அணுகினார். அவரது தந்தை தாக்கப்பட்டார். வேறொரு தனிப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, 2016-இல் துரை குணா கைது செய்யப்பட்டார். அப்போதெல்லாம் அச்சு ஊடகங்ளும், காட்சி ஊடகங்களும் நிகழ்வை அச்சேற்றின; பரபரப்பாக விவாதித்தன. ஆனால், தங்களது நிலைப்பாட்டை முன்வைக்கவில்லை.
    கொத்தமங்கலத்தில், 2012-இல் ம.மு.கண்ணன் அவர்கள் எழுதிய ‘கருவாட்டு ரத்தம்’ என்கிற கதைக்கு எதிர்ப்பு எழுந்தது. எழுத்தாளரின் வீடு தீவைத்து எரிக்கப்பட்டது. வழக்கம்போல், எழுத்தாளர் ஊரைவிட்டு வெளியேற்றப்பட்டார்.
    சோலை சுந்தரபெருமாள் அவர்கள் 2011-இல் எழுதிய ‘தாண்டவபுரம்’ நாவல் சில ஆண்டுகளுக்குப் பிறகு சர்ச்சைக்குள்ளானது. ஆளுடையாபிள்ளை என்ற கதாபாத்திரம் (திருஞானசம்பந்தர்) மனோன்மணி என்கிற கணிகையுடன் உறவு கொண்டதாகவும், அவர்களுக்கு ஒரு மகவு பிறந்ததாகவும் இந்த நாவல் குறிப்பிட்டது. பக்தி வழிபாட்டிற்காகத் தெருவில் கூடும் பெண்களைத் திருஞானசம்பந்தர் நோட்டமிடுவார் என்றும் குறிப்பிட்டது. சைவ மடங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. தமிழ் ஹிந்து நாளிதழ் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியது. இணையதளப் பக்கங்களில் பல எழுத்தாளர்கள் இந்நாவலுக்குத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
    நெல்லையில் கல்லூரிப் பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டிருந்த ஆண்டாள் குறித்த கருத்துக்கள் இந்து சமூகத்தினரின் எதிர்ப்பைப் பெற்றது. அதனால் அப்பாடப்பகுதி நீக்கப்பட்டது. அச்சு ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டன.
    காட்சி ஊடகங்கள் அன்றைய பரபரப்பிற்கு, எழுத்தாளர் தாக்கப்பட்டதையும், கைது செய்யப்பட்டதையும் பேசினாலும், அவை அறத்தோடு செயல்படுவதில்லை. எழுத்தாளனைப் பாதுகாக்க எந்த முயற்சியையும் செய்வதில்லை. எதிர்க்கும் குழுவைக் கண்டிப்பதில்லை. தாங்கள் நடுவுநிலைமையோடு பிரச்சனையை அணுகுவதாகக் கூறிக் கொள்கின்றன. சகிப்புத் தன்மை, கருத்துச் சுதந்திரம், கருத்துப் பரிமாற்றம், அஹிம்சை முறை ஆகியவற்றை எதிர்க்கும் குழுவுக்கு உணர்த்த வேண்டும். மாற்றுக் கருத்து இருக்குமானால், அதனை எழுத்தாளருக்கு உணர்த்த வேண்டும். இருதரப்பிற்கும் இடையிலான பிரச்சனையைப் பேசினாலே போதுமானது என்கிற அளவிலே அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் இருந்து விடுகின்றன.
    கண்டனம் தெரிவிப்பது அல்லது நிகழ்வை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி பரபரப்புக்குள்ளாக்குவது என்பனவற்றைத் தவிர்த்து, ஊடகங்கள் செயல்பட வேண்டும். எழுத்தாளருக்கு ஆதரவாகவோ அல்லது குழுவுக்கு ஆதரவாகவோ செயல்படாமல் கருத்துப் பரிமாற்றத்தை, கருத்துச் சுதந்திரத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இணையதளப் பக்கங்களும் மாற்றாரை மதித்துக் கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும்.
                                                                                        ***

தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கைச் சிந்தனைகள்

                                                                    முனைவர் நா. ஜிதேந்திரன்,
                                                                     தமிழ் உதவிப் பேராசிரியர்,
                                                       சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,
                                                                     திருநெல்வேலி – 627 011.
        சுட்டெரிக்கும் சூரியனே ஆனாலும்
        தினந்தோறும் வீழ்ந்துதான் ஆகவேண்டும்!
        அது …. மீண்டும் மீண்டும்…
        எழ மறுப்பதில்லை !
        மறப்பதில்லை !
    தன்னம்பிக்கை என்பது வாழ்வின் அஸ்திவாரம். அந்த அஸ்திவாரத்தில்தான் நல்ல மாளிகை கட்ட இயலும். தன்னம்பிக்கை இல்லாமல் வாழ்வை எதிர்கொள்ள இயலாது. தமிழில் கடித இலக்கியம், பயண இலக்கியம், தன்வரலாற்று இலக்கியம் என்பவற்றைப் போல, தன்னம்பிக்கை இலக்கியமும் தனித்த ஒரு துறையாக, தனி இலக்கியப் பிரிவாக வளர்ந்துள்ளது. தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை குறித்த பதிவுகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
    இன்று தன்னம்பிக்கை என்று வழங்கப்பட்டு வரும் சொல், சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் தமிழ்ச்சூழலில் பயன்படுத்தப்படவில்லை. பயன்படுத்தப்பட வேண்டிய தேவையும், சூழலும் ஏற்படவில்லை. ஏனெனில், தனிப்பட்ட வாழ்க்கை, தன் வாழ்க்கை என்ற சிந்தனையே மக்களிடத்தில் இல்லை. கூட்டு வாழ்க்கை தந்த ஆதரவு, ஒத்துழைப்பு, அரவணைப்பு முக்கியமாக இருந்தது. அதையும் மீறி, மக்களிடத்தில் சோர்வு ஏற்படும்போது, ‘எல்லாம் அவன் செயல்’, ‘இதுவும் மாறும்’, ‘இந்த நிலை இறுதியல்ல’ என்று நம்பிக்கை கொண்டு காலத்தை நகர்த்தினர். கடைசி வரை அந்த நிலை மாறாதபோது, ‘எல்லாம் விதி’ என்றும், ‘தலையெழுத்தை யாரால் மாற்ற முடியும்?’, ‘போன ஜென்மத்தில் செய்த பாவம்’ என்றும் ‘ஊழ்வினை’க் கோட்பாட்டை நம்பினர். எங்கு சென்றாலும், எப்படி வாழ்ந்தாலும், ‘ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’ என்று எல்லா இலக்கியங்களின்வழியும் அறிவுறுத்தப்பட்டது. தன்னம்பிக்கை என்ற ஒன்று தேவைப்படவில்லை. அப்படி சாதிக்க வேண்டிய அவசியமோ, அவசரமோ அமையவில்லை. வாழ்வு மிக இலகுவாக, எளிமையானதாக… இருப்பதைக் கொண்டு, தனக்கு அமைந்ததை வைத்து, வேலை செய்து, உண்டு, உறங்கிக் கழிக்கும் மனோபாவம் இருந்தது. எந்தக் கோட்டையையும் பிடித்துவிட வேண்டும் என்கிற லட்சியம் எதுவுமற்ற வாழ்க்கை அமைந்திருந்தது. வாழ்வு என்பதிலே தனிப்பட்ட மனிதன் கவனத்தில் கொள்ளப்படாமல், அரசனின் வாழ்வு மட்டுமே கவனத்தில் இருந்தது.
    தன்னம்பிக்கைக்குப் பதிலாக, வேறு பல நம்பிக்கைகளில் தமிழ்ச் சமுதாயம் பழகியிருந்தது. இறை நம்பிக்கை, குரு நம்பிக்கை, அரச நம்பிக்கை, கிரக நம்பிக்கை எனப் பல. வீரம் நிறைந்த சங்க காலத்தில் ‘அரச நம்பிக்கை’ மிகுந்திருந்தது. அரசனின் எண்ணங்களும், லட்சியங்களும் மக்களின் லட்சியங்களாயின. சங்கம் மருவிய காலத்தில், நீதிநெறிக் காலத்தில் ‘குரு நம்பிக்கை’ மிகுந்திருந்தது. ஆசான் காட்டிய வழி, ரிஷி, முனிவர் சொல்லும் வார்த்தைகளில் வாழ்க்கை அமைந்தது. பக்தி இயக்க காலத்தில் ‘இறை நம்பிக்கை’ மிகுந்திருந்தது. பிற்காலத்தில், அது மெல்ல மெல்ல கிரக நம்பிக்கையாகவும் மாறியது. நட்சத்திரங்களும், கோள்களும், ராகு, கேதுவும் மக்களைச் சுற்றி வளைத்துக் கொண்டன. ஆக, முற்காலத்திய தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை பற்றிய சிந்தனைகளும், பதிவுகளும் குறைவே.
    சங்க இலக்கியத்தில் சில வீரர்களிடத்தும், சில புலவர்களிடத்தும் தன்னம்பிக்கை வேறு வடிவத்தில் காணப்பட்டது. தன் வீரத்தின் மீதுள்ள நம்பிக்கையே தன்னம்பிக்கை. எத்தகைய படைவரினும், தனி ஒருவன் தாங்கி நிற்கின்ற வீரம் காணப்பட்டது.
    “வருவிசைப் புனலைக் கற்சிறை போல
     தனிஒருவன் தாங்கிய பெருமை தானும்”            (தொல். புறம். 65)
என்பதிலே அவனுடைய வீரநம்பிக்கை வெளிப்படுகிறது. யானையை அடக்குதலும், புலிப்பல் வேட்டையும் வீரநம்பிக்கையே. புலவர்களிடத்தில் ‘வித்யாகர்வம்’ எனப்படுகிற தன் புலமையின் மீதுள்ள நம்பிக்கையே தன்னம்பிக்கை.
    “எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே”            (புறம்.206)
என்ற ஒளவை பாடல் என்பதிலே புலமை நம்பிக்கை காணப்படுகிறது. ‘யான் ஓர் வாணிகப் பரிசிலேன் அல்லன்’ என்பதும் புலமை நம்பிக்கையே. மற்றபடி, எல்லாமே ஊழ்தான்.
    திருவள்ளுவர்தான் முதன்முதலில்,
    “ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றி
     தாழாது உஞற்று பவர்”                    (குறள். 620)
என்ற தன்னம்பிக்கையோடு முதலடி எடுத்து வைத்தார். ‘தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சிதன் ஃ மெய்வருத்தக் கூலி தரும்’, ‘முயற்சி திருவினையாக்கும்’, ‘அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்’ என்று ஊக்கமுடைமை, வினைத்திட்பம், ஆள்வினை உடைமை போன்ற அதிகாரங்களில் விளக்குகிறார். இப்படி ஊக்கத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தவேண்டிய சூழலில் திருவள்ளுவர் இருந்தார். சங்கம் மருவிய காலம் நாட்டில் குழப்பங்களும், அமைதியின்மையும் நிறைந்திருந்த காலகட்டம் என்றும், தமிழ் சிறப்பொழிந்து இருந்ததாகவும், பாலி மொழி வழக்கிலிருந்ததாகவும், அது தமிழர்களின் இருண்ட காலம் என்றும் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு வருகிறது. சோர்ந்திருந்த மக்களுக்கு நம்பிக்கையூட்ட முயற்சி, செயல் வலிமை, விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்லப்பட்டது. இந்தச் சூழலை, இந்த வாழ்வை மாற்ற இயலும் என்ற நம்பிக்கையை முதன்முதலில் திருக்குறள் விதைத்தது. எல்லா நீதி இலக்கியங்களும் ‘செயல் வலிமை’ பற்றிப் பேசின. வழிகாட்டும் குருவின் ‘சொல் வலிமை’ பற்றிப் பேசின.
    ஒளவையார் ஆத்திசூடியில் ‘ஊக்கமது கைவிடேல்’ என்றார்.
    சிற்றிலக்கியக் காலத்திலும் தன்னம்பிக்கை தேவைப்படவில்லை. எப்போதும் யாரையாவது அண்டிப் பிழைக்கிற சமூகத்தில் குறுநில மன்னர்களும், ஜமீன்தார்களும் நிறைந்திருக்க, தன்னம்பிக்கை பெரிதாகத் தேவைப்படவில்லை. அண்டிப் பிழைப்பதைத் தூக்கித் தூர எறிந்துவிட்டு, தன்னம்பிக்கையோடு புறப்பட்ட 20ஆம் நூற்றாண்டின் முதல் மனிதர் பாரதியார்.
    பாரதியாரிடத்திலிருந்தே தன்னம்பிக்கைச் சிந்தனை தொடங்குகிறது; பரவுகிறது. சங்கப் புலவர்களின் அதே ஆளுமையைப் பாரதியாரிடத்தில் காண முடியும்.
    “அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் ஃ அங்கோர் காட்டிலோர் பொந்திடை வைத்தேன் ஃ வெந்து தணிந்தது காடு ஃ தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும்  உண்டோ!’ என்று உறங்கிக் கிடந்த அத்தனைபேரின் மனக்காடுகளிலும் தன்னம்பிக்கைத் தீ மூட்டியவர். சோர்ந்து கிடந்தவர்களைத் தட்டியெழுப்பி, உற்சாகப்படுத்தி, வருந்தி அழுந்துபவர்களுக்கு ஆறுதல் சொல்லி, நடக்கிறவர்களுக்கு ஓடும் ஆற்றலைத் தந்து நிற்பவை பாரதியாரின் பாடல்கள்.
    “தேடிச்சோறு நிதம்தின்று ஃ பல சின்னஞ்சிறு கதைகள் பேசி ஃ மனம் வாடி மிக உழன்று ஃ பிறர் வாடப் பல செயல்கள் செய்து ஃ நரைகூடிக் கிழப்பருவம் எய்தி ஃ பல வேடிக்கை மனிதரைப் போலே ஃ நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?” என்று பாடியவர். ‘பல வேடிக்கை மனிதரைப் போலே, நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?’ என்ற வைர வரிகளே தமிழகத்தின் அத்தனை சாதனையாளர்களையும், கலைஞர்களையும் உருவாக்கின.
    ‘நல்லதோர் வீணை செய்தே, அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?’ என்று மயிலிறகாய் ஆறுதல் சொல்லி தன்னம்பிக்கையை மனதினில் விதைத்தவர். ‘மனதில் உறுதி வேண்டும்’ என்று பாடியவர். பாரதியாரின் ‘புதிய ஆத்திசூடி’யும் தன்னம்பிக்கையை வளர்த்தது. பாரதியாரின் காலகட்டத்தில் தன்னம்பிக்கையை மக்கள் மனதில் ஊன்றிய மற்றொருவர் விவேகானந்தர். இருவரும் வாழ்ந்த சமகால அரசியல் நெருக்கடிச் சூழல் தன்னம்பிக்கை குறித்து அவர்களைப் பேச வைத்தது. ஆயினும், அவர்களின் மறைவுக்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகே, அவர்தம் கருத்துக்கள் மக்களிடத்தில் பரவலாக்கப்பட்டன; மேற்கோள்களாக்கப்பட்டன.
    அறிஞர்களுடைய தன்வரலாற்று நூல்கள் தன்னம்பிக்கையைத் தந்தன. எல்லாத் தன்வரலாற்று நூல்களும் தன்னம்பிக்கை நூல்களே! அதனில், உ.வே.சா.வின் ‘என் சரித்திரம்’ குறிப்பிடத்தக்க ஒன்று. நாடு முழுவதும், நடந்து சென்று, தேடித் தேடிப் பதிப்பித்த அவரது வாழ்விலிருந்து, சற்றும் அயராத உழைப்பிலிருந்து தன்னம்பிக்கையைப் பெற முடியும். அடுத்தது, நாமக்கல் கவிஞரின் ‘என் கதை’ சுயசரிதை. காதுகள் மந்தமாகிப் போன நிலையிலும், உயர்நிலை அடைந்த அவரின் கதையிலிருந்து தன்னம்பிக்கையைப் பெற முடியும்.
    தன்வரலாற்று நூல்களிலேயே அதிகம் வாசிக்கப்பெற்ற, இந்தியா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய நூல்கள் இரண்டு. ஒன்று, மகாத்மா காந்தியின் ‘சத்திய சோதனை’. அது இந்தியா முழுவதும் தன்னம்பிக்கையையும், உள்ளொளியையும் பாய்ச்சியது. இரண்டாவது, அப்துல்கலாம் அவர்களின் ‘அக்னிச் சிறகுகள்’. தொடர் தோல்விகளால் தொடர்ந்த வாழ்க்கை, அக்னி ஏவுகணையாகப் பறந்தது. காந்தியின் தன்னம்பிக்கை மனதில் வேரூன்றி, உள்ளொளியாக மலர்ந்தது எனில், அப்துல்கலாமின் தன்னம்பிக்கை விண்ணில் சீறிப் பாய்ந்தது.
    தன்னம்பிக்கையைத் தூண்டும்படியாக, பலர் சுயமுன்னேற்ற நூல்களைப் படைத்தனர். எம்.எஸ். உதயமூர்த்தி, மெர்வின், சுவாமி சுகபோதானந்தா, வெ. இறையன்பு, சிந்தனைக் கவிஞர் கவிதாசன், மரபின் மைந்தன் முத்தையா (நமது நம்பிக்கை) முதலியோர் பலர் தன்னம்பிக்கை நூல்களைப் படைத்தனர்; படைக்கின்றனர். இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக அப்துற் றஹீம் அவர்கள் தன்னம்பிக்கை நூல்களை எழுதினார். ‘தமிழில் வெளிவந்த முதன் தன்னம்பிக்கை நூல்’ என்னும் அடைமொழியோடு 1948இல் அப்துற் றஹீம் அவர்களின் ‘வாழ்க்கையில் வெற்றி’ நூல் வெளியானது.
    சுதந்திரத்திற்குப் பிறகான வாழ்க்கையைப் பற்றிய மக்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் பொய்யாகிப் போன வேளையில், தன்னம்பிக்கையை மட்டுமே முன்வைத்து அதிகமான நூல்கள் வெளிவரத் தொடங்கின. ‘கூட்டு வாழ்க்கை சிதையத் தொடங்கிய நிலையில், இனி மற்றவர்களை நம்பிப் பயனில்லை’ எனும்பொழுதில், ‘உன்னையே நீ அறிவாய்’ என்பது முன்வைக்கப்பட்டது.
    மனிதனுக்கு மேலானவையாக இருந்த தெய்வம், அரசன், குரு, நாடு என அனைத்தும் கடத்தப்பட்டு, புகழ் சேர்ப்பதும், பணம் சேர்ப்பதும் முதன்மையான இடத்தைப் பெற்றன. அத்தனை தன்னம்பிக்கை நூல்களும் இவ்விரண்டையே முன்மொழிந்தன. ‘நீயும் சாதனையாளனாகலாம், நீயும் பணக்காரன் ஆகலாம்’ என்று பேராசை காட்டின.
    நீங்களும் வெல்லலாம், வாழ்க்கையில் வெற்றிக்கு ஏணிப்படிகள், தடைகளைத் தாண்டுங்கள், சிகரத்தை நோக்கி, உன்னால் முடியும், நீங்களும் சாதிக்கலாம் என்ற தலைப்புகளில் நூற்றுக்கணக்கான நூல்கள் வெளிவந்தன. இன்றும் வெளிவருகின்றன. ‘நீங்களும்’ என்பதில் உள்ள ‘உம்’ உளவியல் ரீதியாக மக்களைத் தொட்டது. இந்த ‘உம்’ இழிவு சிறப்பும்மையா?
    தன்னம்பிக்கை என்பது இன்று ஒரு ‘உற்பத்திப் பண்டம்’. உணவைப் போல, மருந்தைப் போல, என்றைக்கும், எல்லாருக்கும் தேவையான பொருள் ‘தன்னம்பிக்கை’. உற்பத்தியாளர்கள் தங்கள் தாய்மொழியில், வாய்மொழியில், கைமொழியில் உற்பத்திப் பண்டத்தைத் தயார் செய்கின்றனர். தன்னம்பிக்கை என்பது வியாபாரக் காந்தமா? (டீரளiநௌள ஆயபநெவ). தன்னம்பிக்கை வார்த்தைகள் ஆடுஆ எனப்படும் வணிகக் கூட்டங்களில் அதிகமாக விற்கப்படுகின்றன. ஒருவனுடைய ஆசையைத் தூண்டி, அதனைத் தன்னம்பிக்கையாக உருமாற்றி, அவனை ஏமாற்றும் தொழிலைக் கொண்டிருக்கின்றன.
    12 ஆண்டுகள் கல்வி பயின்று வெளியேறும் ஒரு மாணவனிடத்தில் தன்னம்பிக்கையை விதைக்க இயலாமல் போகிற கல்விமுறையையும், ஆசிரியர்களையும் கொண்டிருக்கிற நிலைதான் இன்று உள்ளது. கல்லூரியில் பட்டம் பெற்று வெளியேறுகிற ஒருவன் அல்லது ஒருத்தி அற்ப விஷயங்களுக்காகத் தற்கொலை செய்து கொள்வதை இன்று காண முடிகிறது. மதிப்பெண் குறைவோ, குடும்பத்தில் பிரச்சனையோ, பருவக் காதலோ, வகுப்பறை அவமானமோ…. எதுவாகினும் அவற்றைப் புறந்தள்ளிவிட்டு, வீறுநடை போட வேண்டாமா? இந்நாள் மாணவரும், முன்னாள் மாணவரும்! சமூகத்தில் ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறபோது, 1ஆம் வகுப்பு முதல் கல்லூரிப் படிப்பு வரை அவருக்குப் பாடம் எடுத்த அத்தனை ஆசிரியர்களும் குற்றவாளிகளே! தன்னம்பிக்கை என்பது புகழ் சேர்ப்பது, பணம் பெருக்குவது, அறிவியல் கண்டுபிடிப்பு, கலைச் சாதனை ஆகியவற்றைவிட ‘உயிர்காத்தல்’ இன்றியமையாதது. பாரதியை, விவேகானந்தரை, அறிஞர் பெருமக்களின் வாழ்க்கை வரலாற்றை, தமிழை, இலக்கித்தைப் படிக்க வைப்போம்! உயிர் காப்போம்!