Thursday, 6 October 2016

ஆல்பெர் காம்யுவின் ‘கொள்ளை நோய்’ - இருத்தலியக் குறியீட்டியல்

              “கோட்பாடுகள் அறிவியலில் எவ்வளவு ஆபத்தானவையோ வாழ்க்கையிலும் அவ்வளவு ஆபத்தானவை” – ரிஷார்ட்
     இருத்தலியல் கோட்பாடும் ஒருவகையில் ஆபத்தானதுதான். எந்தவிதக் கேள்விகளுமற்று, இயல்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதனிடத்தில் இருத்தலியல் எழுப்பும் கேள்விகள் ஆபத்தானவைதான். இப்படி வாழ்வதுதான் வாழ்க்கை என்று போலியாக நம்பிக்கொண்டிருப்பவனிடம் ‘இதுவல்ல வாழ்க்கை’ என்கிற ரீதியிலான கேள்விகள் அவனது இயல்புத்தன்மைக்கும், சமுதாயத்தின் இயல்புக்கும் ஆபத்தைத்தான் விளைவிக்கும். இருத்தலியல் வாழ்வை அர்த்தமற்றது என்றும், சட்டம், நீதி, நியாயம், அரசாங்கம், அமைப்பு, குடும்பம், நிறுவனம், திருமணம், கடமைகள், கட்டுப்பாடுகள், விதிகள் என அனைத்தும் அர்த்தமற்றவை என்றும் கூறுகிறது. தனிமனிதனின் சுதந்திரம் மட்டுமே இருத்தலியலில் முக்கியத்துவம் பெறுகிறது. நோபல் பரிசு பெற்ற ஆல்பெர் காம்யுவின் ‘கொள்ளை நோய்’ நாவல் இருத்தலியல் தன்மையையும், குறியீட்டியல் தன்மையையும் ஒருசேரக் கொண்டிருப்பதனால், அது இங்கு ‘இருத்தலியக் குறியீட்டியல்’ என்ற புதிய வகையில் ஆராயப்படுகிறது. இருத்தலியலின் பல கூறுகளில் ஒன்றான ‘வறட்டுத்தனமான சட்டங்கள், அலுவல்கள்’ மட்டும் இக்கட்டுரையில் கவனம் பெறுகிறது.
கொள்ளை நோய் - குறியீடு :
    கொள்ளை நோய், 1947-இல் வெளிவந்தது. வரலாற்று நாவல் என்ற பிரதி உருவாக்கப்பட்டாலும், இது புனைகதைப் பிரதிதான். 194… என்று ஆண்டு குறிப்பிடப்படாமலேயே நாவல் தொடங்குகிறது. இருபதாம் நூற்றாண்டின் அனைத்து மக்களுக்கும் பொருந்துகிற தன்மையிலேயே இந்நாவல் அமைக்கப்பட்டிருக்கிறது.
அமைதியாக, இயல்பாக இயங்கிக் கொண்டிருக்கக் கூடிய நகரம் ஓரான் நகரம். அங்கு முதலில் ஒரு எலி செத்து விழுகிறது. பின்பு பல எலிகள் செத்துவிழுகின்றன. தொடர்ந்து, பலப்பல எலிகள் வாசலிலும், படிக்கட்டுகளிலும், சமையலறைகளிலும், வராண்டாக்களிலும், தெருக்களிலும், கும்பல் கும்பலாகச் செத்து விழுந்து கொண்டேயிருக்கின்றன. மக்களுக்கு அங்கங்கே வீக்கங்களுடன் கூடிய காய்ச்சல் வருகிறது. அடுத்த 48 மணிநேரத்தில் இறப்பும் வந்துசேர்ந்து விடுகிறது. நோய் பரவுகிறது. ஓரான் நகரம் முழுவதும் ‘ஊரடங்கு உத்தரவு’ போல, அரசின் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது. நகரத்தின் கதவுகள் அடைக்கப்படுகின்றன.  மக்கள் நோயை எப்படிச் சமாளிக்கின்றனர்? மக்களை இந்நோய் எத்தகைய மனநிலைக்கு இட்டுச் செல்கிறது? என்பதும், இதனை எதிர்த்த மக்களின் போராட்டங்களும்தான் நாவல். இதுதான் குறியீடு. இங்கே எலிகள் செத்து விழுதலும், மக்களின் போராட்டமும் குறியீடு. ஒரு பிரச்சனை, மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கக்கூடிய பிரச்சனை. இருபதாம் நூற்றாண்டின் நவீன மனிதன் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சனை ஒன்று இங்குக் குறியீடாக முன்வைக்கப்படுகிறது.
போர்ச் சூழலில் வாழ்ந்த ஆல்பெர் காம்யு, இந்நாவலில் கொள்ளை நோயைப் ‘போராக’த்தான் குறிப்பிடுவதாக, இந்நாவலைப் பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த ச.மதனகல்யாணி அவர்கள் குறிப்பிடுகிறார். ஒவ்வொருவராகப் பலிவாங்கும் நோயைப் பொறுத்தளவிலும், நகரத்தின் கதவுகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் வருவதைப் போன்ற நடவடிக்கைகளைப் பொறுத்தளவிலும் இக்கூற்று சரியானததுதான்.  ஆனால், அதற்கு மட்டுமே இதனைப் பொருத்திப் பார்க்காமல், பலவழிகளில் இதனை விரித்துப் பார்க்கவும் வாய்ப்பிருக்கிறது. ஒவ்வொரு நாட்டைப் பொறுத்தும் இதன் குறியீட்டுத் தன்மை இடங்கொடுக்கும். தமிழ்ச் சூழலைக் கருத்தில் கொண்டால், எய்ட்ஸ் கிருமி நோய், ஆங்கிலக் கிருமி நோய், நவீன மேற்கத்தியக் கலாச்சார நோய், இன்னபிற… எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
வறட்டுத்தனமான சட்டங்கள் :
    இருத்தலியல் மனிதனுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறது. மனிதனுக்கு அப்பாற்பட்ட சட்ட திட்டங்கள், அலுவலகக் குறிப்புகள், ஆவணப் பதிவுகள், புள்ளி விவரங்கள் என எதனையும் ஏற்பதில்லை. மனிதனை வெறும் மனிதனாக மட்டுமே பார்க்க வலியுறுத்துகிறது. அவனது சாதி, மதம், மொழி, நாடு, பொருளாதார  அடையாளங்கள் அனைத்தையும், பெயரையும் கூட விட்டுவைக்காது துறக்கச் சொல்கிறது. மனிதனை அனைத்திலிருந்தும் பிரித்து தனியே நிறுத்துகிறது. ஏனெனில், அவை அனைத்தும் மனிதனின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகின்றன.
    மனிதன் தற்பொழுது எவ்வாறு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்றால், மனிதனை விட்டுவிட்டு, மற்ற அனைத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறான். இன்றைய மனிதன் போலிகளால் உருவாக்கப்பட்ட மனிதன். அவனுக்குள்ளேயே அந்நியமாக்கப்பட்ட மனிதன். மனிதன் மீது சிறிதும் அன்பில்லாத மனிதன். சட்டங்களுக்கும், விதிகளுக்கும் மட்டுமே முக்கியத்துவம் தரும் மனிதன் நகரம் முழுவதும் பரவும் கொடிய நோய்க்கு என்ன பெயர் வைக்கலாம் என்று கலந்தாலோசனையில் ஈடுபடுகிறான்.  இருத்தலியல் மனிதன் மட்டுமே மனிதனைக் காப்பாற்ற முன்வருகிறான்.
    நகரம் முழுவதும் பரவும் நோயின் தீவிரத்தைக் கண்ட மருத்துவர்கள், மாவட்டத் தலைவர்கள், அதிகாரிகள் உட்பட பலர் ஒன்றுகூடுகின்றனர். நோய் இதுவரை இல்லாத புதிய வகையாயிருப்பதால், அவர்களுக்கு முதலில்  அந்நோய்க்குப் பெயர் வைப்பதே முக்கியப் பிரச்சனையாயிருக்கிறது. அக்கூட்டத்தில், இருத்தலியல் மனிதன் மருத்துவர் ரியேக்ச் வெறுப்புற்று, “நோய் பரவும் வேகத்தை நோக்கும்போது, அதை நிறுத்தாவிட்டால், இரண்டே மாதங்களில் நகர மக்களில் பெரும்பகுதியை அது அழித்துவிடலாம். அதனால், அதைக் கொள்ளை நோய் என்கிறீர்களோ அல்லது தொற்றுநோய் என்கிறீர்களோ அது முக்கியமில்லை. நகரத்தின் பாதிப்பகுதியைக் கொல்லாமல் நீங்கள் தடுக்க வேண்டியதுதான் முக்கியம்” என்கிறார். (ப.63)
    புயல் மற்றும் சூறாவளி வருகிறது. அல்லது பூகம்பம் வருகிறது. அதற்கு காதரீனா புயல், லைலா புயல், தானே புயல் என்று பெயர் சூட்டிக் கொண்டிருப்பதில் கவனத்தைச் செலுத்துவதை விட்டுவிட்டு, பாதுகாப்பு நடவடிக்கைதான் முக்கியம். பெயர் வைத்தாலும், வைக்காவிட்டாலும் அழிவு நிச்சயம். ஆனால், மனிதனுக்கு ஆவணப் பதிவுகள்தான் முக்கியமாகிவிடுகிறது. இத்தகைய வறட்டுத்தனமான மனநிலையை இருத்தலியல் ஏற்பதில்லை.
    அரசாங்கப் பதிவுகள் மனிதனைப் பொறுத்தவரை அர்த்தமற்றவை. ‘அரசாங்கம்’ என்கிற நிறுவனத்திற்கு ‘தனிமனிதன்’ என்பவன் அர்த்தமற்றவன். சட்ட விதிகளுக்குட்பட்டு இயங்கும் அலுவல் முறையும், இறப்புப் பதிவு எண்ணிக்கைகளுமே அங்கு கவனம் பெறுகின்றன. அரசுசார் ஏற்பாடுகள், பதிவுகள், ஆவணங்கள் அனைத்தையும் தயார்படுத்திய பிறகே, பாதுகாப்புக் குழு மக்களை மீட்கும் நடவடிக்கைகளில் இறங்குகிறது. நகரம் முழுவதும் ‘கொள்ளை நோய்’ என்றும், கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. அதற்குள் பாதி நகரம் அழிந்துவிடுகிறது.
அர்த்தமற்ற சட்டங்கள் :
  நகரத்தின் கதவுகள் அடைக்கப்படுகின்றன. உள்ளேயே இருப்பவர்களுக்கும், உள்ளே வந்தவர்களுக்கும் வெளியே செல்ல அனுமதியில்லை. வெளியிலிருந்து உள்ளே வர அனுமதியுண்டு. பத்திரிகை நிருபன் ராம்பேர்ட் அந்நகரத்திற்கு வெளியிலிருந்து உள்ளே வந்தவன். அவனுக்கும் அந்நகரத்திற்கும் எந்தவிதச் சம்பந்தமுமில்லை. ஆனாலும் வறட்டுத்தனமான கட்டுப்பாடுகளால், நகரம் அவனையும் வெளிச்செல்ல அனுமதிக்கவில்லை. அவன் ‘வெளியாள்’ என்று அத்தனை அதிகாரிகளுக்குத் தெரிந்திருந்தும், சட்டத்தின் விதிகள் மட்டுமே அவர்களுக்கு முக்கியமாகப் படுகிறது. மருத்துவர் ரியேக்சிடம் ‘தடையில்லாச் (நோய் அறிகுறி) சான்றிதழ்’ வழங்குமாறு கெஞ்சுகிறான். ரியேக்ச், தான் ஒத்துழைத்தாலும், அதிகாரிகள் அதற்கு உடன்பட மாட்டார்கள் என்று கூறுகிறார். சிறிது நாட்களுக்குப் பிறகு, அவனைப் பற்றிய விவரக் குறிப்புகள் கேட்டு, விண்ணப்பப் படிவம் ஒன்று அவனிடத்தில் அளிக்கப்படுகிறது. ராம்பேர்ட் நம்பிக்கை பெறுகிறான். ஆனால், அவ்விவரக் குறிப்பு ‘முன்னெச்சரிக்கை’ நடவடிக்கைக்காக என்றறிந்ததும் அதிர்ச்சியடைகிறான்.
  “கொள்ளை நோய் வந்து இறந்துவிட்டால் ஒன்று, அவருடைய குடும்பத்திற்குத்தெரியப்படுத்தவும் இன்னொன்று, மருத்துவமனைச் செலவை நகரத்தின் கணக்கில் சேர்ப்பதா அல்லது அவரின் உறவினரிடமிருந்து பெறுவதா என்பதற்காகவும் இருக்கலாமென அவர்கள் விளக்கினர். அதனால், சமூகம் அவர்களைக் கண்காணிக்கிறது….. ராம்பேர்ட்டுக்கு இது மனஆறுதல் அளிப்பதாயில்லை. தலைமுழுகும் அளவுக்கு நிகழ்ச்சி நடக்கும்போது, ஓர் அலுவலகம் எவ்வாறு தன் கடமையைத் தங்குதடையின்றி இயக்குகிறது என்பதையும், அடுத்து அதனைப் பின்னிவரும் நிகழ்ச்சிகளுக்கான மேலிடங்களின் பொறுப்புகளை எவ்வாறு முன்னேற்பாடாக முனைந்து செய்கிறது என்பதையும் புரிந்துகொண்டான்.”(ப.123)
     அலுவலகங்கள் தாள்களின் மீதும், ஆவணங்களின் மீதும், புள்ளி விவரங்களின் மீதும் அக்கறை செலுத்துவதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது. இருத்தலியல் சமூகத்தின் இத்தகைய வறட்டுத்தனமான போக்கை எதிர்க்கிறது.
சமூகத்தின் கண்காணிப்பு :
  சமூகம் யாரையும் சுதந்திரமாக இருக்க விடுவதில்லை. அனைவரையும் எப்போதும் கண்காணிப்பிலேயே இருத்தியிருக்கிறது. சமூகத்தின் பலவிதமான நெருக்கடிகளுக்குள்ளாகும் கோட்டார்ட் என்பவன் தற்கொலை முயற்சியில் இறங்குகிறான். அவனுக்கு மனஆறுதலையும், மன ஒத்துழைப்பையும் நல்குவதை விட்டுவிட்டு, காவலதிகாரி அந்நிகழ்வை ஆவணப்படுத்துதலிலும், அது தொடர்பான கேள்விகள் கேட்பதிலும் அக்கறை கொள்கிறான். கோட்டார்ட் எரிச்சலடைகிறான். அமைதியைத் தேடுகிறான். ஆனால், இங்கு சட்டத்திற்குப் பதிவுகள்தான் முக்கியமாகப் படுகிறது. ஏற்கனவே மனவேதனையில் இருப்பவனைக் கேள்விகளால் குடைந்து, இப்படிப் பிழைத்ததற்குச் செத்தே போயிருக்கலாம் என்ற மனநிலைக்குச் சமூகம் அவனைத் தள்ளுகிறது.
    கோட்டார்ட் ஒரு சுதந்திர விரும்பி. சுமூகத்தின் முழுமையான விசாரிப்புகளிலிருந்து, பார்வையிலிருந்து வெளியேற விரும்புகிறான். ரியேக்ச் நலமா? என்று கேட்டதற்கு, “நலம்தான் என்று முணுமுணுத்தான். மற்றவர் எவரும் தன்னைப் பற்றிக் கவனம் செலுத்தாமல் இருந்தால் இன்னும் நலமாக இருப்பேன் என்று அமர்ந்து கொண்டே சொன்னான்.” (ப.70) கவனிப்பு, மற்றொரு மனிதனின் அருகாமை என்பது ஒருவகையில் மனிதனின் மீதான வன்முறை என இருத்தலியல் குறிப்பிடுகிறது. ழான் பால் சார்த்தரின் ‘நரகம் மற்றவர்கள்தான்’ என்கிற கோட்பாடு இங்கு உணரத்தக்கது. கோட்டார்ட் மற்றவர்கள் தன்னைக் கவனிப்பதை நிறுத்த வேண்டும் என்று கூறுகிறான். அது தனக்கு மனநெருக்கடியையும், சுதந்திரமின்மையும் ஏற்படுத்துகிறது என்கிறான்.
புள்ளிவிவர அக்கறை :
    எலிகளின் இறப்பு எண்ணிக்கை 300, 500, 1000, 6000 என்று கூடிக்கொண்டே போகிறது. சமூகம் கடந்த 10 நாட்களுக்குள் இறந்த எலிகளின் எண்ணிக்கை 6031 என்று ஆவணப்படுத்துகிறது. புள்ளிவிவரக் குறிப்பில் அக்கறை கொள்கிறது. சமூகத்தின் மந்தமான நடவடிக்கைகளால் எங்கும் மரண ஓலம் கேட்கிறது. முதலில் காவலாளி இறக்கிறார். தொடர்ந்து இறப்பின் எண்ணிக்கை கூடுகிறது. எங்கும் மரண ஓலம்…. இறுதியில் ஒரு சிறுவனின் இறப்போடு இறப்பு முடிகிறது. பாதிரியார் பனெலௌக்ச் கொள்ளை நோய் ஆண்டவனால் அனுப்பப்பட்டது என்கிறார். கொடியவர்கள் மனந்திருந்த, அவர்களின் ஆணவத்தை அழிக்க ஏவப்பட்டது என்றும், சீக்கிரமே இறைவனிடம் மன்றாடுங்கள்; இறைவனை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றும் என் மதப்பிரச்சாரத்தைத் தொடர்கிறார். மனிதன் இறந்துகொண்டிருக்கும் சூழ்நிலையில் மதத்தின் பிரச்சார அவலத்தை இங்குக் காணமுடிகிறது.    
அடைபட்ட நகரம் - பிறப்பு :
  அடைக்கப்பட்ட நகரத்திற்குள் மனிதன் சிக்கிக் கொண்டிருக்கிறான். வெளிச்செல்ல விரும்புகிறான். அதற்கு வழியில்லை. உள்ளே உயிரைத் தக்கவைத்துக் கொள்ள போராடுகிறான். வாழ்வு முழுவதும் போராட்டம் தொடர்கிறது. இதனைக் குறியீடாகக் கொண்டால், மனிதன் பிறப்பின் வழியாக வாழ்விற்கு, இந்த உலகத்திற்கு; நகரத்திற்கு வந்து சேர்கிறான். நகரத்தின் கதவுகள் பல காரணங்களால் அடைபட்டிருக்கின்றன. அவனது சுதந்திரம் பறிக்கப்படுகிறது. இந்த வரையறுக்கப்பட்ட வட்டத்திற்குள் அவன் வாழ வேண்டியிருக்கிறது. வாழ்விற்காகப் போராட வேண்டியிருக்கிறது. இதிலிருந்து வெளியேறி, யாருமற்ற, தனிமை நிறைந்த, அமைதியான வாழ்வை விரும்புகிறான். இறப்பு ஒன்றுதான் அதனைச் சாத்தியப்படுத்துகிறது.
போராட்டம் :
    எத்தகைய பிரச்சனை வந்தாலும், மனிதன் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்க வேண்டும். வெளிச்செல்ல வழியில்லை என்றாகிறபோது, ஒன்றுசேர்ந்து எதிர்க்கத் தலைப்படுகிறான். இறப்பிற்கு மாற்று இல்லை என்றான பிறகு, பிரச்சனையை எதிர்கொள்வதில் மாற்றுக் கருத்து இல்லை. வரலாற்றாசிரியனாகும் முயற்சியிலிருக்கும் தர்ரௌ, அதிகாரிகளை நம்பி பயனில்லை என்றும், தன் நண்பர்களைக் கொண்டு சுகாதாரக் குழுவொன்றைத் தொடங்குகிறான். அவனது குழு கொள்ளை நோயை எதிர்த்துக் களமிறங்குகிறது.
“இது ஒன்றும் கடினமானதல்ல. கொள்ளை நோய் இருக்கிறது. அதனிடம் போராட வேண்டும். அதிலிருந்து விடுபட வேண்டும். இதைத்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.” (ப.150) என்று அடிக்கடி சொல்லப்படுகிறது. மனிதனுக்கு நம்பிக்கை வளர்க்கப்படுகிறது. நாவல் முழுவதும் பிணங்கள் தொடர்கின்றன. இறப்பு பற்றிய தீவிர விசாரணை விளக்கப்படுகிறது. வாழ்வு அவலம் நிரம்பியது. இதனைக் கடந்து வெளிச் செல்ல வேண்டும் என்று குறிக்கப்பெறுகிறது. 
                                ***

No comments:

Post a Comment