முனைவர் நா. ஜிதேந்திரன்,
தமிழ் உதவிப் பேராசிரியர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,
திருநெல்வேலி – 627 011.
எழுத்தாளனின் கற்பனாசக்தியில் தோன்றுவது படைப்பு. கவிதையாகவோ, சிறுகதையாகவோ, நாவலாகவோ, நாடகமாகவோ படைப்பு வெளிப்படுகிறது. அது வாசகனைச் சென்றடையும்பொழுது, வாசகன் பொருள் கொள்ளும் முறை வாசகனின் தரத்திற்கேற்ப மாறுபடுகிறது. முரண் பொருள் கொள்ளும் நிலையும் ஏற்பட்டு விடுகிறது. வாசகர்கள் ஒன்றுசேர்ந்து படைப்பை எதிர்ப்பதும், எரிப்பதும், படைப்பாளனைத் தாக்குவதும்கூட நடைபெற்று விடுகின்றன. அத்தகைய நிகழ்வுகளையும், அவற்றிற்கு ஊடகங்களின் நிலைப்பாட்டையும், அவற்றை ஊடகங்கள் கையாளும் நிலையையும் இக்கட்டுரை ஆராய்கிறது.
படைப்பு என்பது முழுக்க முழுக்க தனிமனிதனின் மனம் சார்ந்தது. அறச் சீற்றமாகவோ, உணர்வுகளின் உந்துதலாகவோ, மனதிற்கான வடிகாலாகவோ, தனிப்பட்ட சொந்த வாழ்க்கையின் சோகங்கள் அல்லது தோல்வியிலிருந்து தப்பிக்கவோ அல்லது புகழ்பெற்ற எழுத்தாளனாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்காகவோ படைப்பு வெளிவருகிறது. எழுத்தாளன் தன் ஆழ்மன ஆசைகளை எழுத்தில் எழுதிப் பார்த்து மகிழ்ந்து கொள்ளலாம். வெளிப்படுத்த முடியாத கோபங்களைப் படைப்பில் வெளிப்படுத்தலாம். கண்டுணர்ந்த கதாபாத்திரங்களை அச்சில் கொண்டு வரலாம். எழுத்தாளன் பேசுவதற்கான விஷயங்களை அவனே தேர்ந்தெடுக்கிறான். ஆய்வு நோக்கில் ஒரு புனைவு நூலைப் படைக்கலாம். அறிவியல் நோக்கில் அப்புனைவைப் படைக்கலாம். காமத்தின் வெளிப்பாடாகக் கூட படைப்புகளைப் படைக்கலாம்.
எந்த ஒரு படைப்பிற்கும் அதன் ஒற்றை மையம் முக்கியமானது. எந்தப் புள்ளியில் வாசகனின் கவனம் குவிய வேண்டும் என்ற எண்ணுகிறானோ, அந்தப் புள்ளிக்கு வாசகன் வந்துசேர்ந்துவிட்டால், படைப்பு வெற்றி பெற்றதாகிறது. ஆனால், வாசகன் அந்த ஒற்றை மையத்தை விட்டுவிட்டு, பல நூறு பக்கங்களில் அல்லது பல்லாயிரம் வார்த்தைகளில் ஏதோ ஒன்றைப் பற்றிக் கொண்டு, அதனோடு தன்னை; தான் சார்ந்த சமுதாயத்தை; தன் மதத்தைப் பொருத்திப் பார்த்து, படைப்பாளனோடு சண்டையிடுகிற சூழல் உருவாகிவிடுகிறது. படைப்பாளனுக்கும் வாசகனுக்கும் இடையே ஏற்படுகிற உரசல் இன்றைய நாளில் மட்டுமல்லாது தொன்றுதொட்டு வரும் பழக்கமிது. படைப்பில் குறை என்று படைப்பாளனை அவமானப்படுத்துவதும், படைப்பாளனுக்கு உரிய அங்கீகாரத்தைத் தர மறுப்பதும் தொடர்ந்து நடைபெறுகின்றன.
சங்க இலக்கியத்தில் பெருஞ்சித்திரனார் என்னும் புலவர் அதியமான் நெடுமான் அஞ்சியைக் காணச் சென்றபோது, மன்னன் புலவரைக் காணாமலேயே, ‘இது கொண்டு செல்க’ என்று பரிசில் ஈந்தான் என்றும், அதற்குப் பொறுக்காத பெருஞ்சித்திரனார்,
“யான் ஓர் வாணிகப் பரிசிலேன் அல்லன்” (புறம். 208)
என்று கூறிச் சென்றதாகப் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது. புலமைக்கான அங்கீகாரம் மறுக்கப்படும்போது புலவர் சினம் கொள்கிறார்.
பெருஞ்சித்திரனார் வெளிமான் என்னும் மன்னனைக் காணச் செல்கிறார். அங்கும் அவர்க்குக் கசப்பான அனுபவம் ஏற்படுகிறது. அவன் புலவரைக் காணாமல், அவர் பாடலைக் கேட்காமல், தன் தம்பியிடம் ‘புலவர்க்குப் பரிசில் கொடுத்துவிடு’ என்று சொல்லிச் செல்கிறான். தம்பி இளவெளிமான் புலவரின் தகுதியை அறியாமல் சிறு பரிசொன்றைக் கொடுக்க, தன்னை வெளிமான் அவமானப்படுத்திவிட்டதாகப் புலவர் எண்ணுகிறார். அங்கிருந்து குமண வள்ளலைக் கண்டு, அவனைப் பாடி, யானையைப் பரிசிலாகப் பெறுகிறார். அந்த யானையைத் தன்னை அவமானப்படுத்திய வெளிமானின் ஊர்க்காவல் மரத்தில் கட்டிவைத்து, வெளிமானுக்குத் தான் ஈந்த பரிசாக அறிவிக்கிறார்.
“இரவலர் புரவலை நீயும் அல்லை
புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்” (புறம். 162)
என்று பாடிச் செல்கிறார். தனக்கு நேர்ந்த அவமானத்திற்குத் தானே பதிலடி கொடுக்கிறார்.
“கொங்குதேர் வாழ்க்கை அம்சிறைத் தும்பி” என்ற பாடலை இறையனார் பாட, பாடலில் பொருட்குற்றம் உள்ளது என நக்கீரன் குற்றம் சாட்டுகிறார். இறையனார் தானே முன்வந்து அதற்கான விளக்கம் தருகிறார். ஒளவையார் சிலசமயங்களில் அவமானப்படுத்தப்படுகிறார். புலவர்களே தன் அவமானங்களைப் போக்கிக் கொள்ள வீறுகொண்டு எழுகின்றனர். படைப்பையும், புலவர்களையும் எதிர்த்துவரும் செயல் காலங்காலமாக நடைபெற்று வருகிறது. படைப்பு ஃ பாடல் அங்கீகரிக்கப்பட ஒரு ‘அவை’ இருந்தது. இன்று அந்த ‘அவை’ இல்லை. தலைமைப் புலவர் ஏற்றுக்கொண்டால் ‘அவை’ ஏற்றுக்கொண்டதாக அர்த்தம். இன்று படைப்புக்கு ஆதரவாகச் சிலரும், எதிராகப் பலரும் ஒன்றுகூடும் நிலை உள்ளது.
மிகக் காத்திரமான எழுத்துக்கள் எந்தவிதமான எதிர்ப்புமின்றி அமுங்கிப் போய்விடும் சூழ்நிலை இருந்தது. சாதாரணமான எழுத்துக்கள்கூட மிகப் பெரிய எதிர்ப்பைச் சம்பாதிக்கக்கூடிய நிலையும் இருக்கிறது. பகுத்தறிவு, சாதி, கடவுள், பெண் விடுதலை தொடர்பாக பெரியார் முன்வைத்த கருத்துக்கள் மிகத் தீவிரமானவை. பெரியதொரு எதிர்ப்பு இருந்தது எனினும், படைப்பாளருக்கு ஃ கருத்தாளருக்குத் தனிப்பட்ட முறையில் சிக்கல் இருந்ததில்லை. அறிஞர் அண்ணாவின் ‘தீ பரவட்டும்’, ‘கம்பரசம்’ ஆகிய நூல்கள் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. இராமாயணம் எரிக்கப்பட்டது. மாறாக, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் ‘மருமக்கள்வழி மான்மியம்’ சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தியது.
ஆங்கிலேயர் காலத்தில் நாடகம் நடத்துவதற்குக் கடுமையான நெருக்கடி இருந்தது. பாரதியின் ‘கேலிச் சித்திரம்’ எதிர்ப்புக்குள்ளானது. பத்திரிகையே தடை செய்யப்பட்டது. புதுமைப்பித்தன் (துன்பக்கேணி), எஸ்.வி.வி. (நித்யகன்னி) போன்றோரது படைப்புகள் எதிர்ப்புகளைப் பெற்றிருக்கின்றன. ஜெயகாந்தனின் ‘அக்னிப்பிரவேசம்’ சிறுகதைக்கு எதிர்ப்பு உருவானபோது, அவர் அந்தச் சிறுகதையின் முடிவை மாற்றி, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என நாவலாகத் தொடர்ந்தார். இந்தக் காலங்களிலெல்லாம் மக்கள் அச்சு ஊடகங்கள் வழியாகவும் மட்டுமே எதிர்ப்பையும், ஆதரவையும் வெளிப்படுத்தினர். அச்சு ஊடகங்களும் படைப்பாளனுக்கு ஆதரவு அளித்தன அல்லது கண்டனம் தெரிவித்தன. படைப்பாளன் மீது கைவைக்கவில்லை.
ஏனெனில், சமூகப் பிரக்ஞையுள்ளவர்கள் படித்தவர்களாக இருந்தனர். பண்புள்ளவர்களாக, தனிப்பட்ட வாழ்வில் ஒழுக்கமும் உண்மையும் உள்ளவர்களாக இருந்தனர். ஆறுமுக நாவலர் வள்ளலாரின் பாடல்கள் ‘அருட்பா அல்ல… அது மருட்பா’ என்று எதிர்த்தார். ஆனாலும் ஒருவர் மற்றொருவர்மீது மரியாதை கொண்டிருந்தனர். அரசியலிலும், இலக்கியத்திலும் மாறுபாடு கொண்டவர்கள் தனிப்பட்ட சந்திப்பில் அன்பும், மரியாதையும் கொண்டிருந்தனர். மாற்றாரது கருத்துக்களை எதிர்த்தாலும், மாற்றாரை மதித்து நடந்தனர். வெகுஜனம் என்ற பெருவாரியான மக்கள் கல்வியறிவு அற்றவர்களாக இருந்தனர். கேள்வி கேட்கத் துணிவின்றி இருந்தனர். அரசியல், இலக்கியச் சண்டைகளை வேடிக்கை பார்த்தனர்.
காட்சி ஊடகம் வந்த காலகட்டம், முதல் தலைமுறைப் பட்டதாரிகள் உருவான காலகட்டம். தனியார் அலைவரிசைகள் பெருகிய காலகட்டம். அந்தந்த அரசியல் கட்சிகளுக்குச் சார்பாக, மதங்களுக்குச் சார்பாக, சாதியச் சங்கங்களுக்குச் சார்பாக, செய்தி அலைவரிசைகளும், நிகழ்ச்சி அலைவரிசைகளும் அமைந்தன. இணையமும் வந்து சேர்ந்தது. அதன் தொடர்ச்சியாக, அலைபேசிகளும், முகநூல் பக்கங்களும் வந்தன. ஒவ்வொன்றிலும் ஒரு ‘குழு’ உருவானது; உருவாக்கப்பட்டது. அந்தக் குழுக்கள் மொழி, சாதி, மாவட்டம், பள்ளி, கல்லூரிகள், கல்வித் துறைகள் சார்ந்து இயங்கின. சாதியப் பார்வையும், மதச் சார்பும், இனச் சார்பும் வெளிப்படையாகவே முகநூல் பக்கங்களில் நிரம்பின. தனிமனித வாழ்வில் ஒழுக்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, பணம் முக்கியத்துவம் பெறுதலும், அந்தரங்கப் பகிர்வுகளும் பெருகின. சினிமா நடிகர்கள் சார்ந்து, தனக்குப் பிடிக்காதவற்றை ஒரு குழு ‘வறுத்தெடுத்தது’. அதற்குப் பதிலடியாக, எதிர்க்குழு கேலி செய்தது. ஒட்டுமொத்த அசிங்கங்களும் மின்னணு ஊடகத்தில் நடந்தன. ‘இனக்குழு’ச் சமூகம் என்பது மாறி, ‘இணையக் குழு’ச் சமூகம் உருவானது. ஒவ்வொரு தனிமனிதனும் ஒரு ‘கருத்துப் புலம்பி’யாக மாறினான். இவற்றைக் காட்சி ஊடகங்களும், அச்சு ஊடகங்களும் நேரம் தந்து, பக்கம் ஒதுக்கிக் கொண்டாடித் தீர்த்தன. செய்தி அலைவரிசைகளுக்கு ‘செய்திப் பஞ்சம்’ ஏற்பட்ட நிலையில், சாதாரண நிகழ்வுகளைக் கூட ஊதிப் பெரிதாக்கின. அரைமணி நேரத்திற்கு ஒருமுறை மீண்டும், மீண்டும் அதையே ஒளிபரப்பி, மக்களைப் பரபரப்புக்குள்ளாக்கின.
இந்தச் சூழலில்தான் படைப்பைவிட்டு, படைப்பாளன் மீது கைவைக்கும் நிலை உருவாயிற்று. இதில் மிக அதிகமாகப் பேசப்பட்டவர் பெருமாள் முருகன். ‘மாதொருபாகன்’ என்றொரு நாவலை எழுதி, திருச்செங்கோடுவாழ் சமுதாய மக்களின் எதிர்ப்புக்குள்ளானவர். படைப்பில் குற்றம் என்று அவர் மிரட்டப்பட்டார்; அவமானப்படுத்தப்பட்டார்; ஊரைவிட்டு விரட்டப்பட்டார். அவருக்கு ஆதரவாக எழுத்தாளர் சங்கம் முன்நின்றது. வழக்கு பதியப் பெற்றது. காட்சி ஊடகங்களும், அச்சு ஊடகங்களும் போட்டி போட்டுக் கொண்டு இந்நிகழ்வை விவாதித்தன. எல்லா விவாதங்களுமே படைப்பில் சொல்லபட்ட செய்தி சரியா? தவறா? என்ற அளவில் விவாதிக்காமல், கருத்துச் சுதந்திரம் பற்றியே விவாதித்தன.
கரூரில் புலியூர் முருகேசன் அவர்களின் ‘பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்கு உண்டு’ என்ற சிறுகதைத் தொகுப்பு 2014-இல் வெளியானது. வீட்டிலிருந்து கடத்திச் செல்லப்பட்டு, புளியமரத்தில் கட்டிவைத்து தாக்கப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எதற்காகத் தாக்கப்பட்டார் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத காரணங்கள் இருந்தன. தந்தை, மகன், மருமகள் உறவைத் தவறாகச் சித்திரித்தாகவும், கொங்கு மக்களை அவமானப்படுத்தியதாகவும் சொல்லப்பட்டது. எழுத்தாளரோ, திருநங்கைகளைப் பற்றியே எழுதியிருக்கிறேன் என்றார். முகநூல் பக்கங்களில் வார்த்தைகளால் விளாசப்பட்டார். எழுத்தாளர் கூட்டியக்கம் உருவாக்கப்பட்டு, அது எழுத்தாளருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது.
எழுத்தாளர் சுஜாதா ஒரு தொடர்கதையில் குறிப்பிட்ட சாதியைப் பற்றி கதாபாத்திரங்களின் உரையாடல் வழியாக இழிவான முறையில் எழுதியதற்காக விமர்சிக்கப்பட்டார். வன்முறை நிகழ்ந்ததால், குமுதம் அந்தத் தொடரையே நிறுத்திவிட்டது. சாருநிவேதிதாவின் படைப்புகள் பலமுறை எதிர்ப்புக்குள்ளாகின.
புதுக்கோட்டையைச் சேர்ந்த எழுத்தாளர் துரை குணா, 2014-இல் ‘ஊரார் வரைந்த ஓவியம்’ என்ற குறுநாவலுக்காகப் பாதிக்கப்பட்டார். இந்நாவலில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பிற சாதியினர் நடத்தும் வன்முறை குறித்து விரிவாக எழுதினார். ஊரில் உள்ளவர்கள் சிலரின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்கள் சமூகத்திற்கும் அப்பாற்பட்டு, தவறான உறவு வைத்திருந்ததாகக் கதையில் எழுதியிருப்பதாகக் கூறப்பட்டது. ஊரைவிட்டு வெளியேற்றப்பட்டு, தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். அச்சுறுத்தல் ஏற்பட்டதால் பாதுகாப்பு கருதி மதுரை உயர்நீதிமன்றத்தை அணுகினார். அவரது தந்தை தாக்கப்பட்டார். வேறொரு தனிப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, 2016-இல் துரை குணா கைது செய்யப்பட்டார். அப்போதெல்லாம் அச்சு ஊடகங்ளும், காட்சி ஊடகங்களும் நிகழ்வை அச்சேற்றின; பரபரப்பாக விவாதித்தன. ஆனால், தங்களது நிலைப்பாட்டை முன்வைக்கவில்லை.
கொத்தமங்கலத்தில், 2012-இல் ம.மு.கண்ணன் அவர்கள் எழுதிய ‘கருவாட்டு ரத்தம்’ என்கிற கதைக்கு எதிர்ப்பு எழுந்தது. எழுத்தாளரின் வீடு தீவைத்து எரிக்கப்பட்டது. வழக்கம்போல், எழுத்தாளர் ஊரைவிட்டு வெளியேற்றப்பட்டார்.
சோலை சுந்தரபெருமாள் அவர்கள் 2011-இல் எழுதிய ‘தாண்டவபுரம்’ நாவல் சில ஆண்டுகளுக்குப் பிறகு சர்ச்சைக்குள்ளானது. ஆளுடையாபிள்ளை என்ற கதாபாத்திரம் (திருஞானசம்பந்தர்) மனோன்மணி என்கிற கணிகையுடன் உறவு கொண்டதாகவும், அவர்களுக்கு ஒரு மகவு பிறந்ததாகவும் இந்த நாவல் குறிப்பிட்டது. பக்தி வழிபாட்டிற்காகத் தெருவில் கூடும் பெண்களைத் திருஞானசம்பந்தர் நோட்டமிடுவார் என்றும் குறிப்பிட்டது. சைவ மடங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. தமிழ் ஹிந்து நாளிதழ் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியது. இணையதளப் பக்கங்களில் பல எழுத்தாளர்கள் இந்நாவலுக்குத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
நெல்லையில் கல்லூரிப் பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டிருந்த ஆண்டாள் குறித்த கருத்துக்கள் இந்து சமூகத்தினரின் எதிர்ப்பைப் பெற்றது. அதனால் அப்பாடப்பகுதி நீக்கப்பட்டது. அச்சு ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டன.
காட்சி ஊடகங்கள் அன்றைய பரபரப்பிற்கு, எழுத்தாளர் தாக்கப்பட்டதையும், கைது செய்யப்பட்டதையும் பேசினாலும், அவை அறத்தோடு செயல்படுவதில்லை. எழுத்தாளனைப் பாதுகாக்க எந்த முயற்சியையும் செய்வதில்லை. எதிர்க்கும் குழுவைக் கண்டிப்பதில்லை. தாங்கள் நடுவுநிலைமையோடு பிரச்சனையை அணுகுவதாகக் கூறிக் கொள்கின்றன. சகிப்புத் தன்மை, கருத்துச் சுதந்திரம், கருத்துப் பரிமாற்றம், அஹிம்சை முறை ஆகியவற்றை எதிர்க்கும் குழுவுக்கு உணர்த்த வேண்டும். மாற்றுக் கருத்து இருக்குமானால், அதனை எழுத்தாளருக்கு உணர்த்த வேண்டும். இருதரப்பிற்கும் இடையிலான பிரச்சனையைப் பேசினாலே போதுமானது என்கிற அளவிலே அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் இருந்து விடுகின்றன.
கண்டனம் தெரிவிப்பது அல்லது நிகழ்வை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி பரபரப்புக்குள்ளாக்குவது என்பனவற்றைத் தவிர்த்து, ஊடகங்கள் செயல்பட வேண்டும். எழுத்தாளருக்கு ஆதரவாகவோ அல்லது குழுவுக்கு ஆதரவாகவோ செயல்படாமல் கருத்துப் பரிமாற்றத்தை, கருத்துச் சுதந்திரத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இணையதளப் பக்கங்களும் மாற்றாரை மதித்துக் கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும்.
***

No comments:
Post a Comment