Thursday, 6 October 2016

புதுமைப்பித்தனும் ஆல்பெர் காம்யுவும்

    20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றிய இருபெரும் எழுத்தாளர்கள் பற்றி இங்கு ஒப்பிடப்படுகிறது. தமிழ்ச் சிறுகதை உலகில் மன்னன் என்று போற்றப்பட்ட புதுமைப்பித்தனையும், பிரெஞ்சு இலக்கிய உலகின் நோபல் பரிசு பெற்ற ஆல்பெர் காம்யுவையும் ஒப்பிட்டு இக்கட்டுரை அமைகிறது. புதுமைப்பித்தன் சிறுகதைகள், திரைப்படங்கள் என்று முயற்சி செய்திருக்கிறார். ஆல்பெர் காம்யு நாவல்கள், நாடகங்கள், தத்துவங்கள் என்று முயற்சி செய்திருக்கிறார். இரு படைப்பாளர்களின் படைப்புகளை நேரடியாக ஒப்பிடுவதைவிட, அவர்கள் வாழ்ந்த சூழல், அவர்களைப் பாதித்த நிகழ்வுகள், இருவரது குணாதிசயங்கள், அவர்களது வாழ்க்கைப் போராட்டங்கள், படைப்பாக்கச் சூழல், படைப்பின் அடிக்கருத்து ஆகியனவற்றை ஒப்பிடும்பொழுது அனைத்திலும் பொதுவான தன்மைகள் இருப்பதை அறியலாம்.
    புதுமைப்பித்தன் 1906-இல் பிறக்கிறார். காம்யு 1931-இல் பிறக்கிறார். புதுமைப்பித்தன் பிறந்த சூழல் இந்திய விடுதலைப் போராட்டம் தீவரமாக, ஒரு இயக்கமாக மாறத் தொடங்கியிருந்த காலகட்டம். அடிமைப்பட்டிருந்த இந்தியா ஆங்கிலேய ஆதிக்கத்திடம் போராடிக் கொண்டிருந்த காலகட்டம். காம்யு பிறந்த சூழல் அல்ஜீரியா பிரான்ஸ் தேசத்தின் ஆட்சியோடு இணைக்கப்பட்டிருந்தது. பிரெஞ்சுக் குடியுரிமை பெற்ற நாடாக இருந்தது. இவ்விருவரும் வாழ்ந்த சூழல் முதல் உலகப் போரும், இரண்டாம் உலகப் போரும் நடைபெற்ற சூழல். பிரான்ஸ் நாடு இரண்டாம் உலகப் போரால் நேரடியாகப் பாதிக்கப்பெற்றது. தமிழ்நாடு (இந்தியா) இரண்டாம் உலகப் போரில் மறைமுகப் பாதிப்பை மட்டுமே பெற்றது. இப்போர்களும், சுதந்திரப் போராட்டங்களும், இருவரது சொந்த வாழ்க்கையில்; சிந்தனைகளில் சில குறிப்பிட்ட தாக்கங்களை ஏற்படுத்தின. ஆனால், அவற்றினைப் புதுமைப்பித்தன் மிகத் தீவிரமான இலக்கியப் படைப்பாகவோ, அடிக்கருத்தாகவோ ஆக்க முயலவில்லை. ஆனால் காம்யு, போராட்டக் களத்தில் தான் பெற்ற இன்னல்களைப் படைப்பாக்கி விடுகிறார். காம்யு நேரடியாகப் பாதிக்கப்படுகிறார். புதுமைப்பித்தன் நேரடியாகப் பாதிக்கப்படுவதில்லை.
    காம்யுவின் ‘அந்நியன்’, ‘கொள்ளை நோய்’ நாவல்கள் இதற்குச் சான்று. ஆனால் புதுமைப்பித்தனிடத்தில் சுதந்திரப் போராட்டம் குறித்த ஒரு படைப்பையாவது அடையாளம் காண இயலவில்லை. புதுமைப்பித்தனால் எப்படி அந்தக் களத்தைத் தவிர்க்க முடிந்தது? அதுதான் படைப்பு மனதின் ரகசியம். ஜெயமோகன் இதனைக் குறிப்பிடும் பொழுது, “படைப்பாளி எதை எழுத வேண்டும், எதை எழுதக் கூடாது என்று அவனால் கூடத் தீர்மானிக்க முடியாது. அவன் ஆழ்மனமே அதைத் தீர்மானிக்கிறது. உதாரணமாக, புதுமைப்பித்தன் சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்து இருந்த காலத்தில் எழுதியவர்….. சுதந்திரப் போராட்டம் பற்றிய சாதகமான உணர்வுகள் ஏதும் அவர் படைப்பில் இல்லை. ஒரு படைப்பில் தியாகி ஒருவரை நக்கல் செய்வது தவிர்த்தால் அவர் அந்த வரலாற்றுக் கொந்தளிப்பைப் பொருட்படுத்தியதன் தடயமே அவர் படைப்புகளில் இல்லை.
    ஆனால் அவர் மறைந்து ஏறத்தாழ 50 வருடம் கழிந்து அவருடைய கடிதங்கள் இளைய பாரதியால் தொகுக்கப்பட்ட போதுதான் அதில், புதுமைப்பித்தனுக்கு சுதந்திரப் போராட்டத்தில் தீவிர ஈடுபாடு இருந்ததும், அதில் அவர் நேரடியாக ஈடுபட்டுச் சிறைசெல்ல விரும்பியதும் தெரிய வந்தது. அப்படியானால் ஏன் தன் படைப்புலகில் அவர் சுதந்திரப் போராட்டம் பற்றிப் பொருட்படுத்தவில்லை?
    படைப்புச் செயலின் மர்மம் அது. வாழ்நாள் பணியாக கதகளிக்குப் புத்துயிர் கொடுப்பதைச் செய்து முடித்த மலையாளக் கவிஞர் வள்ளத்தோள் எழுதிக் குவித்த பல்லாயிரம் வரிகளில் கதகளி பற்றி ஒரு குறிப்புக் கூட இல்லை. கடலின் அருகே பிறந்து, வாழ்நாளெல்லாம் கடற்கரையில் வாழ்ந்து, கடலில் மறைந்த மலையாள மகாகவி குமாரனாசானின் பல்லாயிரம் வரிகளில் கடல் பற்றிய ஒரு படிமம் கூட இல்லை. ஏன்?”1 என்று கூறுகிறார்.
    படைப்பாளியினுடைய இலக்கியப் பிரவேசமும், நோக்கமும் அதற்குரிய காரணங்களாக அமையும். புதுமைப்பித்தன் தன் படைப்புகளில் கேலியையும், கற்பனைகளையும், தொன்மத்தின் மீட்டுருவாக்கத்தையும் பயன்படுத்துகிறார். அவருடைய இலக்கியப் பார்வையே புதுமையாக இருக்கிறது. காம்யுவோ புற உலகத்தினால் மனிதன் பெறும் அவஸ்தையை மையப்படுத்தி, மனித விடுதலையை மையப்படுத்தி படைப்புகளைப் படைக்கிறார்.
    இருவரும் பிறந்த காலச்சூழலில், புற உலகம் இருவர் மீதும் ஏற்படுத்திய தாக்கங்களும், இருவரது வாழ்க்கைப் பயணங்களும் ஒரே நேர்கோட்டிலேயே செல்கின்றன. இருவரும் ஒருவரையொருவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. புதுமைப்பித்தன் உலகத்துச் சிறுகதைகளையும், உலக அரங்குகள் பற்றியும் அறிந்திருந்தாலும் காம்யு பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அந்நாட்களில் காம்யு புகழ்பெறவில்லை. அப்பொழுதுதான் காம்யு இலக்கியப் பிரவேசம் செய்கிறார். காம்யுவுக்கு இந்தியத் தத்துவங்கள் பற்றி பரிச்சயமிருந்தாலும், அவர் புதுமைப்பித்தனை அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அந்நாட்களில் புதுமைப்பித்தன் புகழ் பெறவில்லை. புதுமைப்பித்தனைத் தமிழ்நாடே பிற்காலத்தில்தான் போற்றத் தொடங்குகிறது.
    இருவரும் தங்கள் குடும்ப வாழ்க்கையில் பல இன்னல்களை அனுபவி;க்கின்றனர். பெற்றோரி;ன் அன்பு இருவருக்கும் பெரிய அளவில் கிடைக்கவில்லை. புதுமைப்பித்தன் தன்னுடைய எட்டாவது வயதில் தாயை இழக்கிறார். காம்யு தன்னுடைய எட்டாவது மாதத்தில் தந்தையை இழக்கிறார். இருவருக்கும் அந்த ஏக்கம் கடைசி வரையிலும் மனதை உறுத்தியபடியே இருக்கிறது. புதுமைப்பித்தனுக்கு, மாற்றாந்தாயிடம் பெற முடியாத அன்பும், காம்யுவுக்கு, போரில் தந்தையினுடைய திடீர் இறப்பால் ஏற்பட்ட அதிர்ச்சியினால் தன் நிலை மறந்த தாயிடம் பெற முடியாத அன்பும் இருவரையும் மேலும் ஏக்கத்தில் தள்ளுகின்றன.
    பெற்றோர்களை இழந்த நிலையில் இருவரது ஆழ்மனதும் வாழ்வைப் பற்றியும், புற உலகைப் பற்றியும் கேள்விகளை எழுப்புகின்றன. புதுமைப்பித்தன் இலக்கியத்திற்குள் நின்றுகொண்டு, கற்பனைகளில் புதிய புதிய உலகங்களைப் படைத்து நிம்மதி கொள்ள முயற்சிக்கிறார். காம்யு, தத்துவத்தில் நின்றுகொண்டு, இலக்கியத்தில் புற உலகம் பற்றிய விசாரணையில் இறங்குகிறார். அன்பு வறுமை மட்டுமல்லாது, பணவறுமையும், பத்திரிகைப் பணியும், காசநோய் போராட்டமும் இருவர்க்குமுள்ள பொதுவான தன்மைகளாகும்.
    இருவருமே வாழ வழியற்று, வாழ்வை நடத்தப் பொருளற்று, பணமில்லாது கஷ்டப்படுகின்றனர். வறுமை அவர்களைப் பிடித்தாட்டுகிறது. வாழும் நாட்களில் இருவரும் கொடுமையான அவல நிலையிலிருக்கின்றனர். புதுமைப்பித்தன், உணவுக்காக சொந்தக்காரர்களின் வீட்டில் தங்கி, சிலகாலம் ‘பிழைப்பு’ நடத்தியிருக்கிறார். காம்யு அல்ஜீர் பல்கலைக்கழகத்தில் மாதச் சம்பளமாக மிகவும் குறைவான தொகையைப் பெறுகிறார். வாழ்க்கை நடத்த அது போதாமையால், காம்யு டியூசன் எடுப்பதன் மூலமும், மாமியாரிடமிருந்து பணம் பெறுவதன் மூலமும் வறுமையை விரட்டப் போராடுகிறார்.
    புதுமைப்பித்தனும், காம்யுவும் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்காக, அப்போதைக்குப் பத்திரிகைப் பணியில் ஈடுபடுகின்றனர். பின்னர் அதுவே இலக்கிய உலகிற்கு வாசலாக அமைகிறது. பிழை திருத்தும் (ஃப்ரூப்) பணி, மொழிபெயர்ப்பு பணி, உதவி ஆசிரியர் பணி, ஆசிரியர் குழுவில் பணி என்று படிப்படியாக பத்திரிகைப் பணியில் முக்கிய இடத்தைப் பெறுகின்றனர். புதுமைப்பித்தன் முதலில் தினசரி, சுதந்திரச் சங்கு, மணிக்கொடி முதலிய பத்திரிகைகளில் கதைகளும், கட்டுரைகளும் எழுதுகிறார். பின்னர் ‘ஊழியன்’ -இல் உதவி ஆசிரியர் பணியில் இணைகிறார். மணிக்கொடி ஆசிரியர் குழுவிலும், தினமணி, ஆசிரியர் குழுவிலும் பணியாற்றுகிறார். ஆனாலும், வறுமை தீர்ந்தபாடில்லை. 1933 முதல் 1945 வரை பத்திரிகைப் பணியில் அல்லாடிக் கொண்டே இலக்கியங்களையும் படைக்கிறார். காம்யு 1938-இல் பத்திரிகைப் பணியைத் தொடங்குகிறார். 1940 -இல் ‘குடியரசு மாலை’க்கு ஆசிரியராகிறார். அதே ஆண்டில் ‘பாரீஸ் மாலை’க்குச் செயலாளராகப் பொறுப்பேற்கிறார். பின்னர் ‘போராட்டம்’ பத்திரிகையில் இணைகிறார். ஆனாலும், காம்யுவையும் வறுமை விட்டபாடில்லை.
    புகழ்பெற்ற இவ்விரு எழுத்தாளர்களின் அதீத துயரம் எதுவெனில் இருவருமே ‘காசநோயால்’ பாதிக்கப்பட்டவர்கள். அந்நோயின் தீவிரத்தால் வாழ்வில் பல ஆண்டுகள் அதனுடன் போராடியவர்கள். புதுமைப்பித்தனுக்கு இளவயதிலிருந்தே இருமல் தொல்லை இருக்கிறது. அவர் உட்பட யாரும் அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இறுதியில் அது தீர்க்க முடியாத பெரும் நோயாக மாறிவிடுகிறது. காம்யுவுக்கு 17 வயதில் காசநோயின் பாதிப்பு ஏற்படுகிறது. ‘ஆர்டிபிஷியல் நிமோதெரக்ஸ்’ சிகிச்சை செய்யப்படுகிறது. “ஒரு ஊசி மார்பைத் துளைத்து நுரையீரலைத் துளைக்கும். அப்போது நுரையீரலில் சேர்ந்து இருக்கும் தண்ணீர் வெளியேறி நுரையீரல் சுருங்கும். அதன்பிறகு காசநோய் மெல்ல மெல்லக் குறையத் தொடங்கும். ஒரு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இப்படிச் செய்தார்கள்.”2 இருவரும் இருமல் தொல்லையோடு, காசநோயோடு போராடியபடியே இலக்கியங்களைப் படைக்கின்றனர். 
    ‘ராஜமுக்தி’ படத்திற்குக் கதை-வசனம் எழுதுவதற்காக, புனா செல்கிற புதுமைப்பித்தன், மூன்று மாதத்திற்குள் ‘படுக்கை’ நிலைக்குத் தள்ளப்படுகிறார். புனாவிலிருந்து திரும்புகிற பொழுது, இயல்பாகவே மெலிந்த தோற்றம் கொண்ட அவரது உடல் அப்பொழுது மேலும் சுருங்கி, “விறகுக் கட்டை போல் முண்டும் முடிச்சுமாக வெளியே துருத்தித் தோன்றிய எலும்புக் கூட்டம்தான் மிச்சம். ‘என்புதோல் போர்த்த உடம்பு’ என்பார்களே, அது வார்த்தைக்கு வார்த்தை உண்மை. அதில் சதைக்கு இடமே கிடையாது. தாடி வளர்ந்து முகத்தை விகாரமாக்கிக் கொண்டிருந்தது. இத்தனைக்கும் மேலாக ரத்தத்தையும் கபத்தையும் உதைத்து வெளித் தள்ளும் ஓயாத இருமல்; ரோகத்தின் கொடுமையால் உண்டாகும் ஜூரம்.”3 என்கிற நிலையில் வந்து சேர்கிறார். இறுதியில் 1948, ஜூன் 30-ஆம் நாள் புதுமைப்பித்தன் உயிர் துறக்கிறார். காம்யு தன் இறுதிக் காலம் வரையில் காசநோயோடு போராடினாலும், அவருடைய இறப்பு வேறொரு மர்மத்தில் முடிகிறது. 1960, ஜனவரி 4-இல் அவருடைய கார் மரத்தில் மோதி தூக்கியெறியப்பட்டு, அந்த இடத்திலேயே காம்யு இறக்கிறார். அது விபத்தா? அல்லது தற்கொலையா? என்பது இன்றுவரை புதிராகவே உள்ளது. ஏனெனில், வாழ்வின் துயரங்களுக்குத் தற்கொலையே தீர்வு என்று அவர் அடிக்கடி கூறுவார்.
    அன்பு வறுமை, பண வறுமை, காசநோய் போராட்டம் ஆகியன சேர்ந்து இருவரது படைப்புகளிலும் வாழ்வைப் பற்றிய விசாரணையை ஏற்படுத்துகின்றன. புதுமைப்பித்தன் பாணி எழுத்தில் அது அடியோட்டமாக, நம்பிக்கை வறட்சியாக அமைகிறது. அதே நம்பிக்கை வறட்சி, காம்யு பாணி எழுத்தில் அது வெளிப்படையாக, தத்துவப் பிரச்சினையாக மாறுகிறது. புதுமைப்பித்தன் எழுத்தில் கேலியும், கிண்டலும் இருந்தாலும் அதற்குள்ளாக இருக்கும் சோகம் அவரது படைப்புகளில் வெளிப்பட்டுவிடுகிறது. புதுமைப்பித்தன், “என் கதைகளில் பொதுத்தன்மை நம்பிக்கை வறட்சி. எதிர்மறையான குணங்கள் இலக்கியத்துக்கு வலகொடுக்குமா என்று கேட்கலாம். அது ஏற்பவர்களின் மனப் பக்குவத்தைப் பொறுத்ததேயொழிய, எதிர்மறை பாவத்தின் விஷயத்தன்மை பற்றியதல்ல.”4 என்கிறார். மேலும், புதுமைப்பித்தன் கதைகளைப் பற்றிக் கூறும்பொழுது, “வாழ்க்கை முள்ளில் சிக்கி ரத்தம் சிந்தும் ஒரு சோக இதயத்தின் குரல்களை இக்கதைகளில் கேட்கிறோம்.”5 என்று ரா.ஸ்ரீ.தேசிகன் கூறுவதாக வல்லிக்கண்ணன் குறிப்பிடுகிறார். ‘மகாமசானம்’ கதையில் நம்பிக்கை வறட்சி வெளிப்படையாகத் தெரிகிறது. ‘கயிற்றரவு’ கதையில் அது தத்துவப் பிரச்சினையாக வெளிப்படுகிறது.
    காம்யு நம்பிக்கை வறட்சியை ‘நோசஸ்’, ‘காலிகுலா’, ‘அந்நியன்’, ‘கொள்ளை நோய்’, ‘வீழ்ச்சி’ ஆகிய படைப்புகளில் வெளிப்படுத்துகிறார். புதுமைப்பித்தன் போலவே காம்யுவும் எழுத்துப் பணியை விரும்பிச் செய்கிறார். எழுதுவதிலும், புதுமையைப் படைப்பதிலும் அதிக ஆர்வம் கொண்டிருக்கிறார். ஆனால், இருவரும் எழுதுகிற முறை வேறு மாதிரியானது. புதுமைப்பித்தன் அசுர வேகத்தில் எழுதுகிறார். திருத்தமே இல்லாமல்; நிறுத்தமே இல்லாமல், வேகமாக, தொடர்ந்து எழுதிச் செல்லும் பழக்கமுடையவர். காம்யுவோ திருத்தி திருத்தி, நிறுத்தி நிறுத்தி, யோசித்து, திட்டமிட்டு எழுதும் பழக்கமுடையவர்.
    இலக்கியத் தரத்தில் இருவரிடத்திலும் சமரசம் இல்லை. புதுமைப்பித்தன் எவ்வளவு வேகமாக எழுதினாலும், அதில் இலக்கியத் தரம் குறைவுபடாது. காம்யுவும் இலக்கியத் தரம் குறைந்துவிடக் கூடாது என்று திட்டமிட்டு எழுதுகிறவர்.
    புதுமைப்பித்தன் எப்பொழுதும் வெற்றிலை போடும் பழக்கமுடையவர். எந்நேரமும் அவருக்கு வெற்றிலை வேண்டும். காம்யு இரவுநேரங்களில் எப்போதும் மது அருந்தும் பழக்கமுடையவர். அவரவர் நாட்டுப் பழக்கவழக்கத்தின் அடிப்படையில் இது சாதாரணமானது. எனினும், இருவரும் இத்தகைய பழக்கங்களைக் கொண்டிருக்கின்றனர் என்பது இங்கு குறிக்கப்படுகிறது. புதுமைப்பித்தன் 42 வயதிலும், காம்யு 48 வயதிலும் மரணமடைகின்றனர்.
    இவ்வாறு, வௌ;வேறு நாடுகளில் வாழ்ந்த – ஆனால் ஒரே காலகட்டத்தைச் சார்ந்த இவ்விரு எழுத்தாளர்களின் வாழ்வில் பெரும்பாலான நிகழ்வுகள் மிகப் பொருத்தமுடையதாக அமைந்துள்ளன. கலைஞன் கடுமையான மனநெருக்கடியில் வாழ்கிறான் அல்லது நெருக்கடியில் இருப்பவன் கலைஞனாகிறான் என்பதை உணரமுடிகிறது. இருபெரும் கலைஞர்களும் அனுபவித்த துயரத்தை எண்ணுகையில், கண்களில் கண்ணீர் கசிவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

அடிக்குறிப்புகள் :
1.    ஜெயமோகன், நவீனத் தமிழிலக்கிய அறிமுகம், பக். 80,81
2.    வஸந்த் செந்தில், ஆல்பெர் காம்யு, ப.29
3.    ரகுநாதன், புதுமைப்பித்தன் வரலாறு, ப.91
4.    வீ.அரசு (தொ.), ‘முன்னுரை- என் கதைகளும் நானும்’, புதுமைப்பித்தன் கதைகள்.
5.    வல்லிக்கண்ணன், புதுமைப்பித்தன், ப.26

No comments:

Post a Comment