Tuesday, 4 September 2018

கடந்து செல்லும்போதெல்லாம்
முட்டைக் கூட்டில்
நிற்கும்
முட்டைகளின் பிரம்மாண்டம்
கண்களுக்கு நேரே.
கணம் நின்று
முட்டைகளோடு பேசிவிட்டுத்தான் செல்வேன்
எங்கோ பயணித்து
தட்டை சேர்ந்து
என் வீட்டு டஜன் கூட்டில் வந்து
அமைதியாக
என்னை வேடிக்கை பார்க்கும்.
தந்தைக் குருவியும்
தாய்க் குருவியும்
தற்செயலாய்
இறந்த பொழுதில்....
தற்செயலாய்த்தான்...
சின்னப் பெண்ணொருத்தி
திராட்சை அளவேயான
குருவி முட்டையை
எப்படி அடைகாப்பது
எப்படி குஞ்சுபொரிப்பதென்று
அங்கலாய்த்தாள்
ஒன்றும் செய்ய இயலாதென
கோபத்தில் சொன்னேன்
முட்டைக் கூட்டில்
குருவி முட்டையை வைத்துவிட்டுப் போனாள்
முட்டைகள்
அரைவேக்காடு ஆகலாம்
கூமுட்டையாகலாம்
ஆட்சியரிடம் மனு கொடுக்கலாம்
குருவிக் குஞ்சுக்கான கூடல்ல அது!
கூமுட்டையருகில் குருவி முட்டை!!!
ஏர் பிடிக்கப்படும். 
வாகனங்களுக்கு!
கொசுவின் 
நாக்கில் 
சூடு வைத்துக் கொண்டிருக்கிறேன்.
வேறென்ன செய்ய முடியும் !
வாசலுக்கு வந்து நின்றாளொருத்தி
மாவரைக்க வேண்டும் என்றாள்
எல்லோர் வீடுகளிலும்
ஏற்கனவே 
அரைத்த அதே மாவுதான்.
பெருஞ்சத்தத்துடன்
அரைக்கத் தொடங்கினாள்
அவள் கைவேலையும்
வாய்நேர்த்தியுமாய்...
அரை அரையென
இன்னும் சில்லாண்டுகள்
அரைப்பாள் போல...
பாம்புகள்
எப்படிச் செத்து விழும்
விழுமா!
நெடுஞ்சாண்கிடையாக..
சுருண்டு..
சுற்றம் சூழழுகையோடு..
புற்றுக்குள்ளேயே..
மரத்தில் தூக்கிட்டு...
நசுங்கி...
மும்முறை நிலம் கொத்தி..
தனித்து எனில்...?
நேற்று (பிப். 1, 2018) மாலை 'ஓங்கல்' நாடகப் பட்டறையின் 'சூழ்ஒளி' நாடகம் திருநெல்வேலி தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டு மையத்தில் நிகழ்த்தப்பெற்றது. எழுத்து, இயக்கம் : துரை நமசிவாயம்.
இதுவும் ஒரு 11 பேரின் ஆட்டம்தான். 11 பேர் ஆடினாலும் இரண்டு அல்லது மூன்று பேர்தான் ஆட்டத்தைத் தீர்மானிக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். நாடகத்திலும் அப்படியே. நடிகர்கள் மேற்கொண்டிருக்கிற பயிற்சியும் உழைப்பும் பாராட்டுக்குரியது.
சில கேள்விகளை முன்வைத்துத் தொடங்கி, 1 மணி நேரம் நாடகம் நடந்தது. நாடகத்தின் கேள்வி : காமத்தை அடக்க வேண்டுமா ? கூடாதா ?.
அடக்கு, அடக்கு என்பது சாமியார்களின் பதில். முடியாது என்பது மனதின் / உணர்ச்சிகளின் பதில்.
பார்வையாளர்களிடத்தில் பதிவு செய்ய விரும்பியது : சொல்கிறவன் அடக்கிவிட்டானா?.
நாடகச் சாமியார் நித்யானந்தாதான். அவர் ஒரு மாதிரி. மற்றபடி, வழக்கம்போலான சாமியார்தான். 'டிபிகல்' சாமியார். 'டிபிகல்' அரசியல்வாதி. அரசியலையும் ஆன்மிகத்தையும் (சாமியார்) இணைத்துக் கோடு போட்டிருக்கிறார்கள். இவருக்கு மூன்று சீடர்கள் (ஒரு பெண் உட்பட). அவருக்கு நான்கு குண்டர்கள். இவர்களுக்கு மத்தியில் நாடக மையவன். மையவனுக்குத்தான் காமச் சிக்கல். நாடகத்தின் முதல் காட்சியிலேயே இதுதான் சிக்கல் என்று சொல்லப்பட்டுவிடுகிறது. இறுதிக் காட்சியில் முடித்தும் வைக்கிறார்கள். தேடல்தான் வாழ்க்கையென்று. இன்பத்தின் தாலாட்டில் மிதப்பதாகக் காட்சி முடிவுறுகிறது.
மையவனுக்கு மாமாவும் இருக்கிறார். நண்பனாக; போராளியாக; மக்களின் குரலாக; உண்மையின் குரலாக.
மையவனாக நடித்த இளம் பொறியாளர், சுவாமிஜியாக நடித்த உடற்கட்டுப் பயிற்றுநர், அரசியல்வாதிகளாக நடித்த ஆசிரியர்கள், மாமாவாக நடித்த நிருபர் என அத்தனைபேரும் பாராட்டுக்குரியவர்கள்.... மேலும், தூய சவேரியார் கல்லூரி இளநிலை மாணவர்களும், பிறகு பாண்டிச்சேரியிலிருந்து வந்திருந்த பெண்ணும்.
நடிகர்கள் பெரும்பாலும் 'ஊர்ந்தே' வருகிறார்கள். பார்வையாளர்களுக்குப் புரிந்திருக்குமா? நாடகம் முடிந்தபின்னர்... அதைப் பற்றிய பேச்சைக் கேட்க முடிந்தது. உலகத் தோற்றம், உயிர்கள், இயக்கம் என்று காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். காம, அவமான உணர்ச்சிகளுக்கு உருவம் கொடுத்திருக்கிறார்கள்.
பொதுவெளியில், ஒரு காட்சியை; சில அசைவுகளைத் தவிர்த்திருக்கலாம். கல்லூரி மாணவர்களிடையே இந்நாடகம் நடத்தப்பட்டிருந்தால்... பல காட்சிகளுக்குக் கைதட்டல்கள் அதிகம் இருந்திருக்கும்.
நாடகத்தின் மையம் அல்லது கரு... இன்னும் தீவிரமானதாக, வேகமெடுக்கக்கூடியதாக இருந்திருக்கலாம். இந்த வெளி... இந்தச் சிக்கல் இளம்பருவத்தினருக்குரியது. திருமணமானால்.... எல்லாம் சரியாகிவிடும். இந்தக் கேள்வியே எழாது. கூடுதலாக : ஞானம், அமைதி, தேடலும் உண்டு.
இசை, பறை, ஒலிச்சேர்க்கை, ஒளிப்பாய்ச்சல் இனிது. பாடலில் குரல் (இயக்குநரின்) இனிது. நாடகம், நடிப்பு, பயிற்சி, ஒத்திகை, ஒப்பனை, அரங்கேற்றம் என்று இயங்குகிற இந்த நண்பர்களுக்கு.. இந்தக் குழுவிற்கு... ஓங்கலுக்கு. .. ஓங்கிப் பாராட்டுக்கள்.
ஓங்கல் ஓங்கட்டும்!!
இந்த வாரம் ஆனந்த விகடனில் (பிப்.21, 2018) அன்பன் (அன்பு ராஜ்) என்பவரின் வாழ்க்கையைப் படித்தேன். சாதாரணமாக வாசித்துக் கொண்டிருந்த எனக்குள் கொஞ்சம் கொஞ்சமாக அழுத்தம் கூடுவதை உணர்ந்தேன். முடிப்பதற்குச் சற்றுமுன், உடைந்து போய்விட்டேன். கண்களிலிருந்து நீர்வழிய... அதற்குமேல் அந்த இடத்தில் இருக்க முடியாமல்.. நூலகத்திலிருந்து வெளியேறிவிட்டேன். அவர் கதையை அவர் குரலிலேயே கேட்டதுதான் கூடுதல் அழுத்தம். அவருக்கு இப்படி, அப்படி என்று வேறொருவர் சொல்லியிருந்தால்கூட, இவ்வளவு வலி எனக்குள் இருந்திருக்காது என்றே நம்புகிறேன்.
படியுங்களேன்.
நீங்கள் உடைய வேண்டும் என்பதற்காக அல்ல..
வாழ்வின் மீதான நம்பிக்கைக்காக...
இதோ... வீடு வந்த பின்னும்.. கண்களை மறைத்துக் கொண்டிருக்கிறேன்.
அன்புடன்...
சிறையை(ச்) / சீர்திருத்திய / அன்பன். அந்தச் சிரிப்பில் ஞானம் இருக்கிறது.
இன்றொரு பல்லி
மலம் கழிப்பதைப் பார்த்தேன்
மகிழ்ச்சி
அருகில் சென்று
கைகுலுக்கத் தோன்றியது
வழக்கம்போல...
தள்ளியே நின்றுகொண்டேன்
தினமும்தான்
கழிக்கிறது
1.
நீ
அன்று மை தீட்டி
கொண்டு வந்திருந்தாய்.
உன் கண்ணாடிக் கண்களை
அத்தனை நெருக்கத்தில்
கெஞ்ச விட்டாய்.
இழுத்தும் விலக்கியும்
இருமுனைத் தாக்குதலில்
சரிந்து கொண்டிருந்தேன்.
என்னை
மாமா என்றழைத்தபோது ...
உள்ளூற வெட்கம்!
வீழ்ச்சி.
2.
வீட்டுப் பிள்ளைகள்
அழைத்ததைப் பார்த்து
சுற்றி நின்ற
அத்தனைப் பொடியன்களும்
என்னை
மாமா என்றழைத்தபோது...
உள்ளூர சிரிப்பு!
பெருமிதம்.
3.
இந்த மாமாவும்
அந்த மாமாவும்
பிடித்திருக்கிறது.
இன்னும் எத்தனை மாமாக்களோ.
அருகிலேயே
ஒரு கடல் இருக்கிறது.
கண்ணருகிலே
ஒரு மலை இருக்கிறது.
கையருகில்
ஒரு வெண்டாமரை இருக்கிறது.
ஆனாலும்
நானும் இங்குதான் இருக்கிறேன்.
நீ
அன்று
கழுத்தில் கறுப்புப் பாசிமணிகள் கோர்த்திருந்தாய்.
சிறுமி நீ.
உனக்கும் எனக்குமான முதல்
கோயில் பார்த்தோம்.
குழந்தைகள்
அட்சரம் பயிலும் நாளது.
நெல்மணிகளில்
நீ என் பெயரை எழுதினாய்.
அன்றென்
மீசையில் வெட்கம் இருந்தது.
உந்தன்
கன்னத்திலும் வெட்கம் இருந்தது.
அன்று நீ என்னோடிருந்தாய்
இல்லை இல்லை
நான் உன்னோடிருந்தேன்
இன்று நீ என்னோடு இல்லை
ஆம் ஆம்
நான் உன்னோடு இல்லை.
நானெதிர்பாரா கணத்தில்...
குறும்புற்களிருந்த
என் கன்னத்தில்
நீ ஈந்த முத்தம்
இப்போது என்னிடம் இருக்கிறது.
உன்னிடம் என்ன இருக்கிறது?
அன்பே!
என்றழைக்கலாமா!
(குறிப்பு: உள்பெட்டியில் வந்து 'குதிப்பாய்' என்று நம்புகிறேன்)
பானைக்குள்
பெருங்காற்று
நிரம்பி இருக்கிறது.
காற்று சும்மா விடுவதில்லை.
சுழன்று கொண்டேயிருக்கிறது
காற்று நிற்குமா!
கட்டாயப்படுத்த முடியுமா?
காற்றே வெளியேறு.
நீர் ஊற்றலாம்.
நீர் கிடைக்குமா ?
நீரும் சும்மா இருப்பதில்லை.
சுழன்றால் என் செய்வது?
நீரே வெளியேறு.
கற்கள் நிரப்பலாம்
கற்கள் பானை அறியுமா ?
கற்களின் மூச்சு பானையைத் தொடுமா?
பானையின் தவிப்பு கற்கள் அறியுமா ?
காற்றோ... நீரோ... கல்லோ...
பானையை உடைத்து விடுமா!
பானை என்றால் உடையத்தான் வேண்டுமா!
பானை உடையுமெனில்...
காற்று அலையும்.
நீர் சிந்தும்.
கற்கள் சிதறும்.
பானை உடையுமெனில்....
பானை தூளாகும்.
பானை பூக்களுமாகும்.
(மிருதன் படத்தில், ஷ்ரேயா கோஷலின் குழைவுக் குரலில்.... 'மிருதா மிருதா மிருதா' பாடல் மெட்டில் நான் எழுதிய வரிகள்: சும்மா ஒரு .... try. அதே மெட்டில் பாடிப் பாருங்களேன். )
நேற்று முடிந்தது நினைவில்லையா
இன்று விடிந்தது உணர்வில்லையா
நாளைப் பொழுதை நம்பவில்லையா
மனமே என்பது மாயப் பிழையல்லவா !
சூழ்ச்சிகள் எதுவும் உன்னைத் தடுப்பதுண்டா !
மந்திரம் அதனால் ஒரு மாற்றமுண்டா
தோழா....
இன்னும் ஒரு விடியல் வரும்
இன்றும் ஒரு இரவு வரும்
எப்போதாவது நிலவும் வரும்
கொஞ்சம் உணவும் உண்டு
கொஞ்சம் கனவும் உண்டு
நீலக் கடலின் வரை தொடலாம்
இன்னும் ஒரு வாழ்க்கை வரும்
இன்னும் ஒரு தெய்வம் வரும்
எப்போதாவது வரத்தைத் தரும்
காலப் பிழையைக் கடந்துவிடு
கோலம் கண்டு நகர்ந்துவிடு
உடலோடு பேசு
மெய்யே. ...... ஞானம்.

களந்தைப் பால்யம்

களக்காடு கிராமம் ... இன்று திருக்குறுங்குடி குலதெய்வக் கோயிலுக்குப் போய் விட்டுத் திரும்பும் வழியில்... அம்மா சொந்த ஊரைப் பார்த்துவிட்டுப் போவோமென்றார். 25 ஆண்டுகளுக்குப் பிறகு கிராமத்தில்....
இதோ இந்தக் குளத்தில்தான் தூண்டில் கொண்டு மீன் பிடித்தேன். தாமரைக்குளம். குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதையில் ருக்மணி விழுந்து சாவாளே... என் மன உருவகத்தில் இந்தக் குளத்தைத் தான் நினைத்துக் கொள்வேன்.
அதோ தெரிகிறதே வீடு. தாத்தாவுக்கும் அம்மாவுக்கும் பிணக்கு ஏற்பட்டு, அம்மாவை வீட்டைவிட்டு வெளியேறச் சொன்னபோது.. இந்த வீட்டில் வந்துதான் குடியிருந்தோம். என்னைக் கையில் பிடித்தபடியும், தங்கையை இடுப்பில் தூக்கிக்கொண்டும் அம்மா இந்த வீட்டிற்கு வந்தபோது, ஊரே தாத்தாவைக் கரிச்சுக் கொட்டியதாய் அம்மா சொல்வார்.
ஊருக்கு வந்திருந்த அப்பா இந்தக் கரையில்தான், ஓடும் பாம்பை ஓடிப் பிடித்து, தலைக்குமேல் சுழற்றி அடித்துக் கொன்று, ஒரேநாளில் ஹீரோவானார்.
குளத்தை ஒட்டிய மைதானத்தில், எங்கள் கிரிக்கெட் பிட்சில்.... இதோ இப்போது ஒரு வீடு இருக்கிறது. இந்தப் பிட்சில்... நான் அவுட் இல்லையென்று எங்கள் அணி லெக் அம்பயர் வடிவேல் அவுட் கொடுக்க மறுத்ததால். .. அடிதடி வரை போனது.
குளத்தோரத்தில் நடந்து வந்தபோது, பெருமாள் கோயில் வாசலில் வல்லயம் வைத்துக் கொண்டு ஒருவர் நின்றார். இந்த வல்லயத்தைப் பிடித்தபடிதான், மாமா திங்கு திங்கென்று அனுமார் சாமியாடுவார். பல்லால் தேங்காய் உரிப்பார்.
சற்று தூரத்தில் சாவடி இருந்தது. இப்போது வெற்றிடமாய் இருக்கிறது. இங்கு ஒரு கதவு கிடக்கும். கி.ராஜநாராயணனின் 'கதவு' கதையில் வரும் கதவு இந்தக் கதவாகத் தான் மன உறைவில் இருக்கும்.
சாவடிக்கு எதிரே ப்ளக்ஸ் வைத்திருந்தார்கள். போன வருடம் இறந்துபோன மாமாவின் நண்பரும், நான் அண்ணன் என்றழைக்கும் செல்வமண்ணன் செவ்வாய்க்கிழமை (27.03.2018) இறந்துவிட்டிருக்கிறார். அதிர்ச்சியோடு பார்த்தேன். ஊருக்குள் முதன்முதலில் ப்ரேக் டான்ஸ் ஆடிய அண்ணன். .. தளபதி ரஜினி ஸ்டைலில் ஒரு பக்க முகம் தெரியும்படி போட்டோ போட்டவர். அண்ணாந்து வட்டமாக புகை விடும் அண்ணன். ... கோவிலிலிருந்து வருவதால் இப்போது செல்ல முடியாது.
சாவடிக்கு எதிர்த் தெருவில்தான் "கும்+மியடி" பாஸ்கர் வேலை பார்த்த சோடா கம்பெனி இருந்தது. ஜெயகாந்தனின் 'உன்னைப் போல் ஒருவன்'-இல் வரும் ஐஸ் பேக்டரி இந்தச் சோடா கம்பெனியாக நினைவிலாடும்.
அப்படியே நேரே சென்றபோது.... அய்யோ இங்குதான் கௌதம ஆறு இருந்தது. ஐந்தாம் வகுப்பில் 'எங்கள் ஊர் ' கட்டுரையில் பாய்ந்தோடிய ஆறு. இந்த ஆற்றில்தான் வெள்ளம் வந்தது. வெள்ளத்தில் மரங்கள் வந்தன. வெள்ளம் வீடுகளுக்குள் வந்தது. வெள்ளம் வடிந்த பிறகே.. பாத்திரங்களைத் தேடி எடுத்து வந்தோம். பரிபாடலில் வைகையை நடத்தும்போதெல்லாம்.. இந்த ஆற்றைத் தான் விளக்குவேன். இப்போது மறுகரை மிகச் சமீபத்தில் இருக்கிறது. நான் பிரமித்தேனா... ஆறு சிறுத்ததா!
இந்த ஊரில் பலர் என்னை ஒருகணம் கூர்ந்து பார்க்கிறார்கள். பார்ப்பவர்களில்.... முத்துச்சாமியோ, தாமோதரனோ, கார்த்திக்கோ இருக்கலாம். லெட்சுமியோ, கோமதியோ இருக்கலாம். இங்குதான் பிரபஞ்சனாவும் இருந்தாள்.
என்னைவிட அதிகம் பரவசமுற்றவர் அம்மாதான். ஒரு குழந்தையை அழைத்துச் செல்வதுபோல.... கைபிடித்து நடத்திக் கொண்டிருந்தேன். அம்மாவும் குழந்தையாகத்தான் வந்தார். ஓரிடத்தில்.. இந்த இடத்தில் வீடுகளே இல்லேயே... என்றார். வேறிடத்தில்... இங்கு வீடுகள் இருந்துச்சே என்றார். குளத்தில் நீரைப் பார்த்ததும் குதூகலித்தார். குளத்துப் படித்துறையைக் காணுமென்றார். வேத கோயிலின் உயரம் பெரியதாகிவிட்டது என்றார். ஊரின் நீள, அகலங்களை அங்கலாய்த்துக் கொண்டே வந்தார். புனிதா அக்கா (அம்மாவின் தோழி) வீட்டிற்குப் போகலாமென்றேன். வேண்டாம், ஊரையே சுற்றுவோம் என்றார்.
எனக்கு என் கிராமம். அவருக்கு அவர் கிராமம்.
எந்தப் படைப்பில் எந்தக் கிராமத்தை வாசித்தாலும்.... அது எனக்கு 'களக்காடு' கிராமமே. சொந்தக் கிராமமே.
எப்போதாவது புகை கக்கும் அதிசயப் பெரிய கோயிலைப் பார்க்காவிட்டால் எப்படி !!!
பெருவெளியில்
பந்துகள் சிதறிக் கிடக்கின்றன
அந்த மஞ்சள் நிறப் பந்து ஏன்
மறைந்து நின்று 
ஒரு கண் கொண்டு
ஸ்மைலி செய்கிறது?
அந்த நீல நிறப் பந்து ஏன்
கவிழ்ந்த குவளை அருகே
ஏனோதானோவென்று கிடக்கிறது
உதை வாங்கி
பழுத்த பழுப்புப் பந்தும்
ஒருபக்கம் சப்பி நிற்கிறது
ஒரு காலத்தில்
சதுர டப்பாக்கள் நிறைய
கண்ணாடிப் பந்துகள் இருந்தன
இப்போது
அவள் கையிலிருக்கிற
அந்தப் பச்சைப் பந்து மட்டுமே
எப்போதும் நினைவில் உருள்கிறது
பந்துகள் மீதான விருப்பம்
இன்னும் தீர்ந்தபாடில்லை!
தன்போக்கில்
நின்றுகொண்டிருந்த
கொக்கொன்றின்
சிறகொன்றை
பாம்பொன்று 
கொத்த.
கொக்கு கொத்த
பாம்பு கொத்த
கொத்தலே வாழ்வு.
வலியோடு
பாம்பு நீருக்குள் நகர...
கொக்கு
கரையொதுங்கி சுவாசிக்கிறது. சிறகுதானே...
பாம்புக்கு
தக்காளி ஆகாதோ!
கொக்கின் கொத்தல் பிழையாகுமா?
தன்போக்கிலேயே
நிற்கும்.
அபிமன்யு மீது
நம்பிக்கை உண்டு.
அர்ஜூனனின் மகனல்லவா!
ஆண்களை
எப்படிச் சாய்க்க வேண்டுமென்ற
எல்லா வித்தைகளையும்
ஆற அமர முன்னிருந்து
அர்ஜூனனே
பாடம் எடுப்பான்.
அபிமன்யு
ஆண்களின்
எந்த வியூகத்திலும்
சிக்க மாட்டான்.
அர்ஜூனனின் யுக்திகளை
கருவிலேயே உரித்தவனாயிற்றே.
என் கவலையெல்லாம்
துரோகத்தால்
அபிமன்யு வீழ்ந்து விடுவானே என்பதுதான்.
அந்தக் கார் ஏன்
கட்டுப்பாட்டை இழக்கிறது?
அவர்களுக்குள் ஏன்
கருத்து வேறுபாடு ஏற்படுகிறது?
அங்கு ஏன் மழை பொழிகிறது?
நிலவு
தீப்பற்றி எரியத் தொடங்கிவிட்டது.
உனக்குள்
அந்தத் தாகம் இருக்கும் வரை
என் ஞாபகம்
உனக்குள்
வந்து கொண்டேயிருக்கும்.

எனக்குள்
அந்தத் தாகம் இருக்கும் வரை
உன் மீதான வெறுப்பு
எனக்குள்
வளர்ந்து கொண்டேயிருக்கும்.

நீயும் சொல்வாய்.
முல்லையும் குல்லையும்
செங்கழுநீரும் தாழையுமாய்ச் செய்த 
மாதவி மடலல்ல அது.

வயந்தமாலையோ 
கோசிகமாணியோ
சேர்ப்பித்த மடலல்ல அது.

ஓர் இளவேனில் காலத்தின் 
தேர்வு செய்த பொழுதில் 
காணிப்புப் புலங்கள் கடந்து 
நேரடியாக
கைகளில் திணிக்கப்பட்ட திருமுகம்.

எழுதியவள் மாதவி 
கண்ணகிதான் எழுதவில்லையே! 
கோசிகமானியிடனான
இரண்டாவது மடலின் சாயலில் 
சாதுர்யமாய். 

'ஹாய் டியர்' என விளித்து
'இமையும் விழியும் போல 
இணையும் நாள் எந்நாளோ'வென 
முடித்து வைக்கப்பட்டிருக்கிறது.

இடையில்
வழக்கமான 
காதல் ... இத்யாதி... இத்யாதி.. 

சாதுர்யத்தில் வீழ்பட்டு உருள்கிறது 
குழவி!

அந்த வீட்டிலேயே இருந்துகொள்
அந்த வெள்ளை  வேஷ்டியுடனேயே படுத்துக் கொள்


வாசலுக்கு ஆட்டோ வரலாம் 
உள்ளறைக்கே காரும் வரலாம் 


அந்த வீட்டிலிருந்தே
உன் இறுதி ஊர்வலம் புறப்படலாம்
அந்த ஊர்வலத்தில் 
நிச்சயம் 
பூக்கள் கசங்கித்தான் போகும்.  


அந்த வீட்டின் பத்திரம்
உன் பெயரில் இருக்கிறதாவென்பதை
ஒருமுறை உறுதிசெய்து கொள்


அந்த வீடுதானே 
எல்லாம்!
அந்தக் காடுகளில்தான்
பேன்கள் நேருக்கு நேர்
பேரிரைச்சலோடு
மோதிக் கொண்டன

துப்பாக்கிகளைத் தூக்கிக்கொண்டு
வெறிபிடித்து ஓடுகையில்
கன்னிவெடிகளில் கால் பதித்து
பேன்களும் வெடித்துச் சிதறின

எடுக்கப்பட்ட புலிகளோ
மழிக்கப்பட்ட சிங்கங்களோ
இப்போது இல்லை.

பேன் வனம்
பாலைவனமாகியிருக்கிறது.
பேன்கள்
சிங்கமெனச் சொல்லிக்கொண்டு
ஊர்வலம் போகலாம்!
எப்படித்தான்
அவனுக்கு மட்டும்
அருவியாய்க் கொட்டுகிறதோ!

எப்படித்தான்
அவளுக்கு மட்டும்
கரையான்கள் பூக்கின்றனவோ!

எப்படித்தான்
அவர்களுக்கு மட்டும்
இதயத்தில்
சொறிசிரங்கு பீடிக்கிறதோ!
இரண்டு தலையணைகளில்
எப்போதுமே ஒன்று
உருண்டு கீழே கிடக்கிறது
விடியலில்
என் தொப்பூழ் குழியில்
எப்போதுமே
சிறு வெண்பஞ்சு சிக்கிக் கிடக்கிறது
எனில்
கரப்பான் பூச்சிகள்
மேய்ச்சலை முடித்துவிட்டு
வீடு திரும்பியிருக்க வேண்டும்
மனம் விரும்புதே உன்னை
உன்னைக்கு 
பெண் வேடமிட்டு ஆடியவன்
'டீச்சரா'கிவிட்டான். 

கானாங் கத்தை மீனு வாங்கியில்
கொதிக்குது கொதிக்குது
குக்கருல கொதிக்குதுக்கு
கண்ணாடியைக் கழற்றிவிட்டு
இடவலம் தெரியாமல்
தன்போக்கிற்காடியவன்
ஐ.டி.யில் அமைதியாகிவிட்டான்

எனக்கு முன்வரிசையிலாடிய
வெள்ளைத் தோலி
சரோஜா சாமான் நிக்காலோவென்று
போயேவிட்டாள்

இது தஞ்சாவூரு மேளமென்று
என் இடத்தில் ஆடியவள்
இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி
கம்ப்யூட்டர் சென்டரில் சேர்ந்துவிட்டாள்

நெருப்போ கூத்தடிக்குதுக்கு
என் வலத்திலாடியவன்
ஆர்மியில் ஐக்கியமாகிவிட்டான்.

அடம்பிடித்தே
நடுவில் ஆடிய
நடன வேந்தன்
கார்பெண்டராகிவிட்டான்.

நானும்
அவ்வப்போது
துள்ளியிருக்கிறேன்...

ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் பெல்ஸ்
ஜிங்கிள் ஆன் த பெல்ஸ்க்கு
துள்ளியவன்..
கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சுவோடு....
ஊவ்வா ஊவ்வாவென்று ஆடியாச்சு.....

இப்போதும் சிலர்
மேடைகளில்
துள்ளிக் கொண்டிருக்கிறார்கள்...
👹கல் சூடாக இருக்கிறது...👹

யாருக்கு வாய்க்கும்
இப்படியொரு வீடு
எதிர் வீடு காலி
பின்வீடு காலி
இடப்பக்க வலப்பக்க வீடுகளும் காலி.

எங்கள் வீட்டில்
பேயிருந்தது.
பேய் வீட்டில்
நாங்கள் இருந்தோம்
நான் இருந்தேன்.

வியாழக்கிழமை அந்திப் பொழுதில்
வீடு பரவி
வியாபித்து
வெள்ளி இரவில் ருத்ர தாண்டவமாடி
உச்சம் ஏறி
சனி இரவில் தணிந்து இறங்கி
ஞாயிறு காலையில்
காணாமல் போகும் பேய்.

வீடு
முதல் மூன்று நாட்கள் எனக்கு.
மூன்று நாட்கள் பேயினுடையது.
ஞாயிறு ஒருநாள் விடுமுறை
வீட்டில்
நானுமிருக்க மாட்டேன்
பேயுமிருக்காது.

குலதெய்வக் கோயில் நடையில்
இரண்டு எலுமிச்சை தொட்டுருட்டி
வீட்டில் வைத்தால்
பேயோடுமென்றான் சாமியாடி.

இரத்தக் காவு கேட்கிறதென்று
சேவல் கழுத்தறுத்து
வீடு வாசல் தெளித்தான் சோளியுருட்டி.

எல்லாம் பார்த்தாயிற்று.

ஆவணி போனால்
பேய் போகுமென்றான்
வெள்ளை வேட்டி.

ஆவணியும் போயிற்று.
பேய் போனபாடில்லை.

நடு இரவில்
சமையலறை இருட்டு உருட்டலில்...
போய்ப் பார்த்தால்
பேய் இல்லை.
பிய்த்தெறியப்பட்ட பாதி தோசை
சமையலறைக் குப்பைப் பையில்.
தோசைக் கல்லைத்
தொட்டுப் பார்த்தால்...
கல் சூடாகத்தானிருக்கிறது.
அமைதியாக
வந்து படுத்துக் கொண்டேன்.

இப்போது பேய்த்தொல்லை இல்லை.
எதிர் வீட்டிலும்
பின் வீட்டிலும்
ஆட்கள் வந்துவிட்டார்கள்!