Tuesday, 4 September 2018

👹கல் சூடாக இருக்கிறது...👹

யாருக்கு வாய்க்கும்
இப்படியொரு வீடு
எதிர் வீடு காலி
பின்வீடு காலி
இடப்பக்க வலப்பக்க வீடுகளும் காலி.

எங்கள் வீட்டில்
பேயிருந்தது.
பேய் வீட்டில்
நாங்கள் இருந்தோம்
நான் இருந்தேன்.

வியாழக்கிழமை அந்திப் பொழுதில்
வீடு பரவி
வியாபித்து
வெள்ளி இரவில் ருத்ர தாண்டவமாடி
உச்சம் ஏறி
சனி இரவில் தணிந்து இறங்கி
ஞாயிறு காலையில்
காணாமல் போகும் பேய்.

வீடு
முதல் மூன்று நாட்கள் எனக்கு.
மூன்று நாட்கள் பேயினுடையது.
ஞாயிறு ஒருநாள் விடுமுறை
வீட்டில்
நானுமிருக்க மாட்டேன்
பேயுமிருக்காது.

குலதெய்வக் கோயில் நடையில்
இரண்டு எலுமிச்சை தொட்டுருட்டி
வீட்டில் வைத்தால்
பேயோடுமென்றான் சாமியாடி.

இரத்தக் காவு கேட்கிறதென்று
சேவல் கழுத்தறுத்து
வீடு வாசல் தெளித்தான் சோளியுருட்டி.

எல்லாம் பார்த்தாயிற்று.

ஆவணி போனால்
பேய் போகுமென்றான்
வெள்ளை வேட்டி.

ஆவணியும் போயிற்று.
பேய் போனபாடில்லை.

நடு இரவில்
சமையலறை இருட்டு உருட்டலில்...
போய்ப் பார்த்தால்
பேய் இல்லை.
பிய்த்தெறியப்பட்ட பாதி தோசை
சமையலறைக் குப்பைப் பையில்.
தோசைக் கல்லைத்
தொட்டுப் பார்த்தால்...
கல் சூடாகத்தானிருக்கிறது.
அமைதியாக
வந்து படுத்துக் கொண்டேன்.

இப்போது பேய்த்தொல்லை இல்லை.
எதிர் வீட்டிலும்
பின் வீட்டிலும்
ஆட்கள் வந்துவிட்டார்கள்!

No comments:

Post a Comment