களக்காடு கிராமம் ... இன்று திருக்குறுங்குடி குலதெய்வக் கோயிலுக்குப் போய் விட்டுத் திரும்பும் வழியில்... அம்மா சொந்த ஊரைப் பார்த்துவிட்டுப் போவோமென்றார். 25 ஆண்டுகளுக்குப் பிறகு கிராமத்தில்....
இதோ இந்தக் குளத்தில்தான் தூண்டில் கொண்டு மீன் பிடித்தேன். தாமரைக்குளம். குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதையில் ருக்மணி விழுந்து சாவாளே... என் மன உருவகத்தில் இந்தக் குளத்தைத் தான் நினைத்துக் கொள்வேன்.
இதோ இந்தக் குளத்தில்தான் தூண்டில் கொண்டு மீன் பிடித்தேன். தாமரைக்குளம். குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதையில் ருக்மணி விழுந்து சாவாளே... என் மன உருவகத்தில் இந்தக் குளத்தைத் தான் நினைத்துக் கொள்வேன்.
அதோ தெரிகிறதே வீடு. தாத்தாவுக்கும் அம்மாவுக்கும் பிணக்கு ஏற்பட்டு, அம்மாவை வீட்டைவிட்டு வெளியேறச் சொன்னபோது.. இந்த வீட்டில் வந்துதான் குடியிருந்தோம். என்னைக் கையில் பிடித்தபடியும், தங்கையை இடுப்பில் தூக்கிக்கொண்டும் அம்மா இந்த வீட்டிற்கு வந்தபோது, ஊரே தாத்தாவைக் கரிச்சுக் கொட்டியதாய் அம்மா சொல்வார்.
ஊருக்கு வந்திருந்த அப்பா இந்தக் கரையில்தான், ஓடும் பாம்பை ஓடிப் பிடித்து, தலைக்குமேல் சுழற்றி அடித்துக் கொன்று, ஒரேநாளில் ஹீரோவானார்.
குளத்தை ஒட்டிய மைதானத்தில், எங்கள் கிரிக்கெட் பிட்சில்.... இதோ இப்போது ஒரு வீடு இருக்கிறது. இந்தப் பிட்சில்... நான் அவுட் இல்லையென்று எங்கள் அணி லெக் அம்பயர் வடிவேல் அவுட் கொடுக்க மறுத்ததால். .. அடிதடி வரை போனது.
குளத்தோரத்தில் நடந்து வந்தபோது, பெருமாள் கோயில் வாசலில் வல்லயம் வைத்துக் கொண்டு ஒருவர் நின்றார். இந்த வல்லயத்தைப் பிடித்தபடிதான், மாமா திங்கு திங்கென்று அனுமார் சாமியாடுவார். பல்லால் தேங்காய் உரிப்பார்.
சற்று தூரத்தில் சாவடி இருந்தது. இப்போது வெற்றிடமாய் இருக்கிறது. இங்கு ஒரு கதவு கிடக்கும். கி.ராஜநாராயணனின் 'கதவு' கதையில் வரும் கதவு இந்தக் கதவாகத் தான் மன உறைவில் இருக்கும்.
சாவடிக்கு எதிரே ப்ளக்ஸ் வைத்திருந்தார்கள். போன வருடம் இறந்துபோன மாமாவின் நண்பரும், நான் அண்ணன் என்றழைக்கும் செல்வமண்ணன் செவ்வாய்க்கிழமை (27.03.2018) இறந்துவிட்டிருக்கிறார். அதிர்ச்சியோடு பார்த்தேன். ஊருக்குள் முதன்முதலில் ப்ரேக் டான்ஸ் ஆடிய அண்ணன். .. தளபதி ரஜினி ஸ்டைலில் ஒரு பக்க முகம் தெரியும்படி போட்டோ போட்டவர். அண்ணாந்து வட்டமாக புகை விடும் அண்ணன். ... கோவிலிலிருந்து வருவதால் இப்போது செல்ல முடியாது.
சாவடிக்கு எதிர்த் தெருவில்தான் "கும்+மியடி" பாஸ்கர் வேலை பார்த்த சோடா கம்பெனி இருந்தது. ஜெயகாந்தனின் 'உன்னைப் போல் ஒருவன்'-இல் வரும் ஐஸ் பேக்டரி இந்தச் சோடா கம்பெனியாக நினைவிலாடும்.
அப்படியே நேரே சென்றபோது.... அய்யோ இங்குதான் கௌதம ஆறு இருந்தது. ஐந்தாம் வகுப்பில் 'எங்கள் ஊர் ' கட்டுரையில் பாய்ந்தோடிய ஆறு. இந்த ஆற்றில்தான் வெள்ளம் வந்தது. வெள்ளத்தில் மரங்கள் வந்தன. வெள்ளம் வீடுகளுக்குள் வந்தது. வெள்ளம் வடிந்த பிறகே.. பாத்திரங்களைத் தேடி எடுத்து வந்தோம். பரிபாடலில் வைகையை நடத்தும்போதெல்லாம்.. இந்த ஆற்றைத் தான் விளக்குவேன். இப்போது மறுகரை மிகச் சமீபத்தில் இருக்கிறது. நான் பிரமித்தேனா... ஆறு சிறுத்ததா!
இந்த ஊரில் பலர் என்னை ஒருகணம் கூர்ந்து பார்க்கிறார்கள். பார்ப்பவர்களில்.... முத்துச்சாமியோ, தாமோதரனோ, கார்த்திக்கோ இருக்கலாம். லெட்சுமியோ, கோமதியோ இருக்கலாம். இங்குதான் பிரபஞ்சனாவும் இருந்தாள்.
என்னைவிட அதிகம் பரவசமுற்றவர் அம்மாதான். ஒரு குழந்தையை அழைத்துச் செல்வதுபோல.... கைபிடித்து நடத்திக் கொண்டிருந்தேன். அம்மாவும் குழந்தையாகத்தான் வந்தார். ஓரிடத்தில்.. இந்த இடத்தில் வீடுகளே இல்லேயே... என்றார். வேறிடத்தில்... இங்கு வீடுகள் இருந்துச்சே என்றார். குளத்தில் நீரைப் பார்த்ததும் குதூகலித்தார். குளத்துப் படித்துறையைக் காணுமென்றார். வேத கோயிலின் உயரம் பெரியதாகிவிட்டது என்றார். ஊரின் நீள, அகலங்களை அங்கலாய்த்துக் கொண்டே வந்தார். புனிதா அக்கா (அம்மாவின் தோழி) வீட்டிற்குப் போகலாமென்றேன். வேண்டாம், ஊரையே சுற்றுவோம் என்றார்.
எனக்கு என் கிராமம். அவருக்கு அவர் கிராமம்.
எந்தப் படைப்பில் எந்தக் கிராமத்தை வாசித்தாலும்.... அது எனக்கு 'களக்காடு' கிராமமே. சொந்தக் கிராமமே.
எப்போதாவது புகை கக்கும் அதிசயப் பெரிய கோயிலைப் பார்க்காவிட்டால் எப்படி !!!
No comments:
Post a Comment