நேற்று (பிப். 1, 2018) மாலை 'ஓங்கல்' நாடகப் பட்டறையின் 'சூழ்ஒளி' நாடகம் திருநெல்வேலி தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டு மையத்தில் நிகழ்த்தப்பெற்றது. எழுத்து, இயக்கம் : துரை நமசிவாயம்.
இதுவும் ஒரு 11 பேரின் ஆட்டம்தான். 11 பேர் ஆடினாலும் இரண்டு அல்லது மூன்று பேர்தான் ஆட்டத்தைத் தீர்மானிக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். நாடகத்திலும் அப்படியே. நடிகர்கள் மேற்கொண்டிருக்கிற பயிற்சியும் உழைப்பும் பாராட்டுக்குரியது.
சில கேள்விகளை முன்வைத்துத் தொடங்கி, 1 மணி நேரம் நாடகம் நடந்தது. நாடகத்தின் கேள்வி : காமத்தை அடக்க வேண்டுமா ? கூடாதா ?.
அடக்கு, அடக்கு என்பது சாமியார்களின் பதில். முடியாது என்பது மனதின் / உணர்ச்சிகளின் பதில்.
பார்வையாளர்களிடத்தில் பதிவு செய்ய விரும்பியது : சொல்கிறவன் அடக்கிவிட்டானா?.
நாடகச் சாமியார் நித்யானந்தாதான். அவர் ஒரு மாதிரி. மற்றபடி, வழக்கம்போலான சாமியார்தான். 'டிபிகல்' சாமியார். 'டிபிகல்' அரசியல்வாதி. அரசியலையும் ஆன்மிகத்தையும் (சாமியார்) இணைத்துக் கோடு போட்டிருக்கிறார்கள். இவருக்கு மூன்று சீடர்கள் (ஒரு பெண் உட்பட). அவருக்கு நான்கு குண்டர்கள். இவர்களுக்கு மத்தியில் நாடக மையவன். மையவனுக்குத்தான் காமச் சிக்கல். நாடகத்தின் முதல் காட்சியிலேயே இதுதான் சிக்கல் என்று சொல்லப்பட்டுவிடுகிறது. இறுதிக் காட்சியில் முடித்தும் வைக்கிறார்கள். தேடல்தான் வாழ்க்கையென்று. இன்பத்தின் தாலாட்டில் மிதப்பதாகக் காட்சி முடிவுறுகிறது.
மையவனுக்கு மாமாவும் இருக்கிறார். நண்பனாக; போராளியாக; மக்களின் குரலாக; உண்மையின் குரலாக.
மையவனாக நடித்த இளம் பொறியாளர், சுவாமிஜியாக நடித்த உடற்கட்டுப் பயிற்றுநர், அரசியல்வாதிகளாக நடித்த ஆசிரியர்கள், மாமாவாக நடித்த நிருபர் என அத்தனைபேரும் பாராட்டுக்குரியவர்கள்.... மேலும், தூய சவேரியார் கல்லூரி இளநிலை மாணவர்களும், பிறகு பாண்டிச்சேரியிலிருந்து வந்திருந்த பெண்ணும்.
நடிகர்கள் பெரும்பாலும் 'ஊர்ந்தே' வருகிறார்கள். பார்வையாளர்களுக்குப் புரிந்திருக்குமா? நாடகம் முடிந்தபின்னர்... அதைப் பற்றிய பேச்சைக் கேட்க முடிந்தது. உலகத் தோற்றம், உயிர்கள், இயக்கம் என்று காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். காம, அவமான உணர்ச்சிகளுக்கு உருவம் கொடுத்திருக்கிறார்கள்.
பொதுவெளியில், ஒரு காட்சியை; சில அசைவுகளைத் தவிர்த்திருக்கலாம். கல்லூரி மாணவர்களிடையே இந்நாடகம் நடத்தப்பட்டிருந்தால்... பல காட்சிகளுக்குக் கைதட்டல்கள் அதிகம் இருந்திருக்கும்.
நாடகத்தின் மையம் அல்லது கரு... இன்னும் தீவிரமானதாக, வேகமெடுக்கக்கூடியதாக இருந்திருக்கலாம். இந்த வெளி... இந்தச் சிக்கல் இளம்பருவத்தினருக்குரியது. திருமணமானால்.... எல்லாம் சரியாகிவிடும். இந்தக் கேள்வியே எழாது. கூடுதலாக : ஞானம், அமைதி, தேடலும் உண்டு.
இசை, பறை, ஒலிச்சேர்க்கை, ஒளிப்பாய்ச்சல் இனிது. பாடலில் குரல் (இயக்குநரின்) இனிது. நாடகம், நடிப்பு, பயிற்சி, ஒத்திகை, ஒப்பனை, அரங்கேற்றம் என்று இயங்குகிற இந்த நண்பர்களுக்கு.. இந்தக் குழுவிற்கு... ஓங்கலுக்கு. .. ஓங்கிப் பாராட்டுக்கள்.
ஓங்கல் ஓங்கட்டும்!!